சுத்தமான குளத்தில் நீந்தும் வாத்து சுத்தமான குளத்தில் நீந்தும் வாத்து 

பூமியில் புதுமை – சொந்த முயற்சிக்கு இயற்கை அன்னையின் பரிசு

உலகின் பல நாடுகளில் பணிபுரியும் ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து ஊரில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வாரி காக்க வேண்டும் என நினைத்து, குறிச்சி ஏரியைத் தூர்வாரி சாதித்தும் காட்டியுள்ளனர்.

விக்டர் தாஸ் – வத்திக்கான்

ஒரத்தநாடு அருகே உள்ள பெரிய கிராமம் ஆம்பலாபட்டு. விவசாயம்தான் இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு முதுகெலும்பு. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதை நினைத்து கவலை கொண்ட அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரைச் சேமிக்கின்ற முயற்சியில் இறங்கினர். உலகின் பல நாடுகளில் பணிபுரியும் ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து ஊரில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வாரி காக்க வேண்டும் என நினைத்ததோடல்லாமல் ரூ.18 இலட்சம் செலவில் அந்த ஊரின் பெரிய ஏரியான குறிச்சி ஏரியைத் தூர்வாரி சாதித்தும் காட்டியுள்ளனர்.

இந்த இடம் பறவைகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும் எனவும், ஏரியில் இருக்கின்ற நீர் ஆவியாவதைத் தடுக்க  வேண்டியும், நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும்  ஏரியின் கரையிலும் மற்றும் ஏரியை சுற்றியும்  25,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம் என்று பெருமித உணர்வுடன் கூறும் இந்த ஊர் மக்களின் இயற்கையின் மீதும் சுற்றுசூழல் மீதும் உள்ள அக்கறையும் ஆர்வமும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.

35 வருடங்களுக்குப் பிறகு எங்கள் ஊர் ஏரியில் முழுமையாக நீர் நிரம்பியிருக்கிறது. சொந்த முயற்சியில் ஏரியைத் தூர் வாரினோம். அதில் இயற்கை அன்னை தண்ணீரை நிரப்பி எங்களைத் தட்டி கொடுத்திருக்கிறது. எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. ஏரி நிரம்பியதன் வழியாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மரக்கன்றுகளும் செழிப்பாக வளரத் தொடங்கிவிட்டன. பறவைகள் ஏரியை வட்டமடித்து வசிக்கத் தொடங்கிவிட்டன. கண்ணுக்கு எட்டிய தூரம் தண்ணீரால் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. ஏரி நிரம்பியது போல் இப்போது எங்கள் மனதும் நிறைந்துவிட்டது, என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் நனையும் ஆம்பலாப்பட்டு கிராம மக்கள் உண்மையிலேயே எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. (நன்றி: பசுமை விகடன்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2019, 14:28