யுனெஸ்கோ கூட்டத்தில் கலந்துகொண்ட இளையோருடன் ஐ.நா. அவையின் தலைமைச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் யுனெஸ்கோ கூட்டத்தில் கலந்துகொண்ட இளையோருடன் ஐ.நா. அவையின் தலைமைச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் 

முன்னேற்றத்தை உருவாக்க, கல்வி ஒரு முக்கிய தூண்

கல்வி வாய்ப்புக்களில் உலகெங்கும் நிலவும் வேறுபாடுகளை நீக்குவதும், அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி வாய்ப்பை உருவாக்குவதும் நம் தலைமுறையினரின் முக்கிய கடமை - Muhammad-Bande

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2030ம் ஆண்டிற்குள், நீடித்து நிலைத்திருக்கும் முன்னேற்ற இலக்குகளை அடைவதற்கு, கல்வி ஒரு முக்கிய தூணாக உருவாக்கப்படவேண்டும் என்று ஐ.நா. அவையின் தலைமைச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஐ.நா. அவையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான, யுனெஸ்கோ, கல்வியின் எதிர்காலம் என்ற தலைப்பில் நவம்பர் 12, இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டு கூட்டத்தில், கூட்டேரஸ் அவர்களின் எண்ணத்தை வலியுறுத்தி, ஐ.நா. அவை அமர்வின் தலைவர் Tijjani Muhammad-Bande அவர்கள் தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

இன்றைய நிலவரப்படி, உலகில், 26 கோடியே 50 இலட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பின்றி உள்ளனர் என்று கூறிய Muhammad-Bande அவர்கள், அடுத்த பத்தாண்டுகளில், இந்த எண்ணிக்கை, 22 கோடியாக குறைந்துவிடும் என்றாலும், இந்த எண்ணிக்கை, நம் தலைமுறைக்கு ஒரு பெரும் அவமானச் சின்னமாக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டார்.

கல்வி வாய்ப்புக்களில் உலகெங்கும் நிலவும் வேறுபாடுகளை நீக்குவதும், அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி வாய்ப்பை உருவாக்குவதும் நம் தலைமுறையினரின் முக்கிய கடமை என்பதையும் Muhammad-Bande அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இந்தக் கல்வி மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த இளையோரை, இச்செவ்வாய் காலையில் சந்தித்த ஐ.நா. அவையின் தலைமைச்செயலர் கூட்டேரஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில், "நாம் காப்பாற்ற வேண்டியவர்களாக இளையோரைக் காண்பதை விடுத்து, அவர்களே சமுதாய மாற்றங்களின் செயல்வீரர்கள் என்ற கண்ணோட்டத்தில் அவர்களைக் காணவேண்டும்" என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2019, 14:59