தேடுதல்

மியான்மார் புத்தமத துறவி மியான்மார் புத்தமத துறவி 

விதையாகும் கதைகள்: மரண பயம், பாவம் செய்வதை தடுக்கும்

மரணம் எப்பொழுதும் என் கண் முன்னால் நின்று கொண்டிருப்பதாக நினைப்பதால்தான், நான் பாவங்கள் செய்வதில்லை என்று சொன்னார் துறவி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

துறவி ஒருவரிடம் ஆசி பெற வந்த ஒருவர், "சுவாமி தாங்கள் யாருடனும் கோபம் கொள்வது இல்லை, சண்டை போடுவதும் இல்லை. எப்போதும் அன்பும் அமைதியும் குடிகொண்டவராக உள்ளீர்கள். எப்படித் தங்கள் வாழ்க்கை மட்டும் சிக்கல் அற்றதாக உள்ளது, ஏன் எங்களால் மட்டும் அப்படி இருக்க முடியவில்லை" என்று கேட்டார். அதற்கு துறவி, "என் கதை இருக்கட்டும். இன்றைக்கு ஏழாம் நாள் நீ இறந்து விடப்போகிறாய்" என்றார். அத்துறவி முற்றும் அறிந்தவர் என்பதைத் தெரிந்திருந்த அந்த மனிதர், "கடவுளே என் தலைவிதி இப்படியா ஆக வேண்டும்" என்று அழுது புலம்பிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார். தன் மனைவி மக்களை அழைத்து, தனக்குப் பிறகு சொத்தினை அவர்கள் எப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். தான் செய்த பாவங்களை எல்லாம் நினைத்து அழுதார். ஆறுநாள் கடந்தது. ஏழாம் நாள், துறவியே அவர் வீட்டிற்கு வந்தார். "அன்பரே, நீ இந்த ஏழு நாட்களில் யார் யாரிடம் சண்டை போட்டாய், என்னென்ன பாவங்கள் செய்தாய், சொல்" என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "சாவு என் கண் முன்னால் நிற்கும்போது பாவம் செய்ய எனக்கு ஏது நேரம்" என்று பதில் சொன்னார். உடனே துறவி, "மரணம் எப்பொழுதும் என் கண் முன்னால் நின்று கொண்டிருப்பதாக நினைப்பதால்தான் நான் பாவங்கள் செய்வதில்லை. இப்பொழுது புரிகிறதா?. உனக்கு இதை விளங்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஏழு நாட்களில் மரணம் என்று பொய் சொன்னேன், கவலைப்படாதே. நல்லவனாக, நிம்மதியாக இரு," என்று சொன்னார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2020, 15:08