மேற்கு ஜப்பானில் இயற்கைப் பேரிடருக்குப்பின் நிலத்தைப் பண்படுத்துகின்றனர் மேற்கு ஜப்பானில் இயற்கைப் பேரிடருக்குப்பின் நிலத்தைப் பண்படுத்துகின்றனர்  

பூமியில் புதுமை - ஜப்பானில் புதுமை, அறுவடைக்கு ரோபோக்கள்

ஜப்பானில் ஏறத்தாழ 85% நிலப்பகுதி மலைகளாகும். எஞ்சியுள்ள நிலம், நெல் பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. ஜப்பானில் கடந்த 10 ஆண்டுகளில் வயலில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்திலிருந்து 17 இலட்சமாகக் குறைந்துள்ளது

மேரி தெரேசா-வத்திக்கான்

‘‘ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில், உன்னைப்போல் ஒரு சிறுவன் இருந்தான். நல்ல பையன்தான், எனினும் அவன் ஒரு நாள் தவறுதலாக, ஒரே ஒரு குண்டுமணி அரிசியை வீணாக்கிவிட்டான். அவ்வளவுதான், அடுத்த நொடியே அவன் துண்டுத் துண்டாகச் சிதறி மண்ணில் விழுந்துவிட்டான்”. ஜப்பானியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘அன்போடு’ சொல்லும் கதைகளில் இதுவும் ஒன்று. ஜப்பானில் அரிசியின் மதிப்பைச் சொல்வதற்கு இப்படி சொல்வார்களாம். ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கொரியாவில் இருந்து ஜப்பானுக்கு முதல்முறையாக அரிசி கொண்டுவரப்பட்டது. தயக்கத்தோடு நெல் சாகுபடியைத் துவங்கிய ஜப்பானியர்கள் வாழ்வில் தற்போது அரிசி முக்கிய உணவாக உள்ளது. தொழில்நுட்பம் முன்னேறிய ஜப்பானில், தற்போது விவசாய நிலங்கள், தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. விவசாயம் செய்யவும் போதிய ஆட்கள் இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் வயலில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்திலிருந்து 17 இலட்சமாகக் குறைந்துள்ளது. இதனால் ஜப்பானிய விவசாயிகள், விதைகளைத் தூவவும் அறுவடைக்கும் ரோபோக்களைப் பயன்படுத்துகின்றனர். அதோடு, காய்கறிகளையும், பழங்களையும் வளர்ப்பதற்கு, சிறுநீரகத்துக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் டயாலிஸிஸ் முறையில் பாலிதின் கவரை பயன்படுத்தி வருகிறார், அந்நாட்டு வேளாண் அறிவியலாளர் யூச்சி மோரி (Yuichi Mori). இந்த தொழில்நுட்பத்திற்கு பாரம்பரிய விவசாய முறையைவிட, 90 விழுக்காடு குறைவான நீரே தேவைப்படுகின்றது. மேலும், அந்த பாலிதீன் கவர், நுண்கிரிமிகளைத் தடுக்கும், பாலிதீன் பைகள் மீது வளரும் செடிகள் தண்ணீரையும், சத்துக்களையும் சேர்த்துக் கொள்கின்றன என்றும், யூச்சி அவர்கள் பிபிசி ஊடகத்திடம் சொல்லியுள்ளார். தற்போது இந்த தொழில்நுட்பத்தின் உரிமையை வைத்துள்ள யூச்சி அவர்களின் மிபியோல் (Mebiol) நிறுவனம், அதை 134 நாடுகளில் பதிவு செய்துள்ளது. வருங்காலத்தில் பயிர்களைப் பாதுகாக்கவும், பேணவும் துல்லியமான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதே இந்த விவசாய தொழில்நுட்பத்தின் முக்கிய பங்காகும் என்றும் அவர் சொல்லியுள்ளார். யூச்சி மோரி அவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த தொழில்நுட்பம், ஜப்பானில் 150 இடங்களிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுனாமியால் தேங்கிய பொருட்கள், பெரிய நிலநடுக்கம் மற்றும் அணு உலை விபத்தால் வெளியாகும் கதிர்வீச்சு ஆகியவற்றால், மண் வளம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள, ஜப்பானின் வட கிழக்கு பகுதிகளில், இந்த விவசாயமுறை பெரும் உதவியாக உள்ளது. விவசாயத்திற்கென இருபது வகையான ரோபோக்களை உருவாக்க, ஜப்பான் அரசு மானியம் வழங்கி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2019, 15:33