லெபனானில் போராட்டம் லெபனானில் போராட்டம் 

வாரம் ஓர் அலசல்: நம் பொதுவான இல்லத்தை போர்க்களம் அற்றதாக மாற்ற..

லெபனான் நாட்டின் சமுதாய, நன்னெறி மற்றும், பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும், சவால்களை எதிர்கொள்ளும் அம்மக்களின் அழுகுரல்கள் கேட்கப்பட வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது நிரம்பிய சுஜித்தை மீட்கும் பணி, இரவு பகலாய், தொடர்ந்து 60 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் தற்போது மழை பெய்கிறது. மேலும் பல இடையூறுகள் இருந்தபோதிலும், சுஜித்தை மீட்பதற்கு, நவீன இயந்திரங்களைக் கொண்டு, மீட்புக் குழு அயராது முயற்சித்து வருகின்றது என்பது, இத்திங்கள் காலை செய்திகள். இந்த முயற்சி வெற்றி பெறட்டும் என, நாமும் செபிக்கின்றோம்.

வாழ்க்கை என்பதே ஒரு போராட்டமே. போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றிபெறுவது குதிரைக்கொம்பே. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், அப்துல் கலாம் அவர்கள் சொன்னார் - வாழ்க்கை என்பது, ஒரு சந்தர்ப்பம். அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கடமை, அதை நிறைவேற்றுங்கள். வாழ்க்கை என்பது, ஓர் இலட்சியம், அதைச் சாதியுங்கள். வாழ்க்கை என்பது ஒரு சோகம், அதைத் தாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு போராட்டம், அதை வென்று காட்டுங்கள். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அதை நடத்தி முடியுங்கள் என்று. வாழ்க்கையே ஒரு போராட்டத்தில்தான் ஆரம்பிக்கிறது. இந்தப் போராட்டங்கள், தனிமனித வாழ்வில், சமுதாய, தேசிய வாழ்வில் என வேறுபடுகின்றன. இன்று ஏறத்தாழ எல்லா நிலைகளிலும் போராட்டமே வாழ்க்கையாக மாறிவிட்டது. இக்காலத்தில், அதிலும் குறிப்பாக, அண்மையில் அல்லது தற்போது, பொலிவியா, சிலே, ஹாங் காங், ஈக்குவதோர், எகிப்து, கினி, ஹெய்ட்டி, ஈராக், லெபனான் ஆகிய நாடுகளிலும், இந்த ஆண்டின் துவக்கத்தில், அல்ஜீரியா, ஹொண்டூராஸ், நிக்கராகுவா, மலாவி, இரஷ்யா, சூடான், ஜிம்பாப்வே, பிரான்ஸ், இஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் என, ஆசியா முதல் அமெரிக்கா வரை, எங்கும் வரலாறு காணாத பேரணிகளையும், போராட்டங்களையும், அறவழியிலும், வன்முறை வழியிலும் மக்கள் பெரிய அளவில் நடத்தி வருகின்றனர். பொதுவாக, சமுதாய, அரசியல், பொருளாதாரம் போன்ற நிலைகளில் எதிர்கொள்ளும் அநீதிகளையும், அட்க்குமுறைகளையும் சகித்துக்கொள்ள முடியாத மக்கள், தங்களின் கோரிக்கைகளை, எதிர்ப்புப் போராட்டங்களாக வெளிப்படுத்துகின்றனர்.

இந்தியாவில் போராட்டம்

காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குதல், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை உயர்த்துதல், மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு என்ற நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 18,000 அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவிலுள்ள அனைத்து துறைமுகங்களையும் தனியார்மயமாக்கும் வகையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, Major Port Authority 2019 என்ற சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் துறைமுக ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இந்த சட்டத்தால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய துறைமுகங்களைக் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

மும்பையில், ஆரே காலனியில் ஏறத்தாழ ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மரங்கள் உள்ளன. மும்பை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க 2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்களும், சமுதாய ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லெபனானில் போராட்டம்

லெபனான் நாட்டில், தொலைத்தொடர்புகளின் விலை, ஜோர்டனைவிட ஐந்து மடங்கும், எகிப்தைவிட இருபது மடங்கும் அதிகம். அந்நாட்டில் அரசின் ஊழல் மற்றும், முறையற்ற நிதி மேலாண்மை, நாட்டை கடும் பொருளாதாரச் சீரழிவுக்கு இட்டுச் செல்லும் என்றும், வாட்ஸப் அழைப்புகளுக்கு வரி விதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த பத்து நாள்களுக்கு மேலாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இதில், அந்நாட்டின் ஐம்பது இலட்சம் மக்களில் இருபது விழுக்காட்டு மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் இராணுவம், சாலைகளை மறியல் செய்து போராட்டதாரர்களை ஒடுக்கி வருகின்றது. அரசின் சீர்திருத்த வாக்குறுதிகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, போராட்டங்கள் தொடர்கின்றன. இச்சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அக்டோபர் 27, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் லெபனான் மக்களுக்காகச் செபித்தார். 

