தேடுதல்

Vatican News
மழைநீரைச் சேகரிக்கும் இளம் விவசாய அறிவியலாளர் தினேஷ் மழைநீரைச் சேகரிக்கும் இளம் விவசாய அறிவியலாளர் தினேஷ் 

பூமியில் புதுமை: மழைநீரைச் சேகரிக்கும் இளம் விவசாய அறிவியலாளர்

பயனில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழை நீர் சேமிப்பு அமைப்புகளாக மாற்றினால், நிலத்தடி நீர் மட்டம் உயரும்

மேரி தெரேசா: வத்திக்கான்

இளம் விவசாயி தினேஷ் அவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் அம்மையாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சமையல்கலை தொடர்பான படிப்பை முடித்துவிட்டு ஏழு ஆண்டுகள் வெளிநாட்டில் பணி புரிந்தார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், வெளிநாட்டிலிருந்து வந்தபிறகு, விவசாயம் செய்யத் தொடங்கினார். காவிரியில் பல ஆண்டுகளாக முறையாகத் தண்ணீர் வராததால், தன்னுடைய வயலில் 110 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தார். அதில் தண்ணீரும் வரவில்லை. அதற்குச் செய்த செலவும் வீணாகிப்போனது. பின்னர், மீண்டும் வேறு இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தார். அதில் தண்ணீர் வந்தது. அந்த நீரைக் கொண்டு, தொடர்ந்து நெல் சாகுபடியும் செய்து வருகிறார். இந்நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வரவே, அதற்கு காரணம் என்னவென சிந்தித்தார். உடனே மழை நீரைச் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தார். அத்துடன் மழைக் காலங்களில் வயலில் வீணாகத் தேங்கி நிற்கும் மழை நீரையும் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தார் தினேஷ். அப்போதுதான் செயல்படாத ஆழ்துளைக் கிணற்றை மழை நீர் சேகரிக்கும் தொட்டியாக மாற்றும் எண்ணம் வந்தது. இதையடுத்து போர்வெல் குழாயைச் சுற்றி, வயலுக்குமேல் குழாய் தெரியும் அளவில் பத்து அடி அகலத்திலும் ஆழத்திலும் குழி தோண்டினார். பின்னர், பத்து அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் குழாயையொட்டி கான்கிரீட் உறைகள் இறக்கினார். பின்னர், உறைக்குள் ஐந்து அடி ஆழத்திற்குக் கல், கரிக்கட்டை, ஜல்லி போன்றவற்றைக் கொண்டு நிரப்பினார். மேலும், நிலத்திலிருந்து ஆழ்துளைக் குழாயில் தண்ணீர் செல்லும் வகையில் குழாயில் ஓட்டைகள் அமைத்தார். அத்துடன் வேறு எதுவும் உள்ளே செல்லாத வகையில் நைலான் வலையைக் கொண்டு குழாயைச் சுற்றிக் கட்டிவிட்டார். இதன் மூலம் தண்ணீர் குழாய் வழியாக நிலத்துக்குள் செல்லும்போது வடிகட்டப்பட்டு சுத்தமான நீராகவும் செல்லும். அத்துடன் அந்த இடத்தைச் சுற்றி மழை பெய்யும்போது மழை நீர் வயலுக்குச் செல்லும் வகையிலும், நிலத்தடியிலிருந்து மழை நீர் ஆழ்துளைக் குழாய் பகுதிக்கு வரும் தண்ணீர் உள்ளே செல்லும் வகையிலும் இடைவெளி விட்டு, சிமென்ட் சுவர் அமைத்தார். இதற்கு மொத்தமே ஐம்பதாயிரம் ரூபாய்தான் செலவானதாம். இன்றைக்கு மழை பெய்யும்போது ஆழ்துளைக் குழாய் வழியாக, மழை நீர் உள்ளே செல்வதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியரும், வேளாண்மைத்துறை அதிகாரிகளும், தினேஷ் அவர்களை, விவசாய அறிவியலாளர் என பாராட்டிச் சென்றுள்ளனர். நம்மாழ்வார் அவர்கள் அடிக்கடி சொல்வதுபோல், மண்ணை நாம் காத்தால், மண் மனிதரைக் காக்கும் வகையில், செயல்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை இது போன்று மாற்றியமைத்தால் மழை நீர் நேரடியாக நிலத்துக்குள் இறங்கி நிலத்தடி நீர் மட்டம் உயரும். குழந்தைகள் அதற்குள் விழுந்து உயிரிழக்கும் நெஞ்சை இரணமாக்கும் நிகழ்வுகளும் நடைபெறாமல் தடுக்க முடியும். (நன்றி-விகடன்)

04 November 2019, 14:39