தேடுதல்

Vatican News
மீனாட்சி புவிதம் அவர்களும், பள்ளிச் சிறாரும் மீனாட்சி புவிதம் அவர்களும், பள்ளிச் சிறாரும் 

வாரம் ஓர் அலசல்: பெறுவதில் இல்லை, கொடுப்பதிலே இன்பம்

புவிதம் மீனாட்சி என்ற பெயருக்கேற்ப, வழக்கமான பாடத்திட்டத்துடன், இந்தப் புவியை நலமாக வைத்திருப்பது குறித்தும் அவர் கற்பித்து வருகிறார்

மேரி தெரேசா - வத்திக்கான்

வாரம் ஓர் அலசல் - 211019

அதிக விலையுயர்ந்த உடை உடுத்தி, ஆடம்பரத்தில் வாழ்ந்த, அழகான செல்வந்தப் பெண் ஒருவர், உளவியல் அறிஞர் ஒருவரை காணச் சென்றார். அவரிடம், என்னிடம் எல்லாம் இருக்கின்றன. ஆயினும், வாழ்வில் வெற்றிடத்தை உணர்கிறேன். என் வாழ்வு இருளாக இருக்கிறது. ஆதலால், மகிழ்வாக வாழ வழிச் சொல்லுங்கள் என்று கேட்டார். உடனே  அந்த அறிஞர், அவரின் அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் பணிப்பெண்ணை அழைத்தார்.

மகிழ்வாகக் காணப்பட்ட அப்பெண்ணிடம், அவ்வாறு அவர் இருப்பதன் காரணத்தை விளக்கச் சொன்னார். அப்பெண்ணும், துடைப்பத்தை கீழே போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்து, பேசத் தொடங்கினார்.

என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம், எனது ஒரே மகன் விபத்தில் இறந்து போனான். என்னால் உறங்க இயலவில்லை, சாப்பிட முடியவில்லை, யாரிடமும் சிரிக்க முடியவில்லை, என் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில், ஒரு நாள் நான் வேலை முடிந்து வந்தபோது, ஒரு பூனை என்னைப் பின்தொடர்ந்தது. வெளியே மழை பெய்துகொண்டு குளிராக இருந்ததால்,  பூனையைப் பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. அதை நான் என் வீட்டிற்கு கூட்டிச்சென்று, குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது பால் முழுவதையும் குடித்துவிட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது. அப்போதுதான், கடந்த மூன்று மாதங்கள் சென்று,  நான் முதன் முறையாகப் புன்னகைத்தேன். அப்போது என்னையே ஒரு கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விடயம் என்னை மகிழ்விக்கிறது எனில், ஏன் இதை பலருக்கும் செய்து, என் மனநிலையை மாற்றிக் கொள்ளக்கூடாது என சிந்தித்தேன். அடுத்த நாள், என் பக்கத்து வீட்டில் படுக்கையாயிருந்த ஒரு முதியவருக்கு உணவு கொடுத்தேன். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து, நான் மகிழ்ந்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவிசெய்து, உதவிசெய்து, அவர்கள் மகிழ, நானும் பெரு மகிழ்வுற்றேன். மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில்தான் இருக்கிறது என்பதை, மெல்ல மெல்ல கண்டுகொண்டேன். இதை கேட்ட அந்த செல்வந்தப் பெண், சப்தமாக கத்தி அழுதார். (நன்றி முகநூல்)

ஆம். வாழ்வின் அழகு, ஒருவர் எவ்வளவு வைத்திருக்கிறார் என்பதில் அல்ல, தன்னால் பிறர் மகிழ்ச்சியடைகின்றனர் என்பதிலேயே இருக்கிறது. ஆம். மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை. மாறாகப் பிறருக்குக் கொடுப்பதில்தான் இருக்கிறது. நம் பூமித்தாய் மனிதருக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்கிறார். ஆனால் மனிதரின் "பேராசை'யைத்தான் பூமித்தாயால் நிறைவு செய்ய இயலவில்லை (மகாத்மா காந்திஜி). பீனா லஷ்கரி

