தேடுதல்

டில்லியில் பெண்கள் முன்னிலை வகிக்கும் போராட்டம் டில்லியில் பெண்கள் முன்னிலை வகிக்கும் போராட்டம் 

டில்லியில் பெண்கள் முன்னிலை வகிக்கும் போராட்டம்

பெண்களால் துவங்கப்பட்ட ஷாஹீன் பாக் மறியல் போராட்டம், 40 நாள்களைக் கடந்து, இன்னும் தொடர்ந்து வருகிறது என்பதும், இப்போராட்டத்தில், இளையோர், முதியோர், என்று, இருபால் இனத்தவரும் கலந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெண்களால் துவக்கப்பட்ட ஓர் அமைதியான மறியல் போராட்டம், இந்தியாவை, கடந்த 45 நாள்களாக முடக்கியுள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இஸ்லாமியருக்கு குடியுரிமை வழங்காமல், ஏனைய மதத்தவருக்கு குடியுரிமை வழங்கும் வண்ணம், இந்தியாவின் நடுவண் அரசு வெளியிட்டுள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, 'இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர் அனைவரும் உடன்பிறந்தோரே' என்ற முழக்கத்துடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்தச் சட்டத்தை எதிர்த்து, ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை அடக்க, காவல் துறையினர்,  டிசம்பர் 15ம் தேதி, மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளை எதிர்த்து, டிசம்பர் 16ம் தேதி, புது டில்லியையும், அதன் கிளை நகரான நொய்டாவையும் (Noida) இணைக்கும் முக்கிய சாலையில், ஷாஹீன் பாக் (Shaheen Bagh) என்ற இடத்தில் துவங்கிய ஒரு மறியல் போராட்டம், நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்களால் துவங்கப்பட்ட இந்த மறியல் போராட்டம், 40நாள்களைக் கடந்து, இன்னும் தொடர்ந்து வருகிறது என்பதும், இப்போராட்டத்தில், இளையோர், முதியோர், என்று, இருபால் இனத்தவரும் கலந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, சனவரி 20, கடந்த திங்களன்று, கொல்கத்தா நகரில், கிறிஸ்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் என்றும், "நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள்" என்பது, இந்தப் போராட்டத்தின் முக்கிய கருத்தாக அமைந்தது என்றும், ஆசிய செய்தி கூறுகிறது.

நாடெங்கும் நிலவிவரும் போராட்டங்களையும், இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளையும் கருத்தில் கொண்டு, நடுவண் அரசு விளக்கம் அளிப்பதற்கு, உச்சநீதி மன்றம், கால வரையறை வழங்கியுள்ளது என்று, ஆசிய செய்தி மேலும் கூறுகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2020, 14:50