தேடுதல்

வெனிஸ் நகரில், வெள்ளத்தால் சூழப்பட்ட புனித மாற்கு பெருங்கோவில் வளாகம் - கோப்புப் படம் வெனிஸ் நகரில், வெள்ளத்தால் சூழப்பட்ட புனித மாற்கு பெருங்கோவில் வளாகம் - கோப்புப் படம் 

பூமியில் புதுமை – மூழ்கிவரும் வெனிஸ் நகரம்

கடந்த 50 ஆண்டுகள் காணாத அளவு மோசமான வெள்ளம் வெனிஸ் நகரைச் சூழ்ந்ததால், இத்தாலிய அரசு, அவசர நிலையை அப்பகுதியில் அறிவித்தது. அந்நகரில் உள்ள புனித மாற்கு பெருங்கோவிலில் நீர் புகுந்தது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

'மிதக்கும் நகரம்' என்று உலகெங்கும் அறியப்படும் வெனிஸ் நகரம், தற்போது, 'மூழ்கிவரும் நகரம்' என்று பெயர் பெற்றுள்ளது. இத்தாலிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை, பெரிதும் கவர்ந்திழுக்கும் வெனிஸ் நகரம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகள் காணாத அளவு மோசமான வெள்ளம் அந்நகரைச் சூழ்ந்ததால், இத்தாலிய அரசு, அவசர நிலையை அப்பகுதியில் அறிவித்தது. அந்நகரில் உள்ள புனித மாற்கு பெருங்கோவிலில் நீர் புகுந்தது. ஏறத்தாழ 1000 ஆண்டுகள் வரலாறு கொண்ட இக்கோவிலில், ஐந்தாவது முறையாக வெள்ளம் புகுந்துள்ளது.

அதிகரித்துக்கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதல், கடல்மட்ட உயர்வுக்கு வழிவகுக்கிறது; இத்துடன், அளவற்ற வகையில், நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுவதாலும், புகழ்பெற்ற வெனிஸ் நகர் மூழ்கிவருகிறது என, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கடல் அலைகளின் போக்கைப் பதிவுசெய்யத் தொடங்கியுள்ள, கடந்த 147 ஆண்டுகளில், இதுபோன்று நிகழ்வுகள், 22 முறை பதிவாகியுள்ளன. அவற்றில், 1872லிருந்து 1950 வரையிலான 78 ஆண்டுகளில், ஒருமுறை மட்டுமே ஏற்பட்டுள்ள அதீதப் புயல் அலை, 1951 முதல் 2000 வரை, ஒன்பது முறையும்; 2001லிருந்து 2017 வரை ஏழு முறையும்; கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐந்து முறையும் பதிவாகியுள்ளது. இறுதி மூன்று நிகழ்வுகள், இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் நிகழ்ந்திருக்கின்றன.

உலக வானிலை ஆய்வு அமைப்பு தரும் தரவுகளின்படி, நவம்பர் மாதத்தில் இதுபோன்ற புயல்கள் இத்தாலியின் கடற்பகுதியை ஒட்டி உருவாவது இயல்புதான் என்பது தெளிவாகிறது. புயலின்போது, அட்ரியாடிக் கடலில் இருந்து வெனிஸ் நகருக்குள் கடல்நீரை காற்று தள்ளியதுதான், வெள்ளம் ஏற்பட்டதுக்கு முதன்மைக் காரணம். இதுபோன்ற நிகழ்வுக்கு, ‘உயர்நிலை நீர்’ என்று பொருள்படும் ‘ஆக்வா ஆல்த்தா’ (acqua alta) என்று பெயர்.

மனிதச் செயல்பாடுகளாலும், அதோடு இணைந்த மற்ற வளர்ச்சித் திட்டங்களாலும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமே, வெனிஸ் நகரை மூழ்கடித்துவரும் வெள்ளத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. ஒரு பக்கம், பருவநிலை மாற்றம், தீவிர புயல்களை அடிக்கடி உருவாக்கி, கடல்மட்டத்தை உயர்த்திக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம், கட்டடப் பணிகள் போன்ற காரணங்களுக்காக, நிலத்தடி நீர் அளவுக்கு மீறி உறிஞ்சப்படுவது, கடல் அரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை உருவாக்குகின்றன என்றும், எதிர்காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். – நன்றி: இந்து தமிழ் திசை, ஊடகச் செய்திகள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2019, 14:24