தேடுதல்

பிறருக்கு உதவுவது ஒரு பேறு பிறருக்கு உதவுவது ஒரு பேறு 

வாரம் ஓர் அலசல்: பிறருக்கு உதவுவது ஒரு பேறு

பெற்றுக் கொள்பவர் அல்ல, கொடுப்பவரே பேறு பெற்றவர். எனவே, எப்போதும் நல்லதைச் செய்துகொண்டே இருப்போம்

மேரி தெரேசா: வத்திக்கான்

நியூயார்க் நகர மருத்துவமனை ஒன்றில், மரணத்திற்காகப் போராடும் நோயாளிகள் உள்ள பிரிவில், முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோயால் தாக்கப்பட்டிருந்தார். இன்னும் ஓரிரு நாள்கள்கூட உயிரோடு இருக்கமாட்டார் என்ற நிலை. அன்று மாலை, அவரை கவனித்துக்கொள்ளும் செவிலியர் ஒருவர், அவரிடம், ஐயா, உங்களைப் பார்ப்பதற்கு உங்கள் மகன் வந்திருக்கிறார் என்று சொன்னார். முதியவர் கண்ணைத் மெதுவாகத் திறந்து பார்த்தார். அவருக்கு எதிரே இருபது வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞன், கப்பற்படை சீருடையுடன் நின்றுகொண்டிருந்தான். அந்த முதியவர், அந்த செவிலியரிடம் தன் மகன் அதே அமைப்பில் இருக்கிறான் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார். முதியவர், தன் கைகளால் இளைஞனின் கைகளைப் பிடிக்கத் துழாவினார். அதைப் பார்த்ததும் இளைஞன் தன் கையை அவர் கைக்கு அருகே நீட்டினான். நடுங்கும் தன் கரங்களால் முதியவர் பாசத்தோடும், பரிவோடும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டார். அன்று இரவு முழுவதும் முதியவர், அவனுடைய கைகளைப் பிடித்தபடியே இருந்தார். அடுத்த நாள் அதிகாலையில் செவிலியர் வந்தபோது அந்த இளைஞன் சில நல்ல வார்த்தைகளை, முதியவரின் காதில் சொல்வதைக் கண்டாள். ஆனாலும் அவர் கண் திறக்கவில்லை. முதியவரின் கைகள் மட்டும், இளைஞனின் கையை இறுகப் பற்றியிருந்தது. விடிந்தது. முதியவரும் இறைபதம் சேர்ந்தார். இளைஞன், அவருடைய தளர்ந்த கையைத் தன் கையிலிருந்து வெகு கவனமாக விடுவித்து, மெதுவாகப் படுக்கையில் வைத்தான். வெளியே வந்து அவர் இறந்துவிட்ட விடயத்தை செவிலியரிடம் சொன்னான். அப்போது, அந்த செவிலியர், மிகுந்த கவலையுடன், உங்கள் அப்பாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...’’ என்று சொன்னார். அதற்கு அந்த இளைஞன், நீங்கள் என்னை  தவறாகப் புரிந்துள்ளீர்கள். அவர் என் அப்பா இல்லை. இதற்கு முன்னால் நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை என்று சொன்னான். அப்படியானால், நான் உங்களை அவர் அருகில் அழைத்துச் சென்றபோதே சொல்லியிருக்கலாமே... ஏன் சொல்லவில்லை?’’ என்று செவிலியர் கேட்டார். ஆமாம். நீங்கள் என்னை அவர் அருகில் நிறுத்தியபோதே, தவறாக என்னைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டீர்கள் எனத் தெரிந்தது. அந்நேரத்தில் நீங்கள் அவசரமாகவும் இருந்தீர்கள். அதோடு அந்தப் பெரியவரைப் பார்த்ததும், அவர் தன் மகனுக்காக ஏங்குகிறார், அவன் இப்போது இல்லையென்பதும் என்பதும் புரிந்தது. அதோடு அவர் என் கையைப் பிடித்ததும், நான்தான் அவருடைய மகனா, இல்லையா எனச் சொல்ல முடியாத அளவுக்கு, நோயின் தாக்கம் அவரிடம் இருந்தது என்பதும், அந்தக் கடைசி நிமிடத்தில் அவருக்கு எந்த அளவுக்கு அவருடைய மகனின் அருகாமை தேவைப்படுகிறது என்பதும் புரிந்தது. அதனால்தான் அப்படியே உட்கார்ந்துவிட்டேன் என்று சொன்னான் அந்த இளைஞன். செவிலியர் பதில் பேச முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க, அந்த இளைஞன் மெல்ல நடந்து வெளியே போனான்.

