'கொரோனா' நுண்கிருமி தொற்று 'கொரோனா' நுண்கிருமி தொற்று  

'கொரோனா' நுண்கிருமி தொற்று உலகளாவிய நெருக்கடி

கொரோனா நுண்கிருமியானது, நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சீனாவின் வுகான் (Wuhan) நகரில் தோன்றிய 'கொரோனா' நுண்கிருமி தொற்று நோய், உலகளாவிய நலவாழ்வுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

இத்தொற்றுக்கிருமி பரவி வருவது குறித்து, ஜெனீவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த, உலக நலவாழ்வு அமைப்பின் இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள், இத்தொற்றுக் கிருமிகள் மேலும் பரவாமல் இருப்பதிலும், இது தாக்கியுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், சீனா, மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறது என்று கூறினார்.

அதேநேரம், நலவாழ்வு அமைப்பு முறை, பலவீனமாக உள்ள நாடுகளில், இக்கிருமிகள் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுகின்றது என்றுரைத்த Tedros அவர்கள், சீனாவுக்குப் பயணம், சீனாவோடு வரத்தகம் போன்றவற்றை குறைக்க வேண்டுமென்று உலக நலவாழ்வு அமைப்பு பரிந்துரைக்கவில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையே, பல நாடுகள் சீனாவுடன் தொடர்புகொள்வதை தடைசெய்துள்ளன. மேலும் பல நாடுகள், சீன மக்களுக்கு எல்லைகளை மூடியுள்ளன. 

கொரோனா நோய்க்கிருமி தொற்றால், 24 மணி நேரங்களுக்குள் 39க்கும் அதிகமானோர் உட்பட, இதுவரை இந்நோய்க் கிருமியால் 213 பேர் இறந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

கொரோனா நுண்கிருமியானது, நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதுவரை இந்த நோயால் 7000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2019ம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாநிலத்திலுள்ள இறைச்சிக்கூடத்திலிருந்து இந்தக் கிருமி பரவியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2020, 15:15