தன்னுயிரை பணயம் வைத்து ஆம்புலன்ஸூக்கு உதவிய வெங்கடேஷ் தன்னுயிரை பணயம் வைத்து ஆம்புலன்ஸூக்கு உதவிய வெங்கடேஷ் 

வாரம் ஓர் அலசல்: குழந்தைகள் தினம்

சிறுவன் வெங்கடேஷின் வீர தீரச் செயல் பற்றி செய்தியாளர் கேட்டபோது, அன்று நான் செய்தது வீரச் செயல் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. வழிகாட்ட முடியுமா என்று கேட்டவருக்கு உதவி செய்ய விரும்பினேன், செய்தேன், அவ்வளவுதான் என்று மிகச் சாதாரணமாகப் பதில் சொன்னான்

மேரி தெரேசா: வத்திக்கான்

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்ட நிர்வாகம், 12 வயது நிரம்பிய வெங்கடேஷ் என்ற சிறுவன் பெயரை, வீரதீர விருதுக்கு பரிந்துரை செய்திருப்பதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு செய்தி வெளியானது. அச்சமயத்தில் பெய்த கனமழையால், தேவதுர்கா தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து, குளம் எது? தரைப்பாலம் எது என, கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது, ஆறு குழந்தைகளையும், ஒரு பெண்ணின் சடலத்தையும் தாங்கிக்கொண்டு, அவ்வழியாக அவசர மருத்துவ வாகனம் ஒன்று வந்தது. அப்போது அங்கே இருந்த நீர்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறாரிடம், அந்த வாகன ஓட்டுனர், இங்கே வாகனம் செல்ல ஏதேனும் வழி இருக்கிறதா? என்று கேட்டார். உடனே  வெங்கடேஷ் என்ற சிறுவன், துளி நேரமும் தாமதிக்காமல், அந்த ஓட்டுநரிடம், தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி, மேம்பாலத்தில் ஓடும் வெள்ளத்தைக் கிழித்துக்கொண்டு ஓடினான். அவனைப் பின்தொடர்ந்து, அவசர மருத்துவ வாகனமும் சென்றது. வெள்ளம் சூழ்ந்திருந்ததால் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிவாரண முகாமில் தங்கியிருந்தனர். அரசுப் பள்ளியில் 6ம் வகுப்புப் படிக்கும், சிறுவன் வெங்கடேஷிடம், அவனது வீர தீரச் செயல் பற்றி செய்தியாளர் கேட்டபோது, அன்று நான் செய்தது வீரச் செயல் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. வழிகாட்ட முடியுமா என்று கேட்டவருக்கு உதவி செய்ய விரும்பினேன், செய்தேன், அவ்வளவுதான் என்று, மிகச் சாதாரணமாக பதில் சொல்லியுள்ளான் (நன்றி-தினமணி). ஆம், வளர்ந்தவர்கள், சிறாரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. “வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தைபோல் இரு. அதற்கு அவமானம் தெரியாது. விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்” என்று சொல்வார்கள்.

நவம்பர் மாதம்

நவம்பர் மாதம் என்றாலே, அதிகம் நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். வருங்காலத்தில் உலகை ஆளப்போகிற இவர்கள், வெள்ளை மனம் கொண்டவர்கள். எனவே இவர்களை மகிழ்விப்பதற்காக, இவர்களின் திறமைகளை ஊக்குவித்து வளர்ப்பதற்காக, இவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் நல்வாழ்வுக்கு வழியமைப்பதற்காக, உலக நாடுகள், குழந்தைகள் நாளை, வசதிக்கேற்ப சிறப்பிக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டு Massachusetts மாநிலத்தின், Chelseaவில், மீட்பரின் உலகளாவிய கிறிஸ்தவ சபை போதகர் சார்லஸ் லெயோனார்ட் அவர்கள், 1857ம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று குழந்தைகள் நாளைச் சிறப்பிக்கத் துவங்கினார். அன்றைய நாளை குழந்தைகளுக்கென அர்ப்பணித்து, அவர்களுக்காகச் சிறப்பாகச் செபித்தார். லெயோனார்ட் அவர்கள், இந்த நாளை முதலில் ‘Rose’ நாள் என்று பெயரிட்டார். பின்னாளில் அந்நாள், ‘மலர்’ ஞாயிறு எனவும், பின்னர் ‘குழந்தைகள் நாள்’ எனவும் மாற்றப்பட்டது.

