தேடுதல்

Vatican News
இயற்கையின் அதிசயம் இயற்கையின் அதிசயம் 

பூமியில் புதுமை: இயற்கையை கடவுளாகப் பார்க்கும் சிறுமி

சிறுமி ரக்‌ஷனா, இதுவரை 1,600 நபர்களிடம் கண்தானம் கொடுக்க ஒப்புதல் வாங்கி உறுதிமொழி விண்ணப்பங்களை லயன்ஸ் குழுவிடம் வழங்கியிருக்கார். 50,000 பேரை கண்தானம் கொடுக்க வைக்கவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். பெண் கல்வியையும் ஊக்குவித்து வருகிறார் ரக்‌ஷனா

மேரி தெரேசா: வத்திக்கான்

கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்த இரவீந்திரன்-சங்கீதா தம்பதியரின் மூத்த மகள் ரக்‌ஷனா. ஒன்பதாவது படித்துவரும் சிறுமி ரக்‌ஷனா, இயற்கைதான் என் கடவுள் என்று, மரங்கள் வளர்ப்பதிலும், மரங்கள் வளர்க்க மற்றவரை ஊக்குவிப்பதிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். 48 மணி நேரத்தில், பத்தாயிரம் மரக்கன்றுகளைக் கொடுக்கும் சாதனையையும் ரக்‌ஷனா நிகழ்த்தியிருக்கிறார். மரங்கள் அழிக்கப்படுவதால் பூமி எப்படி வெப்பமாகிறது என்பதை, குடும்பமாகச் சேர்ந்து குறும்படமாக எடுத்து, அதை நூறு பள்ளிகளில் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் ரக்‌ஷனா. தேசிய குழந்தைகள் நாளில், அரசு தன்னை கவுரவித்து கொடுத்த, ஒரு இலட்சம் ரூபாய் பரிசுப் பணத்திற்கு, நான்காயிரம் விதைப் பந்துகளை வாங்கி, ஒரு லாரியில ஏற்றிக்கொண்டு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்தியா முழுவதும் ஒரு குழுவாகப் பயணம் மேற்கொண்டு, அத்தனை விதைப் பந்துகளையும் தூவிவிட்டு வந்துள்ளார். இந்தப் பயணத்தில் இயற்கை பாதுகாப்பு பற்றிய பரப்புரையும் ரக்ஷனா செய்துள்ளார். நாளைய சமுதாயம், நல்ல மழையும் நல்ல விளைச்சலும் பெற்று நலமாக வாழ, என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து வருவதாக ரக்‌ஷனா. பேசியிருக்கிறார். விடுமுறை நாள்களில், இச்சிறுமியின் குடும்பம், மரக்கன்றுகளுடன், ஆட்டோவில் கிராமம் கிராமமாகப் போய் விநியோகம் செய்து வருகிறது. அனைத்தையும் சொந்த காசில்தான் அக்குடும்பம் செய்கிறது. இந்த ஆர்வம், சிறுமி ரக்‌ஷனாவுக்கு, அவர் முதல் வகுப்பு படித்தபோது ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் ஒருநாள், வகுப்பு ஆசிரியர், வீட்டுப்பாடத்தோடு, ‘உங்க நல்ல பழக்கங்களைப் பத்தி எழுதிட்டு வாங்க’ என்று மாணவர்களுக்கு சொல்லியனுப்பினார். மறுநாள் ரக்‌ஷனாவும், தன் அம்மாவிடம் பதிலைக் கேட்டு, இந்தச் சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் வாழ்வதுதான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கம்’ என்று எழுதிக் கொண்டு பள்ளிக்குச் சென்றார். பள்ளியில் பாராட்டும் கிடைத்தது. அப்படியிருக்க, ஒருநாள் திடீரென்று, ரக்‌ஷனா அம்மாவிடம், ‘ஏம்மா நம்மூர்ல மழை அதிகமாப் பெய்றதில்லை?’ன்னு கேட்டார். மரம் வெட்டுவதால்தான் என்று அம்மா பதில் சொல்ல, அப்படின்னா, `நம்ம வீட்டில ஒரு மரம் வளர்க்கவா' என்று கேட்டு, அன்று மரம் வளர்க்க ஆரம்பித்த ரக்‌ஷனாவின் இயற்கையை அன்புகூரும் பண்பு, இதுவரை எண்பதாயிரம் பேரிடம் மரக்கன்றுகளைக் கொடுக்க வைத்துள்ளது. அம்மா சொல்லித்தான் இயற்கை மேல் எனக்கு ஆர்வம் வந்தது, கடவுள் என்றால், இயற்கையும், நான் வளர்க்கின்ற மரம், செடி கொடிகளும்தான் என்றும் சொல்கிறார் ரக்ஷனா. இயற்கைதான் கடவுள் என்றால், மனிதரின் பேராசை அழிப்பது யாரை? (நன்றி விகடன்)

02 December 2019, 15:00