தேடுதல்

Vatican News
சென்னையின் ஒரு மாடி வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம் சென்னையின் ஒரு மாடி வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம் 

பூமியில் புதுமை – நலமும் மகிழ்வும் தரும் மாடித்தோட்டம்

`வீட்டைச் சுற்றி தோட்டம் போட நிலமில்லையே...’ எனக் கவலைப்படும் நகர மக்கள் பலருக்கு, மாடித்தோட்டம், ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

`வீட்டைச் சுற்றி தோட்டம் போட நிலமில்லையே...’ எனக் கவலைப்படும் நகர மக்கள் பலருக்கு, மாடித்தோட்டம், ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. நஞ்சில்லா காய்கறிகளை, தாங்களே உற்பத்தி செய்து உண்பதால், உடல் நலமும், மன மகிழ்வும் கிடைக்கின்றன என்று கூறுகிறார், சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மைத்ரேயன் அவர்கள். இவர், தன் வீட்டில் மாடித்தோட்டத்தைச் சிறப்பாக அமைத்து, ஆர்வமுள்ள பலருக்கும் மாடித்தோட்டம் அமைக்க வழிகாட்டிவருகிறார். ‘பசுமை விகடன்’ இதழில், அவர் வழங்கிய பேட்டியிலிருந்து சில பகுதிகள் இதோ:

‘‘எனக்குப் பூர்வீகம் சென்னைதான். சின்ன வயசுல, இயற்கை மீதிருந்த ஆர்வத்துல, வீட்டுல நிறைய செடிகளை வளர்த்தோம். மாடித்தோட்டம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்குல இயற்கை விவசாயத்தைப்பத்தியும், மாடித்தோட்டம் அமைப்பதுபத்தியும் பல விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டோம். மொட்டைமாடியில், சோதனை முயற்சியாக, வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, கீரைகள் என, தொட்டிகள்ல வளர்க்க ஆரம்பிச்சோம்.

‘‘மாடித்தோட்டம் வெச்சிருந்தவங்களை நேரில் சந்திச்சு ஆலோசனை செஞ்சோம். ‘யூடியூப்’ சேனல்கள், பத்திரிகைகள் மூலமாகவும் நிறைய தகவல்களைத் தெரிஞ்சுகிட்டோம். படிப்படியா செடிகளோட எண்ணிக்கையை அதிகப்படுத்தினோம். இப்போ, மொட்டைமாடியில் உள்ள 1,200 சதுர அடியிலயும் செடிகளை வளர்க்கிறோம். கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பூசணி, முருங்கை, முள்ளங்கி, பீட்ரூட், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மூலிகைச் செடிகள், பூச்செடிகள்னு 350க்கும் மேற்பட்ட செடிகளை வளத்துட்டு வர்றோம். அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றப் பயிர்களை மட்டுமே வளர்க்கிறோம். அதனால, நல்ல விளைச்சல் கிடைக்குது.

‘‘குடும்பத்துல எல்லாரும் மாடித்தோட்டப் பராமரிப்புல ஆர்வமா ஈடுபடுறாங்க. எங்க குழந்தைகளும் அதிக நேரத்தை இங்கேதான் செலவு செய்யறாங்க. அவங்க இயற்கையுடன் இணைந்து வளர்றதோட, டி.வி., செல்போன் பயன்பாட்டிலிருந்தும் முடிஞ்ச அளவுக்கு விலகியிருக்காங்க. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாடித்தோட்ட விவசாயிகள் பலரும், எங்க மாடித்தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டுப் போறாங்க.

‘‘இடவசதி உள்ளவங்க வீடுகள்ல மாடித்தோட்டம் அமைச்சா, காய்கறிகளை இயற்கை முறையில உற்பத்தி செஞ்சு சாப்பிடலாம். காய்கறிகள் விலை உயர்வு பத்திக் கவலைப்படத் தேவையில்லை. அதோடு காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் நாமும் சிறு பங்கு வகிக்கலாம்” என்ற ஆலோசனையுடன், மைத்ரேயன் அவர்கள், தன் பகிர்வை நிறைவு செய்துள்ளார். – (நன்றி: பசுமை விகடன்)

19 November 2019, 14:29