தேடுதல்

அமேசான் பகுதியில் பயணம் அமேசான் பகுதியில் பயணம் 

பூமியில் புதுமை: வியப்பூட்டும் அமேசான் ஆறு

அமேசானில் நீர்த்தேக்கங்கள் கட்டுவது, ஆற்றின் சுதந்திரமான நீரோட்டத்தைத் தடுக்கும், சூழலியல் அமைப்பைப் பாதிக்கும், மற்றும், பெரும் சமுதாயப் பிரச்சனைகளை உருவாக்கும்.

மேரி தெரேசா: வத்திக்கான்

தென் அமெரிக்க கண்டத்தில், ஒன்பது நாடுகளில் பரவியுள்ள  அமேசான் பருவமழைக் காடுகளை உருவாக்கிய பெருமையைக் கொண்டிருப்பது, அமேசான் ஆறு. அமேசான் காடுகளின் உயிர் ஆதாரமே இந்த ஆறுதான். இது ஒரு கோடியே 18 இலட்சம் ஆண்டுகளுக்கும், ஒரு கோடியே 13 இலட்சம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட Miocene யுகத்தில் உருவானதாகச் சொல்லப்படுகிறது. மியோசேனே யுகம் என்பது, 2  கோடியே 30 இலட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கும், 53 இலட்சம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலமாகும். அதற்கு முந்தைய யுகங்களைவிட, Miocene யுகத்தில் புவியின் வெப்பநிலை அதிகமாக இருந்தது எனவும், உயிரியலில் ஏற்பட்ட மாற்றங்களால், பாலூட்டிகளும் பறவைகளும் புது வடிவங்களை எடுத்தன மற்றும், காய்கறி வேளாண் உற்பத்திக்கும் வழியமைத்தது எனவும், வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த யுகத்தில் தோன்றிய அமேசான் ஆறு, தற்போதைய அமைப்பை, ஏறத்தாழ 24 இலட்சம் ஆண்டுகளுக்குமுன், Pleistocene யுகத்தின் துவக்க காலத்தில் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அமேசான் ஆற்றைக் கடக்கப் பாலங்கள் கிடையாது. இதன் தலைத் துணை ஆறுகளின் தொடக்கம், பெரு மற்றும், ஈக்குவதோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலாள ஆற்றுப்படுகை பிரேசில் நாட்டில்தான் அமைந்துள்ளது. அமேசான் ஆறு, ஆயிரத்திற்கும் அதிகமான துணையாறுகளைக் கொண்டிருக்கின்றது. இவற்றுள் 17 ஆறுகள், ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. அமேசான் ஆற்றில் நீர்த்தேக்கங்கள் இல்லாமல் இருந்தாலும், அதன் துணையாறுகளில் ஏறத்தாழ 412 நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த 412ல், 151, அதன் ஆறு முக்கிய துணையாறுகளில் கட்டப்படுகின்றன. அமேசான் ஆற்றின் நீரிலிருந்து கிடைக்கும் மின்சக்தியில் நான்கு விழுக்காடே, பிரேசில் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகின்றது. எனவே, மேலும் அதிக நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றை, நூற்றுக்கணக்கில் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமேசானில் அதிக நீர்த்தேக்கங்கள் கட்டுவது, பல்லுயிர்களைப் பாதிக்கும் மற்றும், காடுகளை அழிக்கும் என்று, சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 October 2019, 15:33