தேடுதல்

Vatican News
மெக்சிகோ எல்லைச் சுவருக்கருகே வைக்கப்பட்டுள்ள பெர்லின் சுவரின் ஒரு துண்டு மெக்சிகோ எல்லைச் சுவருக்கருகே வைக்கப்பட்டுள்ள பெர்லின் சுவரின் ஒரு துண்டு  (2019 Getty Images)

மெக்சிகோ எல்லைச் சுவரில் நம்பிக்கை தரும் ஓவியங்கள்

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவின்போது, பெர்லின் நகர் மக்கள், அச்சுவரின் ஒரு பகுதியை, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு, இவ்வாண்டு நவம்பர் 9ம் தேதி அனுப்பி வைத்தனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், மெக்சிகோவுக்கும் இடையே எழுப்பப்பட்டுள்ள எல்லைச் சுவரின் மெக்சிகோ நாட்டு பகுதியில், நம்பிக்கையளிக்கும் பல ஓவியங்களை கிறிஸ்தவ அமைதி உருவாக்குவோர் குழுவினர் தீட்டிவருகின்றனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இவ்விரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைச் சுவர் அடக்குமுறையின் ஓர் அடையாளம் என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அதே வேளை, அந்த எல்லைச் சுவரைக் காண்போர் மனதில் நம்பிக்கையை உருவாக்கும் வகையிலும் இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று, இக்குழுவினர் கூறியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டைப் பிரித்துவைக்கும் முயற்சியாக எழுப்பப்பட்டுள்ள இந்தச் சுவரில், தென் அமெரிக்க நாடுகளின் சின்னங்களாக விளங்கும் பல்வேறு மலர்கள், உயிரினங்கள் ஆகியவை இந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ளன என்று இவ்வமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மேலும், 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவின்போது, பெர்லின் நகர் மக்கள், அச்சுவரின் ஒரு பகுதியை, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு, இவ்வாண்டு நவம்பர் 9ம் தேதி அனுப்பி வைத்தனர்.

"எந்த ஒரு சுவரும் என்றென்றும் நிலைப்பதில்லை. பெர்லின் சுவர் இடிக்கப்படுவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் பெருமளவு உதவினர்" என்ற சொற்கள் அடங்கிய ஒரு மடலை, பெர்லின் நகர மக்கள், இச்சுவரில் பொறித்து அனுப்பியிருந்தனர்.

அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், இதனைப் பெறுவதற்கு மறுத்ததால், இந்த நினைவுச்சின்னம் தற்போது, அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே சுவர் எழுப்பப்பட்டுள்ள கலிபோர்னியாவின் San Ysidro எனுமிடத்தில் நவம்பர் 16ம் தேதி வைக்கப்பட்டது. (ICN)

28 November 2019, 14:57