அசிசி நகர் புனித பிரான்சிஸ் அசிசி நகர் புனித பிரான்சிஸ் 

பூமியில் புதுமை : இறைவனை பிரதிபலிக்கும் இயற்கை

அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ள இறைமகன் இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஏதேன் தோட்டத்திலிருந்து துவங்கிய மனித வாழ்வு, இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது, நிலவளத்தின் துணையுடன். நிலத்தைப் பயன்படுத்த மட்டுமல்ல, அதனை பாதுகாக்கவும் கேட்டுக்கொண்டார் இறைவன் மனிதரிடம். படைப்பின் அழகை நாம் இரசித்து அனுபவிக்கும்போது, படைப்பெங்கும் நிறைந்திருக்கும் கடவுளையும் கண்ணாரக் காண்கின்றோம். இயற்கையில் உறைந்திடும் இறைவனின் சாயல் சீர்குலையாது வாழ்வதுவே உண்மையான விசுவாச வாழ்வு என்பது நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறிவரும் ஒன்று.

இயேசுவின் வாழ்வை உற்று நோக்கினோமென்றால், இயற்கையோடு ஒன்றித்து வாழும் ஏழையரின் ஏழ்மையில் பங்காளியாகப் பிறந்தார் இயேசு. இவரின் போதனைகளில் நாம் காண்பது, இயற்கையை முன்னிறுத்தும் உவமைகள் பல. இவைகள் வழியாக, அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை இயற்கையிலிருந்து கற்றுக்கொள்ள இறைமகன் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

படைப்பினில் இறைவனைக் கண்டவர் அசிசி நகர் புனித பிரான்சிஸ். சூரியனை சகோதரனாகவும், சந்திரனை சகோதரியாகவும் கண்டவர் அவர். அவர் பெயரைத் தனதாக எடுத்துள்ள நம் திருத்தந்தை அவர்கள், இயற்கையைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை அன்புகூரவும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். அவ்வழைப்பிற்கு செவிமடுத்து வளமான வாழ்வைப் பெறுவோம். அதன் வழியாக, திருவருகைக் காலத்தில் நம்மைத் தயாரிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2019, 13:06