தேடுதல்

Vatican News
ஞாயிறு வழிபாட்டில் கலந்துகொள்ளும் விசுவாசிகள் ஞாயிறு வழிபாட்டில் கலந்துகொள்ளும் விசுவாசிகள் 

விதையாகும் கதைகள் : மறக்கமுடியாத மறையுரை

"நீங்கள் இதுவரை கேட்ட மறையுரையை, நிச்சயம் மறந்துவிடுவீர்கள். ஆனால், நீங்கள் இப்போது பார்த்த மறையுரையை, ஒருபோதும் மறக்கமாட்டீர்கள்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

அந்த இளையவரின் பெயர் டேவிட். நீளமான முடி, கொஞ்சமாகத் தாடி, டி ஷர்ட், ஒரு சில ஓட்டைகளுடன் கூடிய  ஜீன்ஸ் பேன்ட், கால்களில் செருப்பு... இவையே, இளைஞர் டேவிட்டை அடையாளம் காட்டின.

அவர் பயின்றுவந்த கல்லூரிக்கு எதிரே ஒரு கோவில். அக்கோவிலுக்குச் செல்பவர்கள் அனைவரும், பழமை வாய்ந்த மரபுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அவர்கள் கோவிலுக்குச் செல்லும்போது, கோட்டு-சூட்டு, டை, ஷூ என்று, பாரம்பரிய உடைகளில் மட்டுமே செல்வர்.

ஒரு ஞாயிறன்று, இளையவர் டேவிட் அக்கோவிலுக்குள் நுழைந்தார். வழிபாடு ஆரம்பமாகி, மறையுரை நிகழ்ந்துகொண்டிருந்தது. கோவிலின் பின்பக்கம் அவர் நுழைந்ததும், பெஞ்சுகளில் அமர்ந்திருந்தவர்கள், சற்றும் விலகாமல், பெஞ்சுகளை நிறைத்திருப்பதுபோல் அமர்ந்ததால், டேவிடுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. எனவே, அவர் கோவிலின் முன்பக்கம் சென்றார். அவர் கோவில் நடுவே நடந்து சென்றதைப் பார்த்த பலர், சங்கடத்துடன் முகம் சுழித்தனர்.

கோவிலின் முன்பக்கம் சென்ற அவருக்கு, அங்கு பெஞ்சுகளில் அமர்ந்திருந்தவர்களும் இடம்தர மறுத்ததால், முதல் பெஞ்சுக்கருகே, டேவிட் தரையில் அமர்ந்தார். மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மறையுரை வழங்கிக் கொண்டிருந்த அருள்பணியாளர், பேசுவதை நிறுத்தினார்.

அவ்வேளையில், கோவிலின் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர், தன் கைத்தடியை ஊன்றியவண்ணம், கோவிலின் முன்பக்கம் சென்றார். அவர், இளையவரை, கோவிலின் பின்புறம் அழைத்துச்செல்லவோ, அல்லது, கோவிலைவிட்டு வெளியேற்றவோ அங்கு செல்கிறார் என்பதை, மக்கள் புரிந்துகொண்டனர். அப்பெரியவரின் கைத்தடி ஓசையைத் தவிர, கோவில் முழுவதும் அமைதி நிலவியது.

இளையவர் டேவிடுக்கு அருகே சென்ற பெரியவர், தன் கைத்தடியைத் தரையில் வைத்துவிட்டு, சிரமப்பட்டு, குனிந்து, அவ்விளையவருக்கு அருகே, அவரும் தரையில் அமர்ந்தார். இதைக்கண்ட மக்கள், குற்ற உணர்வுடன், அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பீடத்தில் நின்றுகொண்டிருந்த அருள்பணியாளர், "நீங்கள் இதுவரை கேட்ட மறையுரையை, நிச்சயம் மறந்துவிடுவீர்கள். ஆனால், நீங்கள் இப்போது பார்த்த மறையுரையை, ஒருபோதும் மறக்கமாட்டீர்கள்" என்று கூறி, தன் மறையுரையை முடித்தார்.

நாம் வாழ்கின்ற வாழ்வே, ஒரு சிலர் வாசிக்கும் நற்செய்தியாக அமையும்!

21 January 2020, 14:53