தேடுதல்

அமேசான் காட்டில் பற்றியெரியும் நெருப்பு அமேசான் காட்டில் பற்றியெரியும் நெருப்பு 

பூமியில் புதுமை : 50 ஆண்டுகளில் அமேசான் காடு 65% அழியும் ஆபத்து

7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த பரப்பளவு இலண்டன் நகரைப் போல 5 மடங்காகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகின் மிகச் சிறந்த, பழமையான வரலாற்றைக் கொண்டிருக்கும் அமேசான் காடுகளை அழிக்கும் நடவடிக்கை, ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது, வருத்தத்துக்குரியது. பெருமையும் பழைமையும் பெற்ற அமேசான் காடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு, பலமுறை, இந்தக் காடுகள், பற்றி எரிந்துள்ளன; இன்னும் எரிந்துகொண்டிருக்கின்றன. 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில்,  இந்த ஆண்டு, அமேசான் மழைக்காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது, 83 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தப் பரப்பளவு, இலண்டன் நகரைப் போல 5 மடங்காகும். இந்தக் காட்டுத் தீ, மற்றும், காடுகள் அழிப்பால் முதலில் பாதிக்கப்படுவது, அமேசானில் வாழும் பழங்குடிகள்தான். ஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள், பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் வாழ்கிறார்கள். அமேசானுக்கு ஏற்படும் எந்த ஒரு சிறு பாதிப்பும், முதலில், இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்துகிறது.

காடுகள் அழிவதால், அது சேமித்து வைத்திருக்கும் கரியமில வாயு, அதிகளவு காற்று மண்டலத்தில் கலந்து, மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்; புவி வெப்பமயமாதலையும் இது ஊக்குவிக்கும் என்ற கவலையை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த 50 ஆண்டுகளில், அமேசான் மழைக்காடுகளில், 65 விழுக்காடு பரப்பளவு அழியும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தனது 18 விழுக்காட்டு பரப்பளவை அது இழந்துள்ளது.

நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால்,  அமேசான் காடுகள் உயிருடன்  இருக்கவேண்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2019, 15:15