தேடுதல்

மனித வாழ்வின் மாண்பு மனித வாழ்வின் மாண்பு 

வாரம் ஓர் அலசல் – வாழ்வோம், வாழ உதவுவோம்

ஒவ்வொரு மனிதரும், அவர் ஆற்றிய மோசமான செயலைவிட, அவர் மதிப்புமிக்கவர். ஒருவர் செய்த பாவம் எதுவாக இருந்தாலும், அவர் மாண்புடன் இறப்பதற்குத் தகுதியுடையவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு நாள், ஒரு புழு, மண்ணைக் கீறிக்கொண்டு வெளியே வந்தது. அது சிறிது காலம் வாழ்ந்தது. அந்தப் புழுவை ஒரு பூச்சி சாப்பிட்டது. அதுவும் கொஞ்சக் காலம் உயிரோடு வாழ்ந்தது. அந்தப் பூச்சியை ஒரு வண்டு சாப்பிட்டது. வண்டும் கொஞ்சக் காலம் உயிரோடு வாழ்ந்தது. அந்த வண்டை, ஒரு கார் காலத்தில், ஒரு தவளை சாப்பிட்டு அதுவும் நன்றாக வாழ்ந்தது. ஒரு மழைக்கால இரவில், அந்த தவளையின் பாடல் கேட்டு ஒரு பாம்பு வந்தது. பாம்புக்குத் தவளை உணவாகப் போனது. பாம்பும் கொஞ்சக் காலம் உயிரோடு வாழ்ந்தது. ஒரு நாள் உயரத்தில் பறந்த கழுகின் கண்களுக்கு, நூடுல்ஸ்ஸாக, அந்தப் பாம்பு தென்பட்டது. கழுகும் கீழே பறந்துவந்து பாம்பைக் கொத்திச் சென்று ருசித்துச் சாப்பிட்டது. பாம்பைத் தின்ற கழுகும் நன்றாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தது. திடீரென ஒருநாள் வேடனின் குறிதவறாத அம்புக்கு கழுகு பலியாகி கீழே விழுந்தது. வேடனும், அந்தக் கழுகை வீட்டிற்கு எடுத்துக்கொண்டுபோய் சமைத்து குடும்பத்தினரோடு மகிழ்ந்து சாப்பிட்டான். ஒருநாள் வேடனும் இறந்தான். மண்ணில் புதைக்கப்பட்டான். ஒரு நாள் வேடன் புதைக்கப்பட்ட இடத்தில், மண்ணைக் கீறிக்கொண்டு ஒரு புழு வெளியே வந்தது. இந்த கதையை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். மனித வாழ்க்கை பற்றி இது உணர்த்தும் நல்லதொரு பாடத்தையும் சிந்தித்திருக்கிறோம்.

புழுவிலிருந்து தொடங்கி புழுவில் முடிவது...

ஒரு புழுவிலிருந்து தொடங்கி ஒரு புழுவில் முடிவதுதான் நம் வாழ்க்கை. இவ்வளவு சிறிய, குறுகிய கால வாழ்வில், மனதைக் கொஞ்சம் விசாலமாக்கி அன்பு, சமுதாயநலம், சமுதாய அக்கறை போன்ற பண்புகளில் நாமும் வாழ்ந்து மற்றவரும் வாழ உதவினால், வாழ்வு சுமையாக இல்லாமல், இலகுவாக இருக்கும். ஓர் ஆற்றில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் அது போட்ட இடத்திலே கிடக்கும். ஆனால் ஓர் இலையை  எடுத்துப் போட்டால் அது ஆற்றின் நீரோட்டத்தோடு பயணித்துக்கொண்டேயிருக்கும். அதேபோல் நம் மனதை கல்லாக வைத்துக்கொண்டிருந்தால் வாழ்வும், முன்னோக்கி இயங்க இயலாது. அதற்கு மாறாக, நம் மனதை இலையைப் போல் வைத்திருந்தால், வாழ்வுப் பயணமும் நீண்ட தூரம் செல்லும். நம்மைப் படைத்த கடவுளும், நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்கேற்றால்போல்தான் இந்த பூமியை அற்புதமாகப் படைத்திருக்கிறார். எப்படியெனில், நாம் வாழ்கின்ற இந்த அழகான, பொதுவான இல்லமாகிய பூமிக்கோளம் இப்போது இருக்கும் இடத்திலிருந்து பத்து விழுக்காடு சூரியனின் நீள்வட்டப் பாதைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தால் அது எரிந்து சாம்பலாகியிருக்கும். பத்து விழுக்காடு தள்ளி இருந்திருந்தாலும் அது உறைந்துபோயிருக்கும். நம் பூமி, ஐந்தில் ஒரு பங்கு நிலாவுக்கு அருகில் இருந்திருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு சுனாமிகள் வரும் என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். எனவே மனிதர்களாகிய நாம் மகிழ்வாக வாழ்வதற்காக, அவ்வளவு அற்புதமாக கடவுள் அமைக்கத்திருக்கும் இப்பூவுலகில், நாமும் மகிழ்வோடு வாழ்ந்து மற்றவரும் மகிழ்வோடு வாழ உதவினால் இந்த அழகான வாழ்வு சுமையாக அமையாது (நன்றி - யுடியூப் A.ரஹ்மான், முத்துப்பேட்டை – கவிதா ஜவகர்). குவைத்தில், இறந்த கோடீஸ்வரர் ஒருவரின் சொத்துக்களை, பல்லாயிரக்கணக்கான வாட்சப் நண்பர்கள் பகிர்ந்துகொண்டனர். அவரின் உடல் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஒருவர் எவ்வளவுதான் செல்வங்களை அனுபவித்திருந்தாலும், அவர் இந்த உலகைவிட்டுச் செல்கையில் தன்னோடு எடுத்துச்செல்வது ஆறடிநிலம்தான் என்பதை நண்பர்கள் பதிவு செய்திருந்தனர். இதுதான் மானிடர் வாழ்க்கை. இறந்த அனைவரையும் சிறப்பாக நினைக்கும் இந்த நவம்பர் மாதத்தில், நிலையில்லா, நிரந்தரமில்லா மனித வாழ்வு பற்றிச் சிந்திப்பது நல்லது.

