மத்ரித்தில் புதிய ஆண்டுக்கு தயாரிப்பு மத்ரித்தில் புதிய ஆண்டுக்கு தயாரிப்பு  

வாரம் ஓர் அலசல் : 2019க்கு விடைகொடுத்து 2020ஐ வரவேற்போம்

தினமும் அன்பு மற்றும் அமைதியான மனநிலையில் தியானம் செய்து, நாம் வாழும் சூழலை, அன்பு மற்றும், அமைதி அதிர்வலைகளால் நிரப்புவோம். இதே அமைதி, மற்றும் அன்பின் ஒளியை இப்பிரபஞ்சத்திற்கு அனுப்பி, 2020ம் புதிய ஆண்டைத் துவங்குவோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

2019ம் ஆங்கில ஆண்டு விடை பெறுகிறது. இந்த ஆண்டைத் துவங்கியபோது நம் உள்ளங்களில் எத்தனை எத்தனையோ கனவுகள். 2019ம் ஆண்டின் வாழ்க்கைக் கணக்கின் வரவுசெலவைத் திரும்பிப் பார்த்தால், மறந்து போகாத, மறக்க நினைக்காத, மகிழ்வான தருணங்கள் பல! இது ஏன் நடந்தது என கண்ணீரில் நனையவைக்கும் நேரங்கள் பல! இவர்களை ஏன் சந்தித்தோம் என்ற கசப்புணர்வுகள். இவர்களை ஏன் இவ்வளவு தாமதமாய் சந்தித்தோம் என்ற ஏக்கப் பெருமூச்சுகள். பாசத்தில் திளைக்க வைத்த எத்தனையோ புது உறவுகள்! வாழ்க்கை நில்லாதது, நிலையில்லாதது, நிரந்தரமற்றது என்ற வாழ்வுப் பாடத்தைக் கற்றுக்கொடுத்த அதிர்ச்சிதந்த அனுபவங்கள்! மன்னிக்க மறுக்கும் மனங்கள்! நேற்று இருந்தார் இன்று இல்லை. இன்று இருப்பார், நாளை இருப்பார் என்ற நிச்சயம் இல்லை. இந்த வாழ்வில் நிலையென்று எதுவும் இல்லை. ஒவ்வொரு சோகமும் துன்பமும் ஒரு பாடத்தைக் கற்றுத் தரவே வருகின்றன. இதுவும் கடந்துபோகும். இப்படி இரவும் பகலும் எண்ணிலடங்கா எண்ணங்கள்! ஆனால், இந்த இறுதி நாள்களில்கூட உலகிலிருந்து போர்களும், வன்முறை போராட்டங்களும் விடைபெறவில்லை.

நாடுகளில் பயங்கரவாதம்

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், இஸ்லாம் தீவிரவாதிகள், கிறிஸ்மஸ் நாளன்று 11 கிறிஸ்தவர்களை கொடூரமாய்க் கொலை செய்துள்ளனர். ஏமன் நாட்டில், இஞ்ஞாயிறன்று, Houthi புரட்சியாளர்களுக்கு எதிராக, போரிடும் ஒரு (Security Belt) படைப்பிரிவுக்கு ஆள் சேர்த்த இராணுவ அணிவகுப்பின்மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஞ்ஞாயிறன்று நியூயார்க்கின் Monsey யில், ஒரு யூத மத ரபியின் வீட்டில் கத்திக்குத்து. டெக்சஸ், West Freeway கிறிஸ்து ஆலயத்தில் செப நேரத்தில் துப்பாக்கிச்சூடு. டிசம்பர் 28, இச்சனிக்கிழமையன்று சொமாலியாவின் தலைநகர் Mogadishuவில், ஒரு பரபரப்பான சோதனைச் சாவடியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் ஏறக்குறைய 90 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டில் இயங்கும், அல் கெய்தா தீவிரவாத அமைப்பின் Al Shabaab என்ற கிளை அமைப்பு, இந்த பயங்கரவாதச் செயலை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பயங்கரவாதத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், திருப்பயணிகளுடன் சேர்ந்து இறைவனிடம் மன்றாடினார்.

