அமெரிக்க ஐக்கிய நாட்டில் போக்குவரத்தால் அதிக காற்று மாசுக்கேடு இடம்பெறுகிறது அமெரிக்க ஐக்கிய நாட்டில் போக்குவரத்தால் அதிக காற்று மாசுக்கேடு இடம்பெறுகிறது 

பூமியில் புதுமை : காலநிலை மாற்ற பாரீஸ் ஒப்பந்தம்

பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், காலநிலை மாற்றம் தொடர்பான, உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தம் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் கையெழுத்தானது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள 188 நாடுகள் இணைந்து உருவாக்கியதுதான், பாரீஸ் ஒப்பந்தம். தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய நிலையைவிட, இரண்டு டிகிரி செல்சியசுக்கு மிகாமல் புவியின் வெப்பநிலையைப் பாதுகாக்கவேண்டும் என்ற இலக்கை, பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தம் முன்வைத்தது. பலத்தப் புயல்கள், வறட்சிகள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்தல் உள்பட, ஆபத்தான காலநிலை மாற்றங்களைத் தவிர்ப்பதற்கு, இந்த இலக்கு முக்கியமானது என்று, அறிவியலாளர்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் காலநிலை மாற்றம் தொடர்பான, உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தம், 2015ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கையெழுத்தானது. பாரக் ஒபாமா அமெரிக்க ஐக்கிய நாட்டின் அதிபராக இருந்த காலத்தில், அந்நாடும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால், தற்போதைய அதிபர், டோனால்ட் டிரம்ப் அவர்கள், தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், இதிலிருந்து வெளியேறவும் முடிவெடுத்துள்ளார். அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பின்தள்ள மேற்கொள்ளப்படும் அனைத்துலக சதி என்றுகூட இவ்வொப்பந்தத்தை அவர் விமர்சித்தார்.

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது, மோசமான விளைவுகளை ஏற்படுத்துமென, அனைத்துலக, மற்றும், ஐரோப்பிய விவகார மையம், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே எச்சரித்திருந்தது. பிற நாடுகளும் அமெரிக்காவை பின்பற்றக்கூடும் என்றும், அம்மையம் கூறி இருந்தது. இந்த ஒப்பந்தம், செயல்பாட்டிற்கு வருவதற்கு, உலகின் ஒட்டுமொத்த பசுங்குடில் வாயுக்களில், குறைந்தது 55 விழுக்காட்டை வெளியேற்றுகின்ற 55 நாடுகள், இதனை ஏற்றுக்கொள்வது அவசியமாகியது. பன்னாட்டு அளவிலான கார்பன் வெளியேற்றத்தில் அமெரிக்காவின் பங்கு 15 விழுக்காடு என்பதையும் நாம் மறுக்கமுடியாது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2019, 15:15