தேடுதல்

Vatican News
டச்சு நாடாளுமன்றத்தில் 7வது, 8வது வகுப்பு மாணவர்கள் டச்சு நாடாளுமன்றத்தில் 7வது, 8வது வகுப்பு மாணவர்கள்  (ANSA)

சிறார் உரிமைகள் ஒப்பந்தத்தின் 30ம் ஆண்டு நிறைவு

18 வயதுக்குட்பட்ட சிறாரின் உரிமைகள் குறித்த உலக ஒப்பந்தம், 1989ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நாடுகளின் கையெழுத்துக்கு வைக்கப்பட்டது. இதில் 194 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கடந்த முப்பது ஆண்டுகளில் சிறாரின் வாழ்வை முன்னேற்றுவதில் வரலாற்று சாதனைப் படைக்கப்பட்டிருந்தாலும், இதே முன்னேற்ற உணர்வை, கடும் வறுமையில் வாடும் சிறாரும் அனுபவிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்று, யுனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறியது.

நவம்பர் 20, இப்புதனன்று, உலக குழந்தைகள் நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, நவம்பர் 18, இத்திங்களன்று வெளியிட்ட இவ்வறிக்கை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய, ஐ.நா. வின், யுனிசெப் குழந்தை நல அமைப்பின் இயக்குனர் Henrietta Fore அவர்கள், இவ்வாறு கூறினார்.

முப்பது ஆண்டுகளுக்குமுன் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறார் உரிமைகள் ஒப்பந்தம் செயல்படுத்துவதற்கு, நாடுகள் தங்கள் அர்ப்பணத்தைப் புதுப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள Fore அவர்கள், சத்துணவின்மை, கல்வி வசதியின்மை, நலப் பிரச்சனைகள் போன்றவை தவிர, இக்காலத்தில் புதிய பிரச்சனைகளையும் சிறார் எதிர்கொள்கின்றனர் என்று கூறினார்.

காலநிலை மாற்றம், இணையதளத்தில் உரிமை மீறல்கள், டிஜிட்டல் உலகில் புண்படுத்தப்படல் போன்றவற்றாலும் சிறார் துன்புறுகின்றனர் என்று கூறிய Fore அவர்கள், புதிய தொழில்நுட்பம், அரசியல் விருப்பம், வளங்களை அதிகரித்தல் போன்றவையே, சிறார் உரிமைகள் ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதற்கு உதவும் என்று கூறினார்.

1989ம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட சிறார் உரிமைகள் உலக ஒப்பந்தத்தில், 190க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இது நடைமுறைக்கு வர, இன்னும்  இரண்டு நாடுகளின் கையெழுத்து தேவைப்படுகின்றது. (UN)

19 November 2019, 15:06