தேடுதல்

Vatican News
உள்நாட்டு மோதல்களால் குடி பெயரும்  கச்சின் இன மக்கள் உள்நாட்டு மோதல்களால் குடி பெயரும் கச்சின் இன மக்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை: மியான்மார் நாட்டின் பல்வேறு இனங்கள்

கச்சின் இன மக்கள், பாரம்பரியமாகப் போரிடும் திறமைகளைப் பெற்றவர்கள். கலைப்பொருள்கள் செய்வதிலும், மூலிகை மருத்துவத்திலும் சிறந்தவர்கள். காடுகளில் வாழும் திறமை படைத்தவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

மியான்மார் நாட்டில், பாமார், சின், கச்சின், காயின், காயா, மோன், ரக்கெய்ன், ஷான் ஆகிய பெரிய எட்டு தேசிய இன சமுதாயங்கள் உட்பட, 135 இன சமுதாயங்கள் உள்ளன. இவை, மொழி அல்லது இன அடிப்படையில் இல்லாமல், அவை வாழ்கின்ற பகுதிகளை வைத்து இணைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஷான் இன கூட்டமைப்பில், 33 இனக் குழுக்கள்  உள்ளன. இவை நான்கு வேறுபட்ட மொழிகளைப் பேசுகின்றன. கச்சின் இன கூட்டமைப்பினர், நாட்டின் வட பகுதியிலுள்ள கச்சின் மாநிலத்தில், கச்சின் குன்றுகளில் வாழ்கின்றனர். இந்த கூட்டமைப்பினர், பல்வேறு மொழிகள் பேசுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ பத்து இலட்சம் எனச் சொல்லப்படுகின்றது. மியான்மாரில் அரசால் அங்கீகரிக்கப்படாத இனக் குழுக்களும் உள்ளன. அவற்றில், பர்மிய-சீன மற்றும் Panthay இன குழுக்கள் பெரியவை. இவை, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3 விழுக்காடாகும். அதற்கு அடுத்த நிலையிலுள்ள பர்மிய-இந்திய இனத்தவர் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3 விழுக்காடாகும். பர்மிய-ஆங்லோ இனத்தவர், நேபாள மொழி பேசும் பர்மிய-நேபாள இனத்தவர் ஆகியோரும் வாழ்கின்றனர். கச்சின் இன மக்கள், பாரம்பரியமாகப் போரிடும் திறமைகளைப் பெற்றவர்கள். கலைப்பொருள்கள் செய்வதிலும், மூலிகை மருத்துவத்திலும் சிறந்தவர்கள். காடுகளில் வாழும் திறமை படைத்தவர்கள். இம்மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் கிறிஸ்தவர்கள். கச்சின் மாநிலத்தில், 1966ம் ஆண்டில், நாற்பது விழுக்காட்டினர் இருந்தனர். ஆயினும், 2010ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை, 90 முதல் 95 விழுக்காடாக உயர்ந்துள்ளது. சீனாவோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் கச்சின் மாநில மக்கள், மலைகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். 1948ம் ஆண்டில், அப்போதைய பர்மா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையடைந்தபோது, கச்சின் மாநிலத்திற்கு, சம உரிமையும், தன்னாட்சியும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆயினும், 1962ம் ஆண்டில் இராணுவம் அப்பகுதியை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததையடுத்து, ஆயுத மோதல் ஆரம்பித்தது. கச்சின் நிலப்பகுதியைப் பாதுகாப்பதற்காக கச்சின் விடுதலைப் படையும் உருவானது. தங்கம், வைரம் போன்ற கனிமவளமும், இயற்கை வளமும் மிகுந்த கச்சின் மாநிலம் தற்போது, இராணுவத்தால் நசுக்கப்பட்டு, ஓர் இன அழிவை எதிர்கொண்டு வருகிறது. 50 முதல் 80 விழுக்காடு வரையிலான, பச்சை மாணிக்கக்கல்,  சீன எல்லை வழியாக கடத்தப்படுகின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன. மியான்மார் நாட்டின் மிகப்பெரிய Irrawaddy அல்லது Ayeyarwady ஆற்றின், N’Mai, Mali ஆகிய இரு முக்கிய  கிளை ஆறுகள், கச்சின் மாநிலத்தின் தென் பகுதியிலே, Irrawaddy ஆற்றுடன் இணைகின்றன.

12 December 2019, 10:37