தேடுதல்

தந்தையும் மகனும் தந்தையும் மகனும் 

விதையாகும் கதைகள்: ஒத்துவராத இடத்தில் பொருத்தாதே

உன் மதிப்பை அறிந்தவர்கள், உன்னைப் பாராட்டுவார்கள். எனவே உன் மதிப்பை நீ அறிந்துகொள்

மேரி தெரேசா: வத்திக்கான்

படுத்த படுக்கையாய் கிடந்த தந்தை ஒருவர், தான் இறப்பதற்கு சில நாள்களுக்குமுன், தன்னருகில் மகனை அழைத்து, ஒரு கை கடிகாரத்தைக் காட்டி, இது உனது தாத்தா எனக்குக் கொடுத்தது. இது 200 ஆண்டுகளுக்கு மேலான பழமையுடையது. ஆனால், நான் இதை உன்னிடம் கொடுப்பதற்குமுன், நீ இதை, அந்த தெருவிலுள்ள கடிகார கடைக்குக் கொண்டுபோய், இதை நீ விற்க விரும்புவதாகச் சொல் என்றார். மகனும் அப்படியே செய்தார். தந்தையிடம் திரும்பி வந்த மகன், அப்பாவிடம், இது பழைய கடிகாரம், அதனால் ஐந்து டாலருக்கு வாங்கிக் கொள்கிறேன் என கடைக்காரர் சொன்னார் என்றார். அதைக் கேட்ட தந்தை, மகனே, இப்போது நீ காப்பிக் கடைக்குச் சென்று இதை விற்க விரும்புவதாகச் சொல் என்றார். மகனும் தந்தை சொல்படியே செய்து, திரும்பி வந்து நடந்ததைச் சொன்னார். அப்பா, காப்பிக் கடைக்காரரும், அங்கிருந்தவர்களும், இந்த பழைய பொருளை யார் வாங்குவது, சும்மா ஐந்து டாலருக்கு வாங்கிக்கொள்கிறோம் என்று அலட்சியமாகச் சொன்னார்கள் என்றார் மகன். அப்படியா, சரி இப்போது நம் ஊர் அருங்காட்சியகத்திற்கு இதனைக் கொண்டுபோய் அதைக் காண்பி என்றார். அங்குச் சென்று திரும்பிவந்த மகன், அப்பா, அவர்கள், இக்கடிகாரத்திற்குப் பதிலாக பத்து இலட்சம் டாலர் தருவதாகச் சொன்னார்கள் என்றார். அப்போது தந்தை மகனை அருகில் அழைத்து, இக்கடிகாரத்தை உன்னிடம் ஒப்படைப்பதற்குமுன், ஒரு நல்ல வாழ்வியல் பாடத்தை நீ கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். உன் மதிப்பை அறிந்து ஏற்கப்படும் இடத்தில் உன்னை இருத்து. உனக்கு ஒத்துவராத இடத்தில் உன்னை வைத்துவிட்டு, பின்னர் கிடைக்காத ஒன்றிற்காக சினங்கொள்ளாதே. உன் மதிப்பை அறிந்தவர்கள், உன்னைப் பாராட்டுவார்கள். உனக்குப் பொருந்தாத இடத்தில் நீ இருக்காதே. உன் மதிப்பை அறிந்துகொள் மகனே என்று சொல்லி கண் மூடினார், அந்த பாசமுள்ள தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2020, 14:39