தேடுதல்

ஏமன் நாட்டு சிறார் இன்று ஏமன் நாட்டு சிறார் இன்று 

ஏமன் நாட்டு குழந்தைகள் இன்னும் 20 ஆண்டுகள் துன்புறுவர்

ஏமன் நாட்டில் போர் நிறுத்தப்பட்டாலும், அங்குள்ள குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து ஓரளவு விடுபடுவதற்குக்கூட குறைந்தது 20 ஆண்டுகள் தேவைப்படும் - IRC

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏமன் நாட்டில் போர் நிறுத்தப்பட்டாலும், அங்குள்ள குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து ஓரளவு விடுபடுவதற்குக்கூட குறைந்தது 20 ஆண்டுகள் தேவைப்படும் என்று அனைத்துலக துயர் துடைப்பு அமைப்பான IRC (International Rescue Committee) அறிவித்துள்ளது.

வளங்கள், பன்னாட்டு உதவிகள் என்ற கண்ணோட்டத்தில் காணும்போது, ஏமன் போரினால், இவ்வுலகிற்கு 100 கோடி டாலர் வரை இழப்பு ஏற்படும் என்று கூறும், IRC அமைப்பின் அறிக்கை, உலகிலேயே, உணவு பற்றாக்குறையால், அதிக அளவில் துன்புறும் நாடாக ஏமன் விளங்குகிறது என்றும் தெரிவிக்கிறது.

ஏமன் நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போரின் விளைவுகளை, மனிதாபிமான உதவிகள் வழியாக மட்டும் சீராக்க இயலாது, ஏனெனில், ஈரான், மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் துணையோடு இடம்பெற்றுவந்த இந்தப் போர், தற்போது, அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கிலாந்து, மற்றும் மேற்கத்திய அரசுகள் சிலவற்றின் ஆயுத உதவிகளுடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்று, IRC அமைப்பின் தலைவர், David Miliband அவர்கள் கூறியுள்ளார்.

ஏமன் நாட்டில் இதுவரை, போரினால் 90,000த்திற்கும் அதிகமானோர் உயிர் துறந்துள்ளனர்; ஏறத்தாழ 80 விழுக்காட்டு மக்கள், அதாவது, 2 கோடியே, 40 இலட்சம் மக்கள் உணவு உதவிகளைச் சார்ந்து வாழ்கின்றனர் என்று ஆசிய செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2019, 16:04