தொழிலதிபராக இருந்து இயற்கை விவசாயியாக மாறிய  சிவக்குமார் தொழிலதிபராக இருந்து இயற்கை விவசாயியாக மாறிய சிவக்குமார்  

பூமியில் புதுமை : இயற்கை விவசாயத்திற்கு மாறிய கதை

வேதிய விவசாயத்தை நான் வீணாப்போன விவசாயம்னுதான் சொல்லுவேன். விவசாயம் செய்யத்தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே அதை புரிந்துகொண்டேன் என்கிறார் இயற்கை விவசாயி சிவக்குமார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சத்தியமங்கலத்தில் தொழிலதிபராக இருந்து இயற்கை விவசாயியாக மாறியவர்,  சிவக்குமார்.

"ஒரு நாள் அலுவலகம் முடிந்து எனது பண்ணைக்குச் சென்றேன், பண்ணையில் களைகள் எல்லாம் கருகிக்கிடந்தன. களைக்கொல்லி தெளித்ததினால் அவை காய்ந்து போயிருந்தன. அதற்கு முன்பு களைக்கொல்லி அடித்திருந்தாலும் அன்று என் மனதில் ஆற்றவொன்னாத் துயரம் குடிகொண்டது, கருகிக்கிடந்த அவற்றைப் பார்த்து தாங்க முடியாத துக்கம் ஏற்பட்டது. அங்கேயே நின்றுகொண்டு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அழுதுகொண்டே இருந்தேன். இப்படி மண்ணையும் உயிரையும் சித்ரவதை செய்வது, பெற்ற தாயை சித்ரவதைப்படுத்துவது போல உணர்ந்தேன்" என்று, தன் இயற்கை விவசாய நுழைவு பற்றி நெகிழ்ச்சியாக தெரிவிக்கிறார் சிவக்குமார். அவர் தன் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த அந்த நிகழ்வைப் பற்றிக் கூறும்போது, "வேதிய விவசாயத்தை நான் வீணாப்போன விவசாயம்னுதான் சொல்லுவேன். விவசாயம் செய்யத்தொடங்கி இரண்டு வருடத்திலேயே, அது தப்பான விவசாயம்னு தெரிஞ்சு அதுக்கு மூட்டை கட்டினேன், பண்ணையில் இருந்த எல்லா வேதிய உரங்களையும், பூச்சிமருந்துகளையும் கடைக்காரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன், வேதிய உரங்களால் வளர்ந்த பயிர்களையும் முற்றிலுமாக நீக்கிவிட்டேன். அந்த நாள் எனக்கு மறக்க முடியாத திருநாள்". அந்தத் திருநாளை மறக்காமல் "15 ஜூலை 2015" என்று பண்ணையின் பெயர் பலகையிலும் குறிப்பிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது சிவக்குமார் அவர்கள், சத்தியமங்கலத்தில் 73 ஏக்கரிலும், ஊட்டியில் 13 ஏக்கரிலும் இயற்கை முறையில் பல்வேறு வகையான பயிர்களையும் சாகுபடி செய்துவருவதோடு, சிறப்பாக சந்தைப்படுத்தவும் செய்கிறார்.

உலக அளவில் பல கோடிகளில் வியாபாரம் செய்துவரும் தொழிலதிபர் சிவக்குமார், 2013ல் விவசாயம் செய்யத் தொடங்கி, 2015ல் இயற்கை விவசாயத்திற்கு மாறியவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2019, 14:53