உதவுதல்

உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவது, நம் எல்லாரின் கடமையாகும். “பிறருக்கு உதவுவது என்பது ஒரு பேறு’ என்ற எண்ணம் நமக்கு எப்போதும் இருக்குமானால், நன்மை செய்வதற்கான ஆசை மிகவும் ஆற்றல் வாய்ந்த தூண்டுசக்தியாகி விடும். நாம் நல்லதையே செய்ய வேண்டும். உங்கள் தானத் திறத்தையும், இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி, அதன் மூலம் நீங்கள் தூய்மையும், நிறைநிலையும் அடைவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததற்காக நன்றி உடையவர்களாக இருங்கள். எல்லா நற்செயல்களும் நம்மைத் தூய்மையை நோக்கி, நிறைநிலையை நோக்கியே இட்டுச் செல்கின்றன” என்று சுவாமி விவேகானந்தர் சொன்னார். பிறரின் கனவுகளை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்துவிட முடியும். ஏதோ ஒரு வழியில் அதற்கான உதவி நமக்குக் கிடைத்தே தீரும் என்பது இயற்கை விதி. டிசம்பர் 01, இஞ்ஞாயிறு எய்ட்ஸ் நோய் உலக விழிப்புணர்வு நாள். டிசம்பர் 2, இத்திங்கள், அடிமைமுறை ஒழிக்கப்பட்ட உலக நாள். டிசம்பர் 03, மாற்றுத்திறனாளிகள் உலக நாள். இந்த உலக நாள்கள், தேவையில் இருப்பவர்களுக்கு உதவ, நம் இரக்கப் பண்பை செயல்படுத்த நம்மைத் தூண்டுகின்றன. எய்ட்ஸ் நோயாளிகள், எல்லாவிதமான அடிமைமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர், உடல் மற்றும், மன அளவில் குறையுள்ளவர் போன்ற எல்லாருக்குமே, நம் உதவி தேவை. உதவி என்றால் பொருளுதவி என்று அர்த்தமல்ல, நம் கருணையும், கனிவும் நிறைந்த பேச்சு, நடத்தை, செயல்கள் போன்றவையும் உதவிதான்.

நவீன அடிமைமுறைகள்

வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் கட்டாயத் தொழிலில் சிக்கிய, பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண் கூறுகிறார் – அந்த வீட்டு முதலாளி அம்மா, எப்பொழுதெல்லாம் வீட்டைவிட்டுச் சென்றாரோ அப்பொழுதெல்லாம், அவர் என்னை மணிக்கணக்காய் வராந்தாவில் வைத்து, கதவைப் பூட்டிவிட்டுச் செல்வார், ஒரு சிறிய தம்ளரில் தண்ணீரை மட்டும் வைப்பார் என்று. அடிமைமுறை ஏதோ வரலாற்றில் ஒரு காலத்தில் இடம்பெற்றது மட்டும் அல்ல. உலக தொழில் நிறுவனத்தின் (ILO) கூற்றுப்படி, இன்றும், உலகில் நான்கு கோடியே முப்பது இலட்சம் பேர் நவீன அடிமைமுறைகளுக்குப் பலியாகியுள்ளனர். நவீன அடிமுறைகளுக்கு சட்டத்தில் விளக்கம் கொடுக்கப்படவில்லை. ஆயினும், கட்டாயத் தொழில், கடனுக்காக கொத்தடிமை, கட்டாயத் திருமணம், மனித வர்த்தகம் போன்ற நவீன அடிமைமுறைகள் இடம்பெற்றுத்தான் வருகின்றன. உண்மையில், இக்கொடுமையில் அகப்பட்டவர்கள், அதைப் புறக்கணிக்க அல்லது அதைவிட்டு வர இயலாத நிலையில் இருக்கின்றனர். அச்சுறுத்தல்கள், வன்முறை, ஏமாற்று, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்றவையே இதற்குக் காரணம் என்று, உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது. கட்டாயத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 2 கோடியே 49 இலட்சம் பேரில், 1 கோடியே 90 இலட்சம் பேர், வீட்டுவேலை, கட்டுமானப் பணிகள், வேளாண்மை போன்ற தனிப்பட்ட இடங்களில் அகப்பட்டுள்ளவர்கள். 48 இலட்சம் பேர், பாலியல் தொழிலில் கட்டாயமாக உட்படுத்தப்பட்டவர்கள். 40 இலட்சம் பேர், அரசு அதிகாரிகளால் கட்டாயத் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். மேலும், உலக அளவில், சிறார் தொழில்முறையில், 15 கோடிக்கு அதிகமான சிறார் சிக்கியுள்ளனர். இவர்கள் உலகிலுள்ள சிறாரில் ஏறத்தாழ பத்தில் ஒருவர்.

