அல்பேனியாவில் நில நடுக்க பாதிப்பு அல்பேனியாவில் நில நடுக்க பாதிப்பு 

2019ம் ஆண்டின் கொடுமையான 15 பருவநிலை மாற்ற நிகழ்வுகள்

2019ம் ஆண்டு நிகழ்ந்த மிகக் கொடுமையான 15 பருவநிலை மாற்ற நிகழ்வுகளில் ஒரு சில, மனிதர்களின் செயல்பாடுகளால் இன்னும் அதிக அழிவுகளை உருவாக்கியுள்ளன - Christian Aid அமைப்பின் அறிக்கை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பருவநிலை மாற்றத்தின் பயங்கர விளைவுகளால் 2019ம் ஆண்டில் பல இலட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சேதங்களும் நிகழ்ந்துள்ளன என்று, Christian Aid எனப்படும் கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

2019ம் ஆண்டு நிகழ்ந்த மிகக் கொடுமையான 15 பருவநிலை மாற்ற நிகழ்வுகளைக் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ள இவ்வமைப்பினர், இவற்றில் ஒரு சில பருவநிலை விளைவுகள், மனிதர்களின் செயல்பாடுகளால் இன்னும் அதிக அழிவுகளை உருவாக்கியுள்ளன என்று கூறியுள்ளனர்.

ஆப்ரிக்காவில் ஏற்பட்ட Idai புயலை ஓர் எடுத்துக்காட்டாக கூறியுள்ள இவ்வறிக்கை, அதே வண்ணம், இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில், இயற்கை மீது அக்கறையற்ற முறையில் மனிதர்கள் மேற்கொண்ட செயல்களால், வெப்பநிலை உயர்வு, மழை குறைவு, ஆகியவை உருவாக்கியுள்ள விளைவுகளைப் பதிவு செய்துள்ளது.

பொருள் சேதம் என்ற கண்ணோட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்து, ஜப்பானில் ஏற்பட்ட Hagibis சூறாவளி, மற்றும் சீனாவில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவை இவ்வறிக்கையில் முதலிடங்களைப் பெற்றுள்ளன.

உயிரிழப்பு என்ற கண்ணோட்டத்தில், வட இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 1,900த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், Idai புயலால் ஆப்ரிக்காவில் 1,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய இயற்கைப் பேரிடர்களைக் காணும் இளையோர், போராட்டங்களில் ஈடுபடுவதில் வியப்பு ஏதுமில்லை என்றும், அரசுகள் தீவிர நடவடிக்கைகளை, அவசரக் கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் இவ்வறிக்கையின் இறுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2019, 14:55