தேடுதல்

Vatican News
சீனாவில் ஓர் ஆசிரியர் தன் மாணவருடன் சீனாவில் ஓர் ஆசிரியர் தன் மாணவருடன்   (AFP or licensors)

விதையாகும் கதைகள்: நம் அருகில் அதிகநேரம் இருப்பவர் யார்?

நம் வாழ்வில் உற்சாகப்படுத்துபவரை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், நம் அருகில் இருப்பவரும், நம்மால் உற்சாகம் பெற வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்று நள்ளிரவில், அந்த வாடகைக் காரில், மூவர் சென்னையிலிருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தனர். 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார், திடீரென்று நின்றது. கார் ஓட்டுனர், தனது இருக்கைக்கு அருகில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த நபரைத் தட்டி எழுப்பி, “சார், தயவுசெய்து பின்னாடி போய் உட்காருங்க, நீங்க தூங்கித் தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது” என்று சொன்னார். தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரும், பின் இருக்கையில் போய் உட்கார்ந்து, தொடர்ந்து உறங்கத் தொடங்கினார். அந்தக் காரில், தூக்கமயக்கத்தில் பயணம் மேற்கொண்ட மற்றொருவர், ஓட்டுனர் சொன்ன வார்த்தைகளில் விழித்துக்கொண்டார். அதற்குப்பின் அவரால் தூங்கவே முடியவில்லை. ஓட்டுனர் சொன்ன வார்த்தைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். பல நேரங்களில் நம் செயல்பாடுகள்கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் அமைகின்றன. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில், அதே சுறுசுறுப்பு, மெல்ல மெல்ல நம்மையும் தொற்றிக்கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது, அந்த சோம்பேறித்தனம் மெல்ல மெல்ல நம்மையும் ஒட்டிக்கொள்கிறது. இதனால்தான் ஓட்டுனர்கள், தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை போலும். எனவே நாம் ஒவ்வொருவரும் முன்னேற விரும்பினால், நம் பக்கத்தில் இருப்பவர் எப்படிப்பட்டவர்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா? என்று சிந்திக்க வேண்டும். நல்லது செய்யும்போது பாராட்டவும், அல்லாதது செய்யும்போது இடித்துரைக்கவும் கூடிய நல்ல மனிதர்களை நம் அருகில் வைத்துக்கொண்டால், வாழ்வில் வெற்றியடையலாம். நம் அருகில் உள்ளவர்களால், நாம் உற்சாகம் பெறுவதைப் போலவே, நம்மைப் பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்ற சிந்தனை மேலோங்க வேண்டும். எனவே எல்லாரையும் ஊக்கப்படுத்துங்கள். அப்போது உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள். (உதவி - முகநூல்)

13 January 2020, 15:02