குழந்தைகள் நாள்

உலகில் முதன்முதலில் துருக்கி குடியரசு, 1920ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி, குழந்தைகள் நாளைச் சிறப்பித்தது. ஆயினும், துருக்கி குடியரசை உருவாக்கியவரும், அந்நாட்டு முன்னாள் அரசுத்தலைவருமான Mustafa Kemal Atatürk அவர்கள், 1929ம் ஆண்டில், குழந்தைகள் நாளை, தேசிய அளவில் அரசுமுறைப்படி அறிவித்தார். பின்னர், 1950ம் ஆண்டிலிருந்து, ஜூன் மாதம் முதல் தேதியன்று, பல நாடுகள் குழந்தைகள் பாதுகாப்புக்கென, ஒரு நாளைக் கொண்டாடத் துவங்கின. இந்த நாள், மாஸ்கோவில் 1949ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி நடைபெற்ற, உலகளாவிய பெண்கள் சனநாயக கூட்டமைப்பு மாநாட்டில் உருவாக்கப்பட்டது. பின்னர், ஐ.நா. பொது அவை, 1959ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியன்று, சிறார் உரிமைகள் பற்றிய அறிக்கையை உருவாக்கியது. அந்த நாள் உலக குழந்தைகள் நாளாக, பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. பஹாமாஸ், டுனிசியா, தாய்லாந்து நாடுகளில் சனவரி மாதத்திலும், மியான்மார் நாட்டிலும், கூக், நவ்ரு, கேமேன் போன்ற தீவுகளில் பிப்ரவரி மாதத்திலும், நியுசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மார்ச் மாதத்திலும், எல் சால்வதோர், குவாத்தமாலா, இலங்கை, ஈரான், பிரேசில், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அக்டோபர் மாதத்திலும், தென்னாப்ரிக்கா, இந்தியா, கானடா, உட்பட பல நாடுகளில் நவம்பர் மாதத்திலும் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவில் குழந்தைகள் நாள்

இந்தியாவில், குழந்தைகள் நாள், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ம் தேதி, கொண்டாடுப்படுகின்றது. நவம்பர் 14, குழந்தைகள் நலனில் தனிப்பட்ட அக்கறை எடுத்த, நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் பிறந்த நாள். இரண்டாம் உலகப் போரில் கடுமையான பாதிப்பை அனுபவித்த ஜப்பான் நாட்டுக் குழந்தைகள், யானை ஒன்றை அனுப்பி வைக்குமாறு, நேரு அவர்களுக்கு கடிதத்தின் வாயிலாக அன்புடன் வேண்டுகோள் விடுத்தனர். குழந்தை உள்ளம் படைத்தவரும், குழந்தைகள் மீது அளப்பரிய அன்பும் கொண்டிருந்த நேரு அவர்களும், உடனே யானைக்குட்டி ஒன்றை "இந்திரா' என்று பெயரிட்டு 1950ம் ஆண்டில் அனுப்பி வைத்தார். இதே யானையை, சில ஆண்டுகள் கழித்து ஜப்பான் நாட்டுக்குச் சென்றபோது நேருஜி கண்டு மகிழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. ஒருமுறை, குஜராத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், ஜவகர்லால் நேரு அவர்களும், மற்ற சிலரும் பேசி முடித்ததும், காமராஜர் அவர்களும் பேச வேண்டும் என மக்கள் விரும்பினர். காமராஜர் அவர்களும் ஐந்து நிமிடம் பேசினார். மக்கள் கைதட்டித் தங்கள் உற்சாகத்தைத் தெரிவித்தனர். மேடையிலுள்ள ஒருவர் எழுந்து, இப்போது பேசிய காமராஜர் அவர்கள், தமிழில்தான் பேசினார். என்ன புரிந்தது உங்களுக்கு?''என்று மக்களைப் பார்த்துக் கேட்டார். உடனே மக்களில் சிலர், "அவர் நல்லவர். நல்லவர்கள் எப்போதும் நல்லதைத்தான் பேசுவார்கள்'' என்று கூறினர். ஜவகர்லால் நேரு அவர்களும், காமராஜர் அவர்களும் புன்னகைத்தனராம்.

குழந்தைகள் என்றவுடன், "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற பாடல் வரிகள், அடிக்கடி நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான், அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள். குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விடயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழகுவதற்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு இடையே உடன்பிறந்தநிலை, உதவும் மனப்பான்மை ஆகியவை வளரும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகளின் முழு ஆளுமை வளர்ச்சியில், பெற்றோருக்கு மட்டுமல்ல,  கல்வியறிவை வழங்கும் ஆசான்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஒரு நல்ல ஆசிரியர் பற்றி படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்து கொள்கிறோம்.   

