அமெரிக்க ஐக்கிய நாட்டின் Charlotte நகரில் நடைபெற்ற இளையோர் கூட்டத்தில் உரையாற்றிய இளம்பெண் Greta Thunberg அமெரிக்க ஐக்கிய நாட்டின் Charlotte நகரில் நடைபெற்ற இளையோர் கூட்டத்தில் உரையாற்றிய இளம்பெண் Greta Thunberg 

பூமியில் புதுமை – சுற்றுச்சூழல் விருதைப் பெற மறுத்த Greta

“சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போராடுபவர்களுக்கு விருது வழங்குவதற்குப் பதில், சுற்றுச்சூழலின் சீரழிவைக் குறித்து அறிவியலாளர்கள் கூறும் உண்மைகளுக்கு செவிமடுத்து, செயல்படுவதுதான், இன்றைய அவசரத் தேவை”

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஒரு கூட்டமைப்பு, நோர்டிக் கவுன்சில் (Nordic Council) என்ற அவை. இந்த அவையினர், இலக்கியம், திரைப்படம், இசை, சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கி வருகின்றனர். சுற்றுச்சூழலையும், பூமிக்கோளத்தையும் பாதுகாக்க, இளையத் தலைமுறையினருக்குத் தூண்டுதலாக இருந்து போராடும் 16 வயது நிறைந்த இளம்பெண் கிரியெத்தா துன்பெரெய் (Greta Thunberg) அவர்களை, சுற்றுச்சூழல் துறை விருதுக்கென தேர்ந்தெடுத்திருப்பதாக, நோர்டிக் கவுன்சில், அக்டோபர் மாத இறுதியில் அறிவித்திருந்தது.

இந்த விருதைப் பெற மறுப்பு தெரிவித்து, கிரியெத்தா அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில், “சுற்றுச்சூழல் விருதுக்கென என்னைத் தேர்ந்தெடுத்துள்ளதில் மகிழ்ச்சி. ஆனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போராடுபவர்களுக்கு விருது வழங்குவதற்குப் பதில், சுற்றுச்சூழலின் சீரழிவைக் குறித்து அறிவியலாளர்கள் கூறும் உண்மைகளுக்கும், அதைப் பாதுகாக்க அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கும், அரசியல் தலைவர்களும், மக்களும், செவிமடுத்து, செயல்படுவதுதான், இன்றைய அவசரத் தேவை” எனத் தெரிவித்துள்ளார். மேலும், நோர்டிக் கவுன்சில் அமைப்பைச் சேர்ந்த நாடுகள், பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகளை, அதிக அளவு தோண்டுவதற்குத் திட்டமிட்டுள்ளன என்பதையும், இத்தகையத் திட்டத்தால், பூமியின் வெப்பம் தற்போது உள்ளதைவிட பெருமளவு அதிகரிக்கும் என்பதையும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார், இளம்பெண், கிரியெத்தா துன்பெரெய். (நன்றி: இந்து தமிழ் திசை)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2019, 15:06