வயதானவர்களை முத்தமிடும் திருத்தந்தை பிரான்சிஸ் வயதானவர்களை முத்தமிடும் திருத்தந்தை பிரான்சிஸ் 

முதியோர்க்கு ஆதரவாக இப்போதே செயல்பட வேண்டும்

இன்று பதவியில் இருக்கும் இளையோர், ஒரு காலத்தில் வயது முதிர்ந்தவர்களாக ஆவார்கள் என்ற உண்மை உணரப்பட வேண்டும் – ஐ.நா. வல்லுனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உலகளவில், அடுத்த பத்தாண்டுகளில், அறுபதும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய மக்களின் எண்ணிக்கை 46 விழுக்காடு அதிகரிக்கவுள்ளவேளை, வயது முதிர்ந்த மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய தேவை, உலகினர் எல்லாருக்கும் இப்போதே ஏற்பட்டுள்ளது என்று, ஐ.நா. நிறுவன மனித உரிமை வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார்.

அக்டோபர் 1, இச்செவ்வாயன்று, வயது முதிர்ந்தோரின் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, வயதானவர்கள், தங்கள் உரிமைகளை அனுபவிப்பது குறித்து ஆய்வு செய்யும், ஐ.நா.நிறுவன வல்லுனர் Rosa Kornfeld-Matte அவர்கள், 2030ம் ஆண்டுக்குள் உலக அளவில் வயதானவர்களின் எண்ணிக்கை 140 கோடியாக உயரும் என்று கூறியுள்ளார்.

2017ம் ஆண்டில் 96 கோடியே 20 இலட்சமாக இருந்த இவ்வெண்ணிக்கை, தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது, 2030ம் ஆண்டில், இவர்களின் எண்ணிக்கை, இளையோரின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் எனவும், Kornfeld-Matte அவர்கள், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வளரும் நாடுகளில் இந்த அதிகரிப்பு அதிகம் எனவும், தென்-கிழக்கு ஆசியாவில் மட்டும், 2010ம் ஆண்டில் இருந்த இவ்வெண்ணிக்கையைவிட, 2017ம் ஆண்டில், எட்டு விழுக்காடு அதிகம் எனவும், Kornfeld-Matte அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

வயதானவர்களின் எண்ணிக்கையை நோக்குகையில், இம்மக்களுக்கு சமுதாயங்களில் அதிக அக்கறை காட்டப்பட வேண்டியது இன்றியமையாதது என்றும், இன்று பதவியில் இருக்கும் இளையோர், ஒரு காலத்தில் வயது முதிர்ந்தவர்களாக ஆவார்கள் என்ற உண்மை உணரப்பட வேண்டும் என்றும், Kornfeld-Matte அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார். 1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, உலக வயதானவர் நாளை ஐ.நா. பொது அவை அங்கீகரித்தது. 1991ம் ஆண்டு, அக்டோபர் 1ம் தேதி இந்நாள் முதன்முதலில் கடைப்பிடிக்கப்பட்டது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2019, 16:14