கவலை என்ற கெட்ட பழக்கம்

மதுபானம், சிகரெட், புகையிலை, போதைப்பொருள் போன்ற பழக்கங்களுக்கு அடிமையானவர்களைக் கண்டு முகம் சுளிக்கிறோம். ஆனால், நம் மனதை நாளும் அரித்துக்கொண்டிருக்கின்ற வேறுபல கெட்ட பழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு இன்றி உள்ளோம். அவை கெட்ட பழக்கங்கள் என்று தெரியாமலே, அவற்றிற்கு அடிமையாகி விடுகின்றோம். அவற்றில் ஒன்றுதான் எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே, வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பது. இது கெட்ட பழக்கம் என்றே நமக்குத் தெரியாமல் தினமும் இந்தப் போதைக்கு அடிமையாகியுள்ளோம். அண்மையில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில், ஏறத்தாழ எண்பது விழுக்காட்டு மக்கள், ஏதாவது ஒரு காரணத்திற்காக கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம்மிடம் ஒரு பழக்கம் இருந்தால், நம் சிந்தனை எப்போதும் அதிலேதான் ஊன்றியிருக்கும். சிந்தித்துப் பார்ப்போமே! நம் எண்ணங்களும், சிந்தனைகளும் எப்போதும் எதில் மூழ்கியுள்ளன என்று. சிறிது நேரம் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து, ஒருநாளில் எவ்வளவு நேரம் மகிழ்வாக இருக்கிறேன், எவ்வளவு நேரம் புலம்பலில் இருக்கிறேன் என்று யோசித்துப் பார்ப்போமே. நிறைய நேரம் கவலையில் அல்லது, சோகத்தில் இருப்பதாக உணர்ந்தால், இந்த ஒரு எளிய பயிற்சியை முயற்சி செய்யலாம். நம் மூளையைப் பயிற்றுவிப்பது நம் கையில்தான் உள்ளது. ஏனெனில் நமக்கு நாம்தானே முதலாளிகள். நம்மைப் பற்றி நம்மையன்றி வேறு யாரால், அக்குவேர், ஆணிவேராக அறிந்திருக்க முடியும்! உண்மை நிலையை மறைத்து மற்றவர்முன் நடிக்கலாம். அது நடிப்புதான். ஏதாவது ஒருநாள் அந்த வேடம் கலைந்துவிடும். உங்களில் யாராவது, வருத்தம் என்ற கெட்ட பழக்கத்தில் மூழ்கியிருக்கையில், உங்கள் வாழ்வில் நடந்த, நல்ல மகிழ்வான நிகழ்வுகளை நினைத்துப் பாருங்கள். இதுநாள்வரை உயிரோடு வாழ்வதே ஒரு கொடைதானே. கிடைத்திருக்கும் பெற்றோர், பிள்ளைகள், நல்ல உறவுகள், நல்ல நண்பர்கள் எல்லாருமே கொடைகள்தானே. இதுநாள்வரை கடந்துவந்திருக்கின்றோமென்றால் அதுவும் இறைவனின் கொடைதானே. இறைவனின் அருள்தானே. இப்படி நமக்குக் கிடைத்திருக்கும் நல்லவற்றை நினைத்து மகிழ்வடையும்போது நம் சிந்தனைப் போக்கையே நம்மால் மாற்ற முடியும். கவலைப்பட்டு கவலைப்பட்டு வாழ்வை வீணாக்காமல், வாழ்வில் நடந்திருக்கும் நேர்மறை நிகழ்வுகளை நினைத்து மகிழ்வடைவோம். கடவுளுக்கு நன்றி சொல்வோம். நாம் மகிழ்வாக வாழ்ந்தால்தான், மற்றவரும் மகிழ்வாக வாழ உதவ முடியும். மனதிற்குள் மகிழ்வை அனுபவிக்காதவர், பிறர் மகிழ்வோடு இருப்பதைக் காணச் சகியார். மற்றவரது மகிழ்வைக் கெடுப்பதற்கும் ஆர்வமாய் இருப்பார்.

