உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 50வது மாநாட்டில் உரையாற்றும் ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 50வது மாநாட்டில் உரையாற்றும் ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் 

கார்பனை அதிகளவு வெளியேற்றும் நாடுகளுக்கு அழைப்பு

காலநிலை மாற்றத்திற்கு காரணமாகும் வாயுக்கள் வெளியேற்றத்தில் எண்பது விழுக்காட்டை, ஜி20 நாடுகள் வெளியேற்றுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தொழிற்சாலைகளை அதிகளவு கொண்டிருக்கும் நாடுகள், பசுமைஇல்ல வாயு வெளியேற்றங்களைக் குறைப்பதற்கு இணங்காவிடில், இந்த உலகம், காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலிலே வாழ வேண்டியிருக்கும் என்று, ஐ.நா. அவையின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், சனவரி 23, இவ்வியாழனன்று கூறினார். 

சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில், சனவரி 21, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள உலகப் பொருளாதார கூட்டமைப்பின் (WEF) 50வது மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கு ஆற்றிய உரையில், கூட்டேரஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

பல சிறிய வளரும் நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும், 2050ம் ஆண்டுக்குள், கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இசைவு தெரிவித்துள்ளவேளை, கார்பனை அதிகளவில் வெளியேற்றும் நாடுகள், அவ்வாறு செயல்படுவதற்கு, இன்னும் தங்களை அர்ப்பணிக்க முன்வரவில்லை என்று, கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

காலநிலை மாற்றத்திற்கு காரணமாகும் வாயுக்கள் வெளியேற்றத்தில் எண்பது விழுக்காட்டை, ஜி20 நாடுகள் வெளியேற்றுகின்றன என்று கூறிய கூட்டேரஸ் அவர்கள், பசுமையான வருங்காலத்தை நோக்கி உலகை நடத்திச்செல்ல, அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் காரணமாக, 2008ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில், ஏறத்தாழ 24 பில்லியன் மக்கள் உலகளவில் புலம்பெயர்ந்துள்ளனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 January 2020, 15:37