ஆசிரியர் திருமதி தாம்ப்சன்

ஆசிரியர் திருமதி தாம்ப்சன் (Thompson) அவர்கள், ஒவ்வொரு திங்கட்கிழமை காலையில் வகுப்பினுள் நுழைகையில், மாணவர்களைப் பார்த்து 'உங்கள் அனைவரையும் அன்புகூர்கிறேன்’ என்று சொல்வது வழக்கம். ஆயினும், மாணவன் டெடி (Teddy) என்ற தியோடரை மட்டும் அவரால் அன்புகூர இயலவில்லை. ஏனெனில் அவனை எடுத்துக்காட்டாய்ச் சுட்டிக்காட்டுவதற்கு அவனிடம் எதையும் அவர் காணவில்லை. அந்த ஆண்டு காலாண்டு தேர்வு முடிந்து, மதிப்பெண் அட்டைகளில் கையெழுத்து போடுவதற்காக, டெடி பற்றி ஆசிரியர் எழுதியிருந்த 'முன்னேற்ற அறிக்கையைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார் தலைமை ஆசிரியர். ஏனெனில் மாணவன் டெடிதான், வகுப்பின் மிகத்திறமையான மாணவன் என்று, மூன்றாம் வகுப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவனின் நான்காம் வகுப்பு அறிக்கையில், 'டெடியின் தாய் இறுதிநிலை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது என்றும், ஐந்தாம் வகுப்பு அறிக்கையில், "டெடியின் அன்னை இறந்துவிட்டார். அவனுக்கு உடனடியாக வழிகாட்டல் தேவை. இல்லையேல் நாம் அந்தக் குழந்தையை இழந்து விடுவோம் என்றும் எழுகப்பட்டிருந்தது. இதை வாசித்த தாம்ப்சன் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அதற்குப்பின், டெடி மீது தனக்கிருந்த அணுகுமுறையை மாற்றினார் தாம்ப்சன். அவ்வாண்டின் பள்ளி இறுதி நாளில், எல்லா மாணவர்களும் கொண்டுவந்திருந்த பரிசுகளில், ஒரு பெட்டி மட்டும் ஒரு பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. முதலில் அதையே பிரித்தார் ஆசிரியர் தாம்ப்சன். அதனுள் நறுமண பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த வளையல் ஒன்றும் இருந்தன. அந்தப் பரிசு டெடி கொண்டுவந்தது என்பதை அறிந்த மாணவர்கள் நகைத்தனர். ஆனால் ஆசிரியர் தாம்ப்சன், உடனடியாக அந்த வளையலை கையில் அணிந்துகொண்டார். அந்த நறுமணத்தை தன்மீது பூசிக்கொண்டார். மெல்லியதாய் ஒரு புன்னகையுடன் டெடி சொன்னான், ''இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பயன்படுத்திய நறுமணம் இதுதான். இந்த வளையல்தான், சவப்பெட்டிக்குள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது” என்று. அதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், ‘நான் நிறைய ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறேன், ஆயினும், நீங்களே சிறந்த ஆசிரியர்’, அன்புடன் டெடி என்ற வரிகளைத் தாங்கிய கடிதம், ஆசிரியர் தாம்ப்சனுக்கு வந்துகொண்டிருந்தது. இடையில் கடிதப் போக்குவரத்து நின்றுபோயிருந்தது. ஆசிரியர் தாம்ப்சனும் ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகள் சென்று, திருமண அழைப்பிதழ் மற்றும், விமானப் பயணச்சீட்டுடன் ஒரு கடிதம் வந்தது. “என் வாழ்வில், மேலும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், ஆயினும் நான் பார்த்ததில், நீங்களே சிறந்த ஆசிரியர், உங்களின் பிரசன்னம் இன்றி, நான் திருமணம் செய்துகொள்வதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது, இது உங்களின் டெடி, அன்புடன் டாக்டர் Theodore F. Stoddard, M.D.” என அதில் எழுதப்பட்டிருந்தது. திருமண நிகழ்வில், முன் வரிசையில், ஆசிரியர் தாம்ப்சனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில், ''அன்னை" என எழுதப்பட்டிருந்தது. தாம்ப்சனும், டெடி பரிசளித்த வளையலை அணிந்து வந்திருந்தார். நிகழ்வின் முடிவில் டாக்டர் டெடி, "திருமதி தாம்ப்சன் அவர்களே, என் மீது நம்பிக்கை வைத்திருந்தமைக்கு நன்றி. நான் இந்த அளவுக்கு முன்னேறவும், நான் இவ்வளவு முக்கியமானவனாக உணரவும் செய்தமைக்கு நன்றி" என்று காதில் முணுமுணுத்தார். அப்போது தாம்ப்சன் அவர்கள், "டெடி, உன்னைச் சந்திக்கும்வரை எவ்வாறு கற்பிப்பது என்பதை அறியாதிருந்தேன், நீ என்னை இவ்வளவு தூரம் மாற்றியதற்கு நன்றி" என்று சொன்னார்.      

இக்காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். ஆயினும், ஓர் அன்னையாக அன்பைப் பொழியும் ஆசிரியர்களால், பள்ளிப் பருவத்திலிருந்தே சிறந்த ஆளுமையில் வளரும் குழந்தைகள் உள்ளனர்தாம். குழந்தை எப்படி வளர்க்கப்படுகின்றது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் அமைகிறது. எனவே குழந்தைகளை ஆரம்பத்திலிருந்தே சிறந்த முழுஆளுமையில் வளர்ப்பது பொறுப்பிலுள்ளோர் கடமையாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2019, 15:15