தேடுதல்

உலகின் மிக உயர்ந்த சிகரம் என்று கருதப்படும் எவரெஸ்ட் மலைச் சிகரம் உலகின் மிக உயர்ந்த சிகரம் என்று கருதப்படும் எவரெஸ்ட் மலைச் சிகரம் 

உயரமான மலைகளில் பனிமுகடுகள் உருகி வருகின்றன

உலகம் வெப்பமடைந்து வருவதால், கடந்த ஐந்து ஆண்டுகளில், சுவிட்சர்லாந்து மலைகளின் பனிமுகடுகள், அவற்றின் கனஅளவில், பத்து விழுக்காடு குறைந்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில் உயரமான மலைகளில், பனிமுகடுகள் உருகி வருவதற்கெதிராக புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு, உலக வானியல் ஆய்வு நிறுவனம் (WMO) இவ்வியாழனன்று தீர்மானித்துள்ளது.

உலக வானியல் ஆய்வு நிறுவனம், இவ்வாரத்தில் நடத்திய, ‘உயரமான மலைகள்’ பற்றிய மாநாட்டின் இறுதியில், இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அந்நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், தண்ணீர் பாதுகாப்பு மற்றும், இயற்கைப் பேரிடர்களோடு தொடர்புடைய, மலைகள் உருகும் விவகாரத்தில் கவனம் செலுத்துவதற்கு அர்ப்பணித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.   

உலகின் மிக உயரமான சிகரங்கள் உருகி வருவதால், இப்பூமியின் உறைபனி வளங்கள் மற்றும், நல்ல நீர் ஓட்டத்தின் மீது ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள இந்நிறுவனம், பனி மலைகள் உருகுவதால், கிராமங்களின் வாழ்வுமுறை மற்றும் வேளாண்மை பாதிக்கப்படுவது பற்றியும் கூறியுள்ளன.

உலகம் வெப்பமடைந்து வருவதால், கடந்த ஐந்து ஆண்டுகளில், சுவிட்சர்லாந்து மலைகளின் பனிமுகடுகள், அவற்றின் கனஅளவில், பத்து விழுக்காடு குறைந்துள்ளது என்றும், கடந்த ஆண்டில் மட்டும் 2 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் அம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்நூற்றாண்டு முடிவதற்குள் அந்நாட்டில் எஞ்சியுள்ள பனிமுகடுகளில் 90 விழுக்காடு உருகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.     

இந்த மாநாட்டில் 150க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2019, 14:53