தேடுதல்

Vatican News
ஒகாபி, ஒட்டகச்சிவிங்கி வகையினைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஒகாபி, ஒட்டகச்சிவிங்கி வகையினைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு 

விதையாகும் கதைகள்: அரியவகை உயிரினங்களுக்கு வாழ்வு

உயிரினங்களுக்கு உணவு கொடுத்து அன்பு காட்டினால், அது மனிதருக்குத் துணையாகவும் காவலனாகவும் இருக்கும்

மேரி தெரேசா - வத்திக்கான்

அன்று அந்த அரண்மனை, அரிய வகை விலங்குகள் மற்றும், பறவைகளின் ஒலிகளால் அதிர்வதைக் கண்டு, அவற்றைக் காண வெளியில் வந்தார் அரசர். புலவர் ஒருவர், இந்த உயிரினங்களுடன் பரிசுபெற வந்திருக்கிறார் என்பதை அறிந்து அரசர் ஆச்சரியப்பட்டார். முன் பகுதியில் அடர் பழுப்பு, வெள்ளைக் கோடுகளுடன் குதிரை போன்ற ஒரு விலங்கு, முதலில் அரசரின் கண்ணில் பட்டது. அது அரசரைக் கண்டதும், இரண்டு முறை சத்தமிட்டது. இது என்ன விலங்கு என்று கேட்டார் அரசர். இதுதான் ஒகாபி (Okapi) என்றார் புலவர். ஒகாபி என்பது ஒட்டகச்சிவிங்கி வகையினைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இதன் உடல் அமைப்பு பசுமாட்டைப் போன்றும், தலை அமைப்பு, மான் போன்றும், வாய் அமைப்பு ஒட்டகச்சிவிங்கியைப் போன்றும், கால் குளம்புகள் குதிரையைப் போன்றும் அமைந்துள்ளன. அடுத்து அரசர் மிகப் பெரிய உருவம் கொண்ட ஒரு பறவையைப் பார்த்தார். அதன் சிறகுகள் பழுப்பாகவும் சாம்பல் நிறமாகவும், கால்கள் மஞ்சள் நிறமாகவும் இருந்தன. அலகோ பச்சை நிறத்தில் இருந்தது. அருகில் இருந்த புலவர், இதுதான் டோடோ (dodo), இதனால் பறக்க முடியாது என்று சொன்னார். டோடோ, கடந்த நானூறு ஆண்டுகளுக்குமுன் அழிந்துபோன ஓர் அரிய பறவையாகும். அரசரின் ஆர்வம் மேலும் அதிகமானது. குட்டிகளுடன் இருந்த ஒரு விலங்கைக் கண்டார். “அரசே, இது ஓநாய்” என்று புலவர் சொன்னதும், அது பல்லைக் காட்டி பயமுறுத்தியது. அரசர் கொஞ்சம் அஞ்சினார்,  ஆனால் ஓநாயோ சிறிது முன்வந்து, அவரது கால்களை நக்கியது. “இது சாதுவானதா?”  என்று பயத்துடன் கேட்டார் அரசர். இல்லை, “ஓநாய்களிடம் நெருங்காமல் இருப்பதே நல்லது” என்றார் புலவர். இவ்வாறு ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே சென்றார் அரசர். “என் வாழ்நாளில் இந்த உயிரினங்களை எல்லாம் பார்த்ததே இல்லை! இவற்றை நான் வாங்கிக்கொள்கிறேன். இவை உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?” என்று கேட்டார் அரசர். “இவை எல்லாம் என் முன்னோர்களால் வளர்க்கப்பட்டவை. இவற்றை அழிவிலிருந்து அவர்கள் காப்பாற்றினர். என் தந்தை இவற்றை என்னிடம் ஒப்படைத்து, பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழியும் வாங்கிக்கொண்டார்” என்றார் புலவர். (இப்போது பூமியில் அழிந்துவிட்டதாகச் சொல்லப்படும் அரிய வகை உயிரினங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது). இதைக் கேட்டதும் அரசர், அந்த அரிய உயிரினங்களை விலை கொடுத்து வாங்கும் முடிவை மாற்றிக்கொண்டு, அந்த புலவர் குடும்பத்துக்கு அந்த உயிரினங்கள் வாழ்வதற்காக, ஒரு காட்டைத் தானமாக வழங்கினார். அதோடு, அந்தக் காட்டிற்கு, புலவரின் குடும்பத்தினர் தவிர, வேறு யாரும் செல்லக்கூடாது, அங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது, உயிரினங்களை வேட்டையாடக்கூடாது என்றும் உத்தரவிட்டார் அரசர். அதோடு, புலவருக்குப் பொற்காசுகளையும் வழங்கினார். அப்போது அரசரைத் தேடி வந்த ஒரு பாட்டி, “எனக்கு யாரும் இல்லை. இந்த ஓநாயைக் கொடுங்கள், இதை அன்பாகப் பழக்கிக்கொள்கிறேன். உணவு கொடுத்து அன்பு காட்டினால் அது எனக்குத் துணையாகவும் காவலாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்று சொன்னார். புலவரும் பாட்டிக்கு ஓநாய்க் குட்டியைக் கொடுத்தார். பாட்டி அன்று வளர்த்த அந்த ஓநாய்தான், இன்றுவரை நம் வீடுகளில் செல்லமாகவும் காவலனாகவும் வளர்க்கப்பட்டுவரும் நாய் என்று சொல்லப்படுகிறது. (உதவி - இந்து தமிழ் திசை)

06 January 2020, 15:01