காங்கோ கிராமப்புற பெண்கள் காங்கோ கிராமப்புற பெண்கள்  

பருவநிலை மாற்றத்தில் கிராமப்புற பெண்கள்

உலக மக்கள் தொகையில், நாற்பது விழுக்காட்டினர், அதாவது, ஏறத்தாழ 300 கோடிப் பேர், வளரும் நாடுகளில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் - IFAD

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உலகளாவிய பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில், கிராமப்புற பெண்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கூறினார்.

அக்டோபர் 15, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, உலக கிராமப்புற பெண்கள் நாளுக்கென வெளியிட்ட செய்தியில், கிராமப்புற பெண்களின் குரல்களுக்குச் செவிமடுத்து, அவற்றை ஏனையோர்க்கு அறிவிப்பது, பருவநிலை மாற்றம் பற்றிய அறிவை பரப்புவதற்கு முக்கியமானது என்று கூறியுள்ளார்.  

அரசுகளும், தொழில் முனைவோரும், சமுதாயத் தலைவர்களும், பருவநிலை மாற்றம் குறித்த கிராமப்புற பெண்களின் குரல்களுக்குச் செவிசாய்க்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள கூட்டேரெஸ் அவர்கள், இப்பெண்கள், உலகளாவிய முன்னேற்ற சக்திகள் என்றும் கூறினார்.

உலக மக்கள் தொகையில், நாற்பது விழுக்காட்டினர், அதாவது, ஏறத்தாழ 300 கோடிப் பேர், வளரும் நாடுகளில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர், இவர்கள், குடும்பங்களின் சிறு விவசாயத்தை நம்பியுள்ளனர் என்று, ஐ.நா.வின் வேளாண் வளர்ச்சி அமைப்பு (IFAD) கணித்துள்ளது.  

“பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில், கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுமிகள்” என்ற தலைப்பில், இச்செவ்வாயன்று இந்த உலக நாள் சிறப்பிக்கப்பட்டது.

2007ம் ஆண்டு ஐ.நா. பொது அவை, உலக கிராமப்புற பெண்கள் நாளை உருவாக்கியது. அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து, இந்த நாள் உலகெங்கும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2019, 15:09