கடிகாரம் கடிகாரம் 

விதையாகும் கதைகள்: கனவு எப்படி இருக்க வேண்டும்?

எவ்வாறு பிராணவாயு நம் உடம்பிலுள்ள எல்லா அணுக்களிலும் இருந்தால்தான் நாம் நலமாக வாழ முடியுமோ, அதேபோல் நாம் அடைய விரும்பும் இலட்சியம், உடம்பிலுள்ள ஒவ்வோர் அணுவிலும் இருக்க வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

புகழ்பெற்ற மனிதர் ஒருவர், பிரமாண்டமான கடிகாரக் கடை ஒன்றை வைத்திருந்தார். அதைப் பார்த்த அந்த இளைஞருக்கு ஒரே வியப்பு. இவ்வளவு பெரிய, அழகான கடிகாரக் கடையா என்று சிந்தித்தான். அந்த கடைக்காரரிடம், ஐயா, நான் உங்களிடம் சிறிது நேரம் பேச வேண்டும் என்று கேட்டான் இளைஞன். அதற்கு அவர் சரிப்பா, உனக்கு ஒரு ஐந்து நிமிடம் தருகிறேன், என்ன பேச வேண்டும் என்றார். ஐயா, நானும் இந்த மாதிரி ஒரு பெரிய  கடிகாரக் கடை வைத்து, பெரிய செல்வந்தனாக ஆசைப்படுகிறேன், அதன் நுட்பங்களை எனக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கேட்டான் இளைஞன். அப்போது அவர், தம்பி, உனக்கு கனவு வருமா என்று கேட்டார். ஆமாம் ஐயா, நேற்றுக்கூட குலுக்கல் சீட்டில் இரண்டு இலட்சம் கிடைப்பதாக கனவு கண்டேன் என்றான். அப்படியா, தம்பி, உங்களுக்கு பாடத்தை ஆரம்பிப்பதற்கு இன்னும் நேரம் வரவில்லை. அதனால் நீங்கள் எனக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள், இப்போது கிளம்புங்கள் என்று அனுப்பிவிட்டார் பெரியவர். சரியாக ஒரு மாதம் சென்று அந்தக் கடைக்கு வந்தான் இளைஞன். அப்போது அவர், அவனிடம், இப்போது என்ன கனவு கண்டாய் என்று கேட்டார். ஐயா, என்னுடைய தாத்தா செத்துப்போனதாய், எனக்கு அவருடைய சொத்தை உயில் எழுதி வைப்பதாய் கனவு கண்டேன் என்றான். சரிப்பா, இன்னும் எனக்கு மூன்று மாதம் அவகாசம் தேவைப்படுகின்றது, புறப்படு என்று அனுப்பிவிட்டார் இளைஞனை. அவனும் மூன்று மாதம் சென்று அங்கு வந்தான். அப்போது அந்தப் பெரியவர் கேட்பதற்கு முன்னரே இளைஞன் முந்திக்கொண்டு, ஐயா, நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு பெரிய கடிகாரக் கடையில் வேலை பார்க்கிறேன். அங்கு ஒரு கடிகாரத்தைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியாமல் வேலையில் மூழ்கியிருந்தேன். என்ன ஆச்சரியம், திடீரென அந்தக் கடிகாரத்தின் முள்கள் தங்கமாகவும், எண்கள் எல்லாம் வைரமாகவும், கடிகாரமே தங்கமாகவும் மாறுகின்றன என்று விளக்கினான் இளைஞன். அப்போது அந்த பெரியவர், தம்பி, இப்படி உட்காரு, உனக்குப் பாடத்தை ஆரம்பிப்பதற்கு நேரம் வந்துவிட்டது என்று சொன்னார்.

ஆம். கனவு காண வேண்டும். பெரிய அளவில் கனவு காண வேண்டும். நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அது நம் இரத்தத்தில் ஒவ்வோர் உயிரணுவிலும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார் சுகி சிவம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2020, 15:33