தேடுதல்

Vatican News
காற்று மாசுக்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய தலைநகர் காற்று மாசுக்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய தலைநகர்  (ANSA)

பூமியில் புதுமை : கருவிலுள்ள சிசுவையும் காற்று மாசு பாதிக்கும்

மாசுபட்ட காற்றில் உள்ள தூசியை, தொடர்ந்து சுவாசித்தால், நோயாளியாக இல்லாதவர்களுக்குக்கூட, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அபாயகரமான அளவை எட்டிய, மாசடைந்த காற்றை சுவாசிப்பதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து இருக்கும் என்றும், தொடர்ந்து மாசுபட்ட சூழல் நீடித்தால் குழந்தையின் வளர்ச்சி தடைபடும் வாய்ப்புள்ளது என்றும், தமிழக அரசின் நெஞ்சக மருத்துவ நிலைய இயக்குனர் மகிழ்மாறன் அவர்கள் தெரிவிக்கிறார்.

டெல்லியில் நிலவிவரும் மாசுபாடு, ஏற்கனவே நோயாளியாக இருப்பவர்களை மேலும் மோசமாகப் பாதிக்கும் என்றாலும், கருவில் இருக்கும் குழந்தைக்கு, இந்த மாசுபாடு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும், மகிழ்மாறன் அவர்கள் சொல்கிறார்.

கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி பெறாமல் இருக்கும்போதிலிருந்தே, அக்குழந்தை, தாய் சுவாசிப்பதில் இருந்து, தனக்கான காற்றை எடுத்துக்கொள்ளும். அந்தக் காற்றில் மாசுபாடு அதிகம் இருந்தால், அந்தக் குழந்தைக்கு கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு குறையும். இதனால், பிறக்கும் குழந்தையின், அளவு சிறியதாக இருக்க வாய்ப்புள்ளது. அதோடு, அந்தக் குழந்தையின் வளர்ச்சி தடைபடும், என்றும், மகிழ்மாறன் அவர்கள் கூறுகிறார்.

காற்றில் தூசியின் அளவானது, 100க்குள் இருந்தால், பிரச்சனை இல்லை என்றும், 100 முதல் 200ஆக இருந்தால், குழந்தைகள் மற்றும், வயதானவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். ''தற்போது டெல்லியில் மாசுபாட்டின் அளவு 400க்கும் மேலாக உள்ளது என்பது மோசமான அளவு. அதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மாசுபட்ட காற்றில் உள்ள தூசியை, தொடர்ந்து சுவாசித்தால், நோயாளியாக இல்லாதவர்களுக்குக்கூட, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் சிரமப்படுவார்கள், வயதானவர்களின் உடல் உறுப்புக்கள் ஏற்கனவே சத்து குறைந்திருக்கும் என்பதால், இந்த ஆபத்தான அளவு அவர்களுக்கு மேலும் உடல் நலக் குறைவை ஏற்படுத்தும்,'' என்று எச்சரிக்கிறார் மகிழ்மாறன்.

06 November 2019, 14:35