லெபனான் நாட்டிற்காக திருத்தந்தை

லெபனான் நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கெதிராய் கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தேசிய அளவில் இடம்பெற்று வரும் போராட்டங்கள், நாட்டை முடக்கிப்போட்டுள்ள நிலையில், அன்புள்ள இம்மக்களை, குறிப்பாக, அந்நாட்டு இளையோரை நினைக்கின்றேன். நாட்டின் சமுதாய, நன்னெறி மற்றும், பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும், சவால்களை எதிர்கொள்ளும் அம்மக்களின் அழுகுரல்கள் கேட்கப்பட வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன். உரையாடல் வழியே, சரியான தீர்வுகளைக் காண, லெபனான் நாட்டினர் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். லெபனானில் அனைவரின் மாண்பும் சுதந்திரமும் மதிக்கப்படவும், மக்கள் அமைதியுடன் நல்லிணக்கத்துடன் தொடர்ந்து வாழவும் உலகளாவிய சமுதாயம் உதவுமாறு, லெபனானின் அரசியாம் அன்னை மரியாவிடம் செபிக்கின்றேன். லெபனான் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது, அதிகம் துன்புற்றுள்ள மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்குமே உதவும் என்று திருத்தந்தை கூறினார்.

ஈராக்கில் போராட்டம்

ஈராக்கில், அரசுப் பணிகளுக்கு தகுதி அடிப்படையில் இல்லாமல், இனம் மற்றும் வேண்டப்பட்ட குழுவினர் அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுகின்றன. எனவே, அரசியல் அமைப்பில் ஊழல் உள்ளது எனச் சொல்லி, ஈராக்கில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், அரசின் ஊழலுக்கு எதிராக எகிப்திலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. ஹாங் காங்கிலும் போராட்டங்கள். இஸ்பெயினில் தனி நாடு கேட்டுப் போராடிய, கத்தலோனியா பிரிவினைவாத தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, ஏறத்தாழ 3,50,000 மக்கள் பார்சிலோனாவில் போராடினர்.

இலத்தீன் அமெரிக்காவில் போராட்டம்

இலத்தீன் அமெரிக்காவின் பணக்கார நாடுகளில் ஒன்றான சிலேயில், செல்வர்கள்  மற்றும் ஏழைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வறியோர் தெருவில் இறங்கி போராடினர்.

ஈக்குவதோர் நாட்டில், பூர்வீக இனத்தவருக்கு, பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுவந்த  எரிபொருள் மானியம் நிறுத்தப்பட்டதையடுத்து போராட்டம் வலுத்தது. ஆயினும், தற்போது, எரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

அண்மை வாரங்களில் லெபனான் தொடங்கி, இஸ்பெயின் மற்றும் சிலே நாடுகள் வரையில், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், பல நாடுகளில் ஒரே மாதிரி காரணங்களுக்காகப் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இவை அனைத்தையும் ஒன்றுசேர்க்கும் அம்சங்கள் உள்ளன. ஒன்று, சமத்துவமின்மை. இரண்டாவது, வருமான ஏற்றத்தாழ்வு. மூன்றாவது, அரசுகளின் ஊழல். நான்காவது அரசியல் சுதந்திரம். ஐந்தாவது, பருவ நிலை மாற்றம்.

பருவ நிலை மாற்றம்

பல்வேறு நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள், காலநிலை மற்றும், சுற்றுச்சூழல் மாற்றங்களோடு தொடர்புடையவை. ``பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலையை அறிந்து, நம்மைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசுகள் எடுக்காத வரையில், போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை'' என்று, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இஸ்பெயின், ஆஸ்ட்ரியா, பின்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில், சாலைகள் மற்றும் வாகனங்களை மறித்து, மக்கள் கைகளை கோர்த்துக்கொண்டு, நின்று, பரபரப்பான நகரின் மையப் பகுதிகளில் போக்குவரத்தை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். சுவீடனைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய கிரேட்டா துன்பெர்க் அவர்கள் தந்த உத்வேகத்தால், வாராந்திர பள்ளிக்கூட போராட்டங்களில் உலகெங்கும் ஏராளமான இளையோர் பங்கேற்கின்றனர்.

அரசுகளின் முறையற்ற மேலாண்மையால், துன்புறுவோர் ஏழைகளே. துன்பத்திற்குமேல் துன்பத்தை அனுபவித்து தாங்க முடியாத நிலையில் இவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ஐ.நா. நிறுவன பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்களும், அரசியல்வாதிகள் மீது மக்களின் நம்பிக்கை குறைவதாலே உலகெங்கும் போராட்டங்கள் வலுவடைகின்றன, குடிமக்களில் வளர்ந்துவரும் நம்பிக்கையின்மை பேரிடரை அரசியல்வாதிகள் அகற்ற வேண்டும் என, அக்டோபர் 25, கடந்த வெள்ளியன்று அழைப்பு விடுத்தார்.

இந்த உலகம், போர்க்களமற்ற பூமியாக மாற, ஏழைகளின் அழுகுரல் கேட்கப்பட வேண்டும். நசுக்கப்படுவோர் வாழ்வு, உய்வு பெற வேண்டும். சுற்றுச்சூழல் காக்கப்பட வேண்டும். உலகின் நுரையீரலாகிய அமேசான் பருவமழைக்காடுகள் உட்பட அனைத்துக் காடுகளும் பராமரிக்கப்பட்டு, பூமி, பசுமை நிலமாக அமைய வேண்டும். உலகம் சமநிலை பெற வேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும், அறநெறியில் மனிதர் வளர்ந்திட வேண்டும். அனைவரும், குறிப்பாக, அரசியல்வாதிகள் நெஞ்சில் நேர்மை நிறைந்திட வேண்டும். அன்பு செழிக்க வேண்டும்.

வாரம் ஓர் அலசல்: நம் பொதுவான இல்லத்தை போர்க்களம் அற்றதாக மாற்ற...

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2019, 12:53