COP 25 உச்சி மாநாட்டில் அந்தோனியோ கூட்டேரஸ்  COP 25 உச்சி மாநாட்டில் அந்தோனியோ கூட்டேரஸ்  

பருவநிலை மாற்றத்தின் நெருக்கடி நிலை மிக அருகில்...

பருவநிலை மாற்றத்தின் நெருக்கடி நிலை, தொலைத்தூரத்தில் உள்ள தொடுவானத்தில் அல்ல, மாறாக நமக்கு நெருக்கமாகவே உள்ளது - COP 25 உச்சி மாநாட்டில், ஐ.நா. பொதுச்செயலரின் எச்சரிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பருவநிலை மாற்றத்தின் நெருக்கடி நிலை, தொலைத்தூரத்தில் உள்ள தொடுவானத்தில் அல்ல, மாறாக நமக்கு நெருக்கமாகவே உள்ளது என்ற எச்சரிக்கையை ஐ.நா. அவையின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் COP 25 உச்சி மாநாட்டில் கூறினார்.

200க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பருவநிலை மாற்ற உலக உச்சி மாநாடு, டிசம்பர் 2 இத்திங்களன்று, இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் ஆரம்பமான வேளையில், இம்மாநாட்டின் ஆரம்ப அமர்வில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், பருவநிலையையொட்டிய நெருக்கடி நிலை, நம்மை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

பசுமை இல்ல வாயு வெளியேற்றம், கார்பன் டைஆக்சைடு வெளியேற்றம் ஆகியவற்றை தடுத்து நிறுத்த நம் அரசுகள் தயக்கம் காட்டுவது, நம்மிடம் உள்ள வலுவற்ற உறுதிப்பாட்டை உணர்த்துகிறது என்று, கூட்டேரஸ் அவர்கள், மாநாட்டின் உறுப்பினர்களிடம் கூறினார்.

இத்தகைய முயற்சிகளுக்கு, மக்களின் வரிப்பணத்தை பெருமளவு செலவழிக்கவேண்டும் என்பதை, அரசுகள் காரணம் காட்டுவதாக, தன் உரையில் சுட்டிக்காட்டிய கூட்டேரஸ் அவர்கள், மக்கள் மீது கூடுதல் வரிப்பணத்தை சுமத்துவதற்குப் பதில், சுற்றுச்சூழல் மாசுக்கேட்டை உருவாக்கும் நிறுவனங்கள் மீதும், நிலத்தடி எரிசக்திகளை உருவாக்கும் நிறுவனங்கள் மீதும் கூடுதல் வரிப்பணத்தை சுமத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

டிசம்பர் 13ம் தேதி முடிய நடைபெறும் COP 25 உச்சி மாநாட்டில், 200க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கின்றன என்றும், இவற்றில், கார்பன் டைஆக்சைடு வெளியேற்றத்தில் முதலிடங்களை வகிக்கும் அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து முக்கியமான தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காமல், உதவி நிலை அதிகாரிகளை அனுப்பியுள்ளனர் என்றும், ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2019, 14:49