கொடுத்துக்கொண்டே இருப்பதில் மகிழ்வடையும் நம் அன்னை பூமி போல, கொடுப்பதிலே மகிழ்ந்து வாழ்கின்றார், மும்பையைச் சேர்ந்த பீனா லஷ்கரி (Beena Lashkari) அவர்கள். இவர், கடந்த இருபது ஆண்டுகளாக, மும்பையில் சாலையோரம் வாழ்ந்துவரும் சிறார்க்கு, அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, கல்வி கற்பித்து, பல சிறாரின் வாழ்வில் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். கல்வி கற்க வசதியில்லாத மற்றும், வாய்ப்பில்லாத, தெருச் சிறார்க்கு நடமாடும் பள்ளிக்கூடங்களின் வழியாகக் கல்வியறிவைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் பீனா. மும்பையில், சாலையோரப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மனிதர்களின் அன்றாட வாழ்வு அவ்வளவு எளிதானதல்ல. அன்றாடப் பணத் தேவைக்காகக் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் பெற்றோர்களால், தங்கள் பிள்ளைகளை நலமான சூழலில் வளர வைப்பதிலோ, அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதிலோ, கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே கல்வி என்பது, அப்பிள்ளைகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதன் விளைவாக நிறைய பிள்ளைகளின் பயணம் திசை மாறியிருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற முடிவெடுத்து, அதில் சாதித்துக் காட்டி பல குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார் பீனா லஷ்கரி. கல்வி பெறுவது, ஒவ்வொரு தனி மனிதரின் அடிப்படை உரிமை. குழந்தைகளால் பள்ளிக்குச் செல்ல முடியாவிட்டால் என்ன? பள்ளி, குழந்தைகளிடம் செல்லலாம்தானே! எனவே 1998ம் ஆண்டில், சிறு தொடக்கமாக ஒரு பேருந்தைக் கொண்டு நடமாடும் பள்ளிக்கூடத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார் பீனா. தற்போது அவர்களிடம் பத்து பேருந்துகள் உள்ளன. இவற்றின் வழியாக ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அவர்கள் இருக்குமிடத்துக்கே நேரடியாகச் சென்று கற்பித்து வருகின்றனர். இக்கல்வியில், மனித மாண்பும் நல்ல பழக்கவழக்கங்களும் முதலில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதற்குப் பின்புதான் எழுத, படிக்கச் சொல்லித் தருகின்றனர். மேலும், மொழிக் கல்வி மற்றும் கணிதத்தையும் போதிக்கின்றனர். இப்பணி மிகவும் சவாலாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுதான் அவர்களுக்கு எல்லையற்ற மகிழ்வைத் தருகிறது. இதுபோன்ற செயல்பாடுகளால், மகிழ்ச்சி என்பது பெறுவதில் இல்லை, தருவதில் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டதாக, ஊடகங்களிடம் சொல்லியுள்ளார் பீனா லஷ்கரி. மேலும், என்னைப் போன்ற சாதாரண பெண்ணால் இது சாத்தியம் என்றால் எல்லாராலும் இதுபோன்ற செயல்கள் சாத்தியமே" என்கிறார் பீனா. இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 2013-ல் இவருக்கு ஸ்ரீ சக்தி புரஷ்கார் விருது அளித்து கெளரவப்படுத்தியுள்ளது. ( நன்றி-அவள் விகடன்)

