தேடுதல்

Vatican News
அமேசான் பழங்குடியின மக்கள் அமேசான் பழங்குடியின மக்கள்  (AFP or licensors)

பூமியில் புதுமை : பிரேசிலின் ஆவா பழங்குடியினர்

அமேசான் காடுகளில், இன்று ஏறத்தாழ 400 வெவ்வேறு பழங்குடியின மக்கள், தங்களுக்கென தனி மொழி, கலாச்சாரம், நிலப்பகுதி போன்றவற்றைக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பெரும் மழைக்காடுகளின் இருப்பிடமான அமேசான் பகுதியில், இன்று 10 இலட்சம் பூர்வீக குடிமக்கள் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் ஏறத்தாழ 400 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள். ஒவ்வோர் இனத்திற்கும் தனி மொழி, கலாச்சாரம், நிலப்பகுதி என உள்ளன. இதில் சில இனங்கள், கடந்த 500 ஆண்டுகளாகத்தான் வெளி உலகோடு ஓரளவு தொடர்பைக் கொண்டுள்ளன. ஏனையவை, இன்னும் எவ்விதத் தொடர்பும இன்றியே வாழ்கின்றன.

இதற்கிடையே, பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் பகுதிகளில் வாழும் ஆவா இனத்தைச் சேர்ந்த பூர்வீகக் குடிமக்கள், அழியும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் மாரன்ஹாவோ((Maranhao)) என்ற இடத்தில், ஆவா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பல நூறு ஆண்டுகளாக வெளியுலகின் தொடர்பில் இல்லாமல் தனித்து வாழ்ந்துவரும் இவர்கள், வேட்டையாடும் திறன் வழியாகவே இன்னும் உயிர் வாழ்கின்றனர்.

ஆவா பழங்குடியினத்தவர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் அரசு-சாரா அமைப்பு ஒன்று, ஆவா இனத்தைச் சேர்ந்த ஒருவரின் அரிய காணொளியை வெளியிட்டுள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் அவர்கள் இருப்பதால், விரைவிலேயே அந்த இனம் அழிந்து போகும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்று, இன்னும் பல, பழங்குடி இனங்கள் அழியும் தறுவாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

09 October 2019, 13:14