மாற்றுத்திறனாளிகள் உலக நாள்

டிசம்பர் 03, இச்செவ்வாய், மாற்றுத்திறனாளிகள் உலக நாள். இந்த நாள், 1992ம் ஆண்டில் ஐ.நா. பொது அவையால் உருவாக்கப்பட்டது. சமுதாயத்தின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வு போன்ற எல்லா நிலைகளிலும், வளர்ச்சித் திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளும், நலமும் போற்றிப் பேணப்பட வேண்டும் என்று, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கூறியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் மீது தனிப்பட்ட அக்கறை காட்டி அன்புகூரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் தம் இதயத்தில் இம்மக்களுக்கென சிறப்பு இடத்தை வைத்திருக்கிறார். வர்த்தக கருத்தியலுக்குத் தகுதியில்லாதவர்களை ஒதுக்குவதில் அல்ல, மாறாக, அன்பும் ஒருமைப்பாடுமே உலகை சிறந்த இடமாக அமைக்கும் என்று கூறியுள்ளார். உடல் மற்றும், மனத்தளவில் மாற்றுத்திறன் உள்ளவர்களின் கதைகளைக் கேட்டால், அவர்களில் பலர், மனிதர்களாலே இந்நிலைக்கு ஆளாகியிருப்பது தெரிய வருகிறது.

காலநிலை மாற்றம்

இக்காலத்தில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் அச்சுறுத்தும் மற்றுமொரு கொடிய நோய், சுற்றுச்சூழல் பாதிப்பு. தொழில்புரட்சி காலத்தைவிட, தற்போது உலகம் 1.1 செல்சியுஸ் டிகிரி வெப்பமடைந்துள்ளது. பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் இன்றைய வேகத்திலேயே தொடர்ந்தால், உயிரினப் பேரழிவு, உலகின் பெரும்பகுதி வாழத் தகுதியற்றுப் போதல் உள்ளிட்ட மோசமான நிகழ்வுகளுக்கு இது இட்டுச் செல்லும். இந்நூற்றாண்டில் உலகளாவிய காலநிலை, 3.4 செல்சியுஸ் டிகிரியிலிருந்து 3.9 செல்சியுஸ் டிகிரியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில், பருவநிலை நெருக்கடியை சமாளிக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்க, இஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில், COP25 எனப்படும் காலநிலை மாற்றம் குறித்த உலக மாநாடு டிசம்பர் 2, இத்திங்களன்று ஆரம்பித்துள்ளது. இந்த இருவார மாநாட்டை முன்னிட்டு, ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமும், நமது தலைமுறைகளும் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டுமானால், காலநிலை நெருக்கடிக்குரிய காரணங்களை நாம் வாழும் காலத்திலேயே குறைக்க வேண்டும் என்று  வலியுறுத்துகிறது.

வாடா மல்லிக்கு ஆயுள் அதிகம், ஆனால் வாசமில்லை. வாசமுள்ள மல்லிகைக்கோ ஆயுள் குறைவு. கொம்புள்ள மானுக்கோ வீரமில்லை. வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை. கருங்குயிலுக்குத் தோகை இல்லை, தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரல் இல்லை. நீருக்கு நிறமில்லை, நெருப்புக்கு ஈரமில்லை. காற்றுக்கு உருவமில்லை. கதிரவனுக்கு நிழல் இல்லை. எவர் வாழ்விலும் நிறைவில்லை. எவர் வாழ்விலும் குறைவில்லை. ஒன்றைக்கொடுத்து ஒன்றை எடுத்தான். ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான் என்று, ஒரு கவிதை உண்டு. எனவே, அது இருந்தால் இது இல்லை, இது இருந்தால் அது இல்லை என குறைபட்டுக்கொண்டே இருக்காமல், நிறைந்த மனதுடன் பிறர் வாழ உதவுவோம். பிறருக்கு உதவுவது, ஒரு பேறு என்று எண்ணுவோம். பெற்றுக் கொள்பவர் அல்ல, கொடுப்பவரே பேறு பெற்றவர். எனவே, எப்போதும் நல்லதைச் செய்துகொண்டே இருப்போம். ஏனெனில், அது நமக்கு ஓர் ஆசீர்வாதம். நாம் நிறைநிலை அடைய ஒரேவழி இதுவே.

வாரம் ஓர் அலசல்: பிறருக்கு உதவுவது ஒரு பேறு

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2019, 15:03