மீனாட்சி புவிதம்

மேலும், மீனாட்சி புவிதம் (Meenakshi Puvidham) என்ற பெண், உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து, தமிழகம் வந்து தனது பள்ளிப் பருவ கனவை நனவாக்கியிருக்கிறார். மீனாட்சிக்கு, சிறு வயதில் தான் படிக்கும் பள்ளி இப்படியெல்லாம் இருக்க வேண்டும், வகுப்பறைகள் இருக்கக் கூடாது, விசாலமான நூலகம் இருக்க வேண்டும். விளையாட்டுத் திடல் இருக்க வேண்டும். பறவைகள், வகுப்புத் தோழனாக இருக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், அந்தக் கனவு அந்த வயதில் வெறும் கனவாகவே கடந்தது. முப்பது ஆண்டுகளுக்குப்பின், அந்தக் கனவை நனவாக்கி இருக்கிறார் மீனாட்சி. பிபிசி ஊடகத்திடம் மீனாட்சி அவர்கள் தனது கனவை நனவாக்கியது பற்றிச் சொல்லியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட மீனாட்சி அவர்கள், மாற்று கட்டட கலையின் முன்னோடிகளில் ஒருவரான லாரி பேக்கர் (Laurie Baker) அவர்களின் மாணவி. மும்பையில் கட்டடக் கலை பயின்ற இவருக்கு, அங்கு நிலவிய நுகர்வு கலாச்சாரம் சலிப்பு தட்டியது. அந்த மாநகருடன் ஒட்ட முடியாமல் தவித்த இவர், தமிழகத்திற்கு வந்தார். சிறு வயது முதலே காந்தியத்தின் மீது பெரும் பற்றுகொண்ட மீனாட்சி, சமுதாயப் பிரச்சனைகளுக்கு காந்திய வழி மட்டுமே தீர்வு என தீர்க்கமாக நம்பினார். இந்தியா, கிராமங்களின் தொகுப்பு. நாட்டின் வளர்ச்சி என்பது, கிராமங்களின் மேம்பாட்டில் இருக்கிறது என்ற காந்தியின் கருத்தியலை முழுமையாக ஏற்று தருமபுரிக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். தருமபுரியில், நாகர்கூடல் எனும் பகுதியில், கையில் இருந்த குறைந்த அளவு பணத்தில், சிறியளவில் ஒரு வறண்ட நிலம் வாங்கினார். அந்த பூமியில் முதலில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினார். பின், இயற்கை விவசாயம் மற்றும், கிராம முன்னேற்றம் குறித்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அந்த சமயத்தில், அவரது சிறு வயது கனவு மீண்டும் நினைவுக்கு வர, அதற்கு வடிவம் கொடுப்பது பற்றி சிந்தித்தார். அந்தக் கனவுதான் புவிதம் பள்ளியாக இப்போது உருவெடுத்திருக்கிறது. புவிதம் எனும் இலவச பள்ளியைத் தொடங்கிய மீனாட்சி அவர்கள், ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டுமென கனவு கண்டாரோ, அதுபோலவே வடிவமைத்திருக்கிறார். புவிதம் மீனாட்சி என்ற பெயருக்கேற்ப, வழக்கமான பாடத்திட்டத்துடன், இந்தப் புவியை நலமாக வைத்திருப்பது குறித்து கற்பித்து வருகிறார். மீனாட்சி அவர்கள், விவசாயம், பள்ளி என்பதோடு, கிராம முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நாகாவதி ஆற்றை மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார் மீனாட்சி.

வறட்சி குறித்த புரிதலும், அதற்குரிய தீர்வும் கிராம மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனால், அவர்கள், ஒவ்வொரு நாள் வாழ்வுக்கே போராட வேண்டிய சூழலில், தீர்வை நோக்கி பயணப்பட தயங்குகிறார்கள். அவர்களுடன் தொடர்ந்து உரையாடி, அவர்களின் திறமையைக் கொண்டே நாகாவதி ஆற்றை மீட்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். ஆற்றை மீட்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல. அதனை மீட்கும் பணியின் வழியாக, சமுதாய மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறோம். அதாவது மாணவர்கள், கிராம மக்கள் என, இந்த சமுதாயத்தின் அனைத்து தரப்பினருடனும் உரையாடி, தனி மனிதர்களிடம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறோம் என்றும் பிபிசி ஊடகத்திடம் மீனாட்சி அவர்கள் கூறியுள்ளார்.

கொடுப்பதில் இன்பம்

அந்த வாகன உரிமையாளர் தன் விலையுயர்ந்த காரை ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதைக் கவனித்தார். அவனின் ஆசையை அறிந்துகொண்ட அவர், சிறுவனை அதில் உட்காரவைத்து சிறிது தூரம் ஓட்டினார். ‘உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை’ என்று சிறுவன் கேட்டான். அவரோ, 'தெரியவில்லை தம்பி, இது என் உடன்பிறப்பு எனக்குப் பரிசளித்தது' என்றார். 'அப்படியானால் அவர் மிகவும் நல்லவர்' என சிறுவன் சொல்ல, வாகன உரிமையாளரோ, 'நீ என்ன நினைக்கிறாய் என எனக்குப் புரிகின்றது. உனக்கும் என் உடன்பிறப்புப்போல் ஒருவர் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா?' என்றார். சிறுவன் சொன்னான், ‘அப்படி இல்லை, நான் உங்களின் உடன்பிறப்புப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்று. ஆம், கொடுப்பதில் கிடைக்கும் இன்பம், பெரும்பாலும், பெறுவதில் இருப்பதில்லை. எனவே பலனை எதிர்பாராமல், உள்ளார்ந்த அன்புடன் கொடுப்போம். அதில் கிடைக்கும் உண்மையான இன்பத்தை அனுபவிப்போம்.

19 October 2019, 15:23