பயங்கரவாதங்களால் மட்டுமன்றி, இயற்கையின் சீற்றத்தாலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் 2019ம் ஆண்டு விடை பெறுகின்றது. இந்த உலகில் இடம்பெறும் அநீதிகளை, மனிதாபிமானமற்ற செயல்களை எதிர்த்து, எத்தனையோ பழிவாங்கும் போர்களும், வன்முறை போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் ஓரிடத்தில் ஒன்று முடிவதுபோல் தெரியும்போது வேறோர் இடத்தில் அதே அநீதிகளும் அட்டூழியங்களும் துவங்குகின்றன. எடுத்துக்காட்டுக்கு, இவ்வாண்டு ஆகஸ்ட் 3ம் தேதி டெக்சஸ் மாநிலத்தின் El Pasoவிலுள்ள Walmart அங்காடியில், ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், 24 பேர் காயமுற்றனர். இந்த மனிதரின் இத்தீச்செயல், இவ்வாண்டு மார்ச் 15ம் தேதி நியுசிலாந்தில் ChristChurch மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 பேர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதற்காக நடத்தப்பட்டது எனச் சொல்லப்பட்டது. இந்த ஆளின் கொடுஞ்செயல், 2011ம் ஆண்டில் நார்வேயில் 77 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடி எனக் கூறப்பட்டது. நார்வேயில் Anders Behring Breivik என்ற பயங்கரவாதி வெளியிட்ட அறிக்கையில், உலகெங்கும் செயல்படும் தீவிரவாத மற்றும், தேசியவாதக் குழுக்களின், குறிப்பாக, இந்தியாவின் RSS இந்து தீவிரவாத அமைப்பின் செயல்களால், தான் தூண்டப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். RSS அமைப்பு, 1925ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதே ஆண்டில்தான் ஜெர்மனியின் ஹிட்லர், Mein Kampf என்ற தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். யூதர்களுக்கு எதிராளியாக மாறியதை அந்த நூலில் ஹிட்லர் விளக்கியுள்ளார். எனவே, உலகில் இடம்பெறும் எதிர்மறை நடவடிக்கைகள் அனைத்தும் தொடர் கதையாகவே அரங்கேறுகின்றன. இதற்கு ஆழ்நிலை மனது பற்றிய ஆய்வாளர்கள் சில காரணங்களைச் சொல்கின்றனர்.

இந்த உலகில் வறுமை, சூழலியல் பிரச்சனை, உயிரினங்களைத் துன்புறுத்தல், அரசியல்வாதிகளின் ஊழல், அநீதிகள், காழ்ப்புணர்வு போன்றவற்றிற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடும்போது, போராடும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பற்றியெறியும் வெறுப்புணர்வு அதிகரிக்கிறது. எனவே பொங்கியெழுந்து போராடுவோரின் கோப உணர்வலைகள், அவரை மட்டுமல்ல, அந்தச் சூழலிலுள்ள எல்லாரையும் தாக்குகின்றன. இந்தப் பூமிக்கோளமும், வெறுப்பு என்ற எதிர்மறை அலைகளால் நிரம்புகிறது. அவை ஒவ்வொரு நொடிப்பொழுதும், வருங்கால பூமிக்கோளத்திற்கு பிரச்சனைகளை அதிகமாக்குகின்றன. எனவே, எதற்காகப் போராடுகிறோமோ அந்த பிரச்சனை குறைவதில்லை மற்றும், ஒழிவதில்லை. மாறாக புதிய பிரச்சனைகள் உருவாகின்றன. ஆகவே நம் உள்ளங்களில் கோபமும், வெறுப்பும், எதிர்ப்புணர்வும் இருக்கும்வரை போராட்டங்கள், உண்மையான, நீடித்த, நிலைத்த தீர்வைக் கொணர்வதில்லை. இதையே இந்த உலகம் நூற்றாண்டுகளாகப் பார்த்து வருகிறது. எனவே உலகில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சிறந்த வழி உள்ளதா? உள்ளது என்கிறது ஓர் ஆய்வு.

தியானத்தின் பலன்

1978ம் ஆண்டு அறிவியலாளர் குழு ஒன்று, மூன்று வாரங்கள் அன்பு மற்றும் அமைதி நிலையில் தியானம் செய்த ஏழாயிரம் பேரிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அச்சமயத்தில் உலக அளவில் குற்றங்களின் எண்ணிக்கை 16 விழுக்காடு குறைந்திருந்ததாம். அதேநேரம், உலகளாவில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்திருந்தனவாம். உலக அளவில் பயங்கரவாத நடவடிக்கைகள் 72 விழுக்காடு குறைந்திருந்தனவாம். இன்று உலகில், ஒவ்வொரு நாற்பது விநாடிகளுக்கும் ஒருவர் தற்கொலையால் இறக்கின்றார் என்று, உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆழ்நிலை தியானத்தில் இருந்த வெறும் ஏழாயிரம் பேர், அன்பு மற்றும் மனஅமைதி நிலையில், உலக அளவில் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள் என்றால், உலகில் அமைதி நிலவ நம்மாலும் உதவ இயலும் அல்லவா? ஒவ்வொரு மனிதரின் ஆழ்மனதில் எழும் அன்பு மற்றும் அமைதி அலைகள், இந்த பிரபஞ்சத்தின் ஆழ்நிலையில் அதிர்வை ஏற்படுத்துகின்றன. மக்கள் தங்களிடம் என்ன நடக்கின்றது என்பதை உணராமலே மாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். எனவே, இந்த உண்மையான எதார்த்தத்திற்கு விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வுலகில் மாற்றம் நிகழ நம் ஒவ்வொருவராலும் இயலும் என்ற உண்மையை உணருவதற்கு நேரம் வந்துவிட்டது. மாற்றத்திற்காகப் போராடினால் உலகம் மாறும் என்ற எண்ணம் கைவிடப்பட வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் உள்ளத்தில் கொண்டிருக்கும் உண்மையான அன்பு இவ்வுலகை மாற்றும். ஒரு நிமிடம் கண்களை மூடுங்கள். உங்கள் இதயத்திலுள்ள அன்பை இந்த பிரபஞ்சம் முழுவதும் அனுப்புங்கள். இதயத்தில் அமைதியை உணர்ந்து அதிலே நிலைத்திருங்கள். ஒவ்வொரு விநாடியிலும் நீங்கள் செய்யும் இந்த சிறு செயல், இந்த பூமிக்கோளத்தின் வருங்காலத்தையே மாற்றி அமைக்கும்.

