தேடுதல்

Vatican News
நவம்பர் 2ம் தேதி, லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டத்தில் பேசிய கிரியெத்தா துன்பெரெய் (Greta Thunberg) நவம்பர் 2ம் தேதி, லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டத்தில் பேசிய கிரியெத்தா துன்பெரெய் (Greta Thunberg)  (AFP or licensors)

பூமியில் புதுமை – இளையோர் வரையும் எல்லைக்கோடு

"இதோ, இத்தருணத்தில், இவ்விடத்தில், நாங்கள் உங்கள் எல்லைகளை உணர்த்தும் கோடு ஒன்றை வரைந்துள்ளோம். உலகம் விழித்து எழுகிறது. மாற்றம் வந்துகொண்டுதான் இருக்கிறது."

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

நியூயார் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில், இவ்வாண்டு, செப்டம்பர் 23ம் தேதி, "காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு 2019" (Climate Action Summit 2019) நடைபெற்றது. காலநிலை மாற்றத்தின் ஆபத்துக்களைத் தடுக்க, இளைய தலைமுறையினர் சார்பில் போராடிவரும், 16 வயதுடைய வளர் இளம் பெண், கிரியெத்தா துன்பெரெய் (Greta Thunberg) அவர்கள், இம்மாநாட்டின் காலை அமர்வில், உணர்வுப் பொங்கப் பேசினார்.

அவரது உரைக்கு முன்னதாக, 'உலகத் தலைவர்களுக்கு நீங்கள் கூற விழையும் செய்தி என்ன?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "உங்களை நாங்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே என் செய்தி" என்று பதில் கூறியபின், "இப்போது நிகழ்வதனைத்தும் தவறானவை. நான் இங்கே உங்கள் முன் அமர்ந்துகொண்டிருக்கக் கூடாது. நான், என் பள்ளியில் அமர்ந்துகொண்டிருக்க வேண்டும்" என்ற சூடானச் சொற்களுடன், கிரியெத்தா அவர்கள் தன் உரையைத் துவக்கினார். வேதனை, ஆத்திரம், உறுதி என்ற பல உணர்வுகள் வெளிப்படையாகத் தெரிந்த அவர் உரையிலிருந்து ஒரு சில பகுதிகள் இதோ:

"உங்கள் பொருளற்ற சொற்களால், என் கனவுகளையும், குழந்தைப் பருவத்தையும் நீங்கள் திருடிவிட்டீர்கள்... மக்கள் துன்புறுகிறார்கள், இறந்துகொண்டிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் முழுமையாக அழிந்து வருகிறது. உயிரினங்களின் ஒட்டுமொத்த அழிவு துவங்கிவிட்டது. இந்நிலையில், உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால், பணத்தைப்பற்றியும், பொருளாதார முன்னேற்றம் என்ற கட்டுக்கதையையும் எங்களிடம் பேசி வருவீர்கள்.

"திருத்தியமைக்க இயலாத சங்கிலித் தொடர் போன்ற எதிர்வினைகளைத் துவக்கும் அளவு, கார்பன்டை ஆக்ஸைடின் வெளியேற்றம் உருவாகியுள்ளது. நீங்கள் வெளியேற்றும் கார்பன்டை ஆக்ஸைடை, என்னுடைய தலைமுறையினர் உள்வாங்கி, துன்பப்படப்போகிறோம்.

"நீங்கள் எங்களைக் காப்பாற்றத் தவறிவிட்டீர்கள். உங்கள் துரோகத்தை இளையோர் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். தொடர்ந்து நீங்கள் எங்களைக் காக்கத் தவறினால், உங்களை நாங்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம்.

"இதோ, இத்தருணத்தில், இவ்விடத்தில், நாங்கள் உங்கள் எல்லைகளை உணர்த்தும் கோடு ஒன்றை வரைந்துள்ளோம். உலகம் விழித்து எழுகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், மாற்றம் வந்துகொண்டுதான் இருக்கிறது. நன்றி."

05 November 2019, 14:27