சிங்கப்பூரில் சிறைப்பணி

சிங்கப்பூரில் Gerard Fernandez என்ற ஓர் அருள்சகோதரி, கடந்த நாற்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும் சிறைக்குச் சென்று, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் உரையாடி, இறைவேண்டல் செய்து, அவர்கள் மனச் சிறையிலிருந்து விடுபட உதவி வருகிறார். சிங்கப்பூரில் Toa Payoh என்ற நகரில், 1981ம் ஆண்டு சனவரி மாதம் 25ம் தேதி ஒன்பது வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டு, ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் மின்தூக்கி அருகில் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தார். இது நடந்து இரு வாரங்கள் சென்று, பத்து வயது சிறுவன் ஒருவனும் அதேபோல் கொல்லப்பட்டிருந்தான். Tan Mui Choo என்ற பெண், அவரது கணவர் Adrian Lim, பணியாள் Hoe Kah Hong ஆகிய மூவரும், தங்களின் மதச்சடங்கின் ஒரு பகுதியாக, இக்கொலைகளைச் செய்ததாக ஒப்புக்கொண்டனர். இக்கொலைகள், அந்நாட்டு வரலாற்றில் செய்யப்பட்ட மிகக் கொடூரமான குற்றம் என்று கருதப்படுகிறது. இவர்கள் மூவரும் 1988ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இக்கொலைக் குற்றவாளிகளில் ஒருவர் Tan என்பதை அறிந்த அருள்சகோதரி Gerard Fernandez அவர்கள், 1981ம் ஆண்டில், அவருக்கு கடிதங்கள் எழுதத் தொடங்கினார். அந்த கடிதத் தொடர்பு ஏழு ஆண்டுகள் நீடித்தது. தற்போது 81 வயது நிரம்பிய அருள்சகோதரி Gerard Fernandez அவர்கள், இது பற்றி பிபிசி ஆங்கில ஊடகத்திடம் கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட Tan, எனது முன்னாள் மாணவி. கத்ரீன் என அறியப்பட்ட இவர், இனிமையான, எளிமையான சிறுமியாக இருந்தார். பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவர். அவர் பெரிய தவறைச் செய்துவிட்டார். அக்குற்றம் பற்றிக் கேள்விப்பட்டபோது நான் மிகவும் வருந்தினேன். அவரை நான் அறிந்திருந்ததால், அவரைப் பார்க்க விரும்பினேன். பல ஆண்டுகள் தொடர்ந்து சிறைக்குச் சென்று, பல இரவுகள், நீண்டநேரம் அவரோடு சேர்ந்து செபித்தேன். அதன் பயனாக, டான் அவர்கள், மனச் சிறையிலிருந்து விடுபட்டார் என நம்புகிறேன். 1988ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி காலையில் Tan, தூக்கிலிடப்படும்வரை சிறையில் அவரோடு இருந்தேன். அந்த இறுதி நாள் காலையில், நீலநிறத்தில் உடையணிந்து, பணிப்பெண்ணோடு கைகோர்த்தபடி, அவருக்கு விருப்பமான, ‘ஆண்டவரே நீர் எவ்வளவு பெரியவர்’ என்ற பாடலைப் பாடிக்கொண்டே தூக்கு மேடைக்குச் சென்றார். மிக அமைதியாக அவர் காணப்பட்டார். ஒவ்வொரு மனிதரும், அவர் ஆற்றிய மோசமான செயலைவிட, அவர் மதிப்புமிக்கவர். ஒருவர் செய்த பாவம் எதுவாக இருந்தாலும், அவர் மாண்புடன் இறப்பதற்குத் தகுதியுடையவர் என்று கூறியுள்ளார், அருள்சகோதரி பெர்னான்டெஸ். அச்சகோதரியின், நற்பணியால் பல மரண தண்டனை கைதிகள் அமைதியாக மரணத்தைத் தழுவுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களுக்கு நீண்ட அறிவுரைகள் ஆற்றுவதைத் தவிர்த்து, அவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார். பிறரிடம் இரக்கத்துடன் நடந்துகொள்வோம், மகிழ்வோடு வாழ்வோம், பிறரும் மகிழ்வாக வாழ உதவுவோம்

வாரம் ஓர் அலசல் – வாழ்வோம், வாழ உதவுவோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2019, 14:45