உண்மையான அன்பு

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் அற்புதங்கள் நடக்கின்றன. இதற்கு புனித அன்னை தெரேசாவை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். அன்புள்ள மனதில் இருந்துதான் அன்பான வார்த்தைகள் வருகின்றன. மனிதாபிமான மனம் என்னும் விதையிலிருந்துதான் அன்பான மனம் பிறக்கின்றது. திருவள்ளுவரும், 'அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆர்உயிர்க்கு, என்போடு இயைந்த தொடர்பு' (73) என்று கூறுகிறார். அன்பான வார்த்தைகள், உறவின் இடைவெளியைக் குறைக்கின்றன. உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளிடம் ஆசிரியர்கள் அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, குழந்தைகள் முழு ஈடுபாட்டுடன் கற்பதுடன், ஆசிரியர்களுடன் இணக்கமாகச் செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். இல்வாழ்க்கையின் அடிநாதமாக அமைவதும் அன்புதான். வீட்டிலிருந்து, தெருவில் வழிந்து, உலகந்தழுவிய மனித அன்பாய் வளர்ந்து, பூத்து, காய்த்துக் கனிவதே மனித வாழ்வின் தலையாய மகத்துவமாகின்றது.

ஸ்மார்ட் கைபேசியோடு அல்ல

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், குடும்பங்களுக்கு அறிவுரை வழங்கியபோது, உணவு அருந்தும் வேளைகளில் ஸ்மார்ட் தொலைபேசிகளை தூர வைத்துவிட்டு, ஒருவர் ஒருவருடன் உரையாடுங்கள் என்று சொன்னார். உங்கள் குடும்பத்தில் ஒருவர் ஒருவருடன் தொடர்புகொள்ளத் தெரியுமா என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, கைபேசிகளுடன் உரையாடாமல், ஒருவர் ஒருவருடன் உரையாடுங்கள் கூறினார். ஆனால், இக்காலத்தில், பேருந்துகளில்கூட, குழந்தைகளை கைகளை வைத்துக்கொண்டே ஸ்மார்ட் கைபேசிகளைப் பார்க்கும் அன்னையர் அதிகமாகிவிட்டனர். நம் குடும்பங்களில் மன்னிப்பு, மற்றவரை வரவேற்றல், நன்றியுணர்வு, அமைதி, தியானம் ஆகிய ஐந்து கூறுகளை அணிகலன்களாக கொண்டிருப்போம். மன்னிப்பு கேளுங்கள், வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். மன்னிப்பு வழங்குதல், ஆன்மீகச் சுத்திகரிப்பு மட்டுமல்ல, அது நோய் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது. மன்னிக்கும் குணம் கொண்டவர்கள், புற்றுநோயிலிருந்தும் குணமடைகின்றனர். மன்னிப்பு வழங்கவே ஒரு குறிப்பேடு வைத்துக்கொள்ளும் பழக்கத்தை உளவியல் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஒவ்வொரு நாளும் மன்னிப்பு கேட்டு, அதை முழுமையாக எழுதி வெளியேற்றுவது மிகவும் சக்தி வாய்ந்த சிகிச்சை முறை என்றும் சொல்கின்றனர். நம் மனவயலில் நல்லெண்ணங்களை விதைத்து, வாழவைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லி, அவரில் ஆழமான நம்பிக்கை வைத்து, புதிய வாழ்வைத் துவங்குவோம். தினமும் அன்பு மற்றும் அமைதியான மனநிலையில் தியானம் செய்து, நாம் வாழும் சூழலை, அன்பு மற்றும், அமைதி அதிர்வலைகளால் நிரப்புவோம். இதே அமைதி, அன்பு மற்றும் வளமையின் ஒளியை இப்பிரபஞ்சத்திற்கு அனுப்பி, 2020ம் புதிய ஆங்கில ஆண்டைத் துவங்குவோம். எங்கும் அமைதி, எங்கும் சாந்தி, எங்கும் இறைசக்தி நிறையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2019, 15:19