22 வயது நிரம்பிய பொறியியல் பட்டயதாரர் குறிஞ்சிமலர் 22 வயது நிரம்பிய பொறியியல் பட்டயதாரர் குறிஞ்சிமலர் 

பூமியில் புதுமை: சுதந்திரமும் பாதுகாப்பும் தரும் விவசாயம்

விவசாயத்தில்தான், சுதந்திரமும் பாதுகாப்பும் இருக்கின்றது. அதில் நாள் முழுவதும் வேலை இருக்கும். ஆனால், யாரிடமும் அடிமையாக இருக்க வேண்டியதில்லை. உள்ளூரிலேயே வேலை என்பதால் பாதுகாப்பும் இருக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான்

கூலிவேலை செய்து, கடினப்பட்டு உழைத்து, தன் ஒரே மகளை பொறியியல் கல்வி முடிக்க வைத்த அந்த பெற்றோர், தன் மகள் பற்றி ஆயிரம் கனவுகள் கண்டுகொண்டிருந்தனர். ஆனால், பெற்றோரையும், சுற்றத்தாரையும் வியப்பில் ஆழ்த்தி, விவசாயத்தில் துணிச்சலுடன் இறங்கியிருக்கிறார் 22 வயது நிரம்பிய பொறியியல் பட்டயதாரர் குறிஞ்சிமலர். இவரின் அப்பா திருப்பூரில் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். அம்மா கூலி வேலை செய்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள பாதிரக்குடியைச் சேர்ந்த குறிஞ்சிமலர், 2018ம் ஆண்டில் சென்னையில் பொறியியல் படிப்பை முடித்தார். கடந்த ஓராண்டாகப் பல்வேறு இடங்களில் வேலை தேடினார். கிடைத்த வேலையில் குறிஞ்சிமலருக்கு மனம் ஒன்றவில்லை. தன் சொந்த ஊரில் பலரும் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று, பிற்பகலில் மகிழ்ச்சியோடு திரும்புவதைப் பார்த்துத் தானும் விவசாய வேலைக்குச் செல்ல நினைத்தார் குறிஞ்சிமலர். அவரின் விருப்பத்திற்கு முதலில் பெற்றோர் இசைவு தெரிவிக்கவில்லை. ஆயினும், தன் படிப்புக்கு ஏற்ற விவசாய வேலை ஏதாவது இருக்கிறதா என இணையத்தில் தேடினார் அந்த பொறியியல் பட்டயதாரர். அதன் பயனாக, 35 கிராமங்களில் 76 இலட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கின்ற, ‘மரம்’ சண்முகசுந்தரம் அவர்கள் பற்றி அறிந்தார். உடனே அவரைத் தொடர்பு கொண்டு பேசினார் குறிஞ்சிமலர். சண்முகசுந்தரம் அவர்களும், குறிஞ்சிமலரின் ஆர்வத்தை அறிந்து, அடுத்த நாளே, பாதிரக்குடிக்கு வந்து, குறிஞ்சிமலர் வீட்டின் அருகே தரிசு நிலம் இருந்ததைப் பார்த்து, அந்த நிலம், குறிஞ்சிமலரின் உறவினரின் நிலம் என்பதை அறிந்தார். அந்த உரிமையாளரிடம் ‘வரப்பெல்லாம் வைரம், தரிசெல்லாம் தங்கம். உங்கள் தரிசு நிலத்தை எங்களிடம் மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாருங்கள். அதை நாங்கள் பணம் காய்க்கும் இடமாக மாற்றித் தருகிறோம்’ என்று சொன்னார் சண்முகசுந்தரம். உறவினரிடமிருந்து ஒப்புதல் கிடைத்ததும், குறிஞ்சிமலரும், உடனே களத்தில் இறங்கினார். நிலத்தை உழுது, சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, முதல் கட்டமாக 1, 500 தேக்குமரக் கன்றுகளை நட்டிருக்கிறார். மரக்கன்றுகளை நட்டுவிட்டு, நிலத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டபோது, தான் விவசாயத்துக்குத் திரும்பியதற்கான காரணத்தை ஒரு நிமிட காணொளியாக எடுத்து அதை முகநூலில் பதிவிட்டார். அதைப் பார்த்த இளையோர், குறிஞ்சிமலரை வாழ்த்தி ஊக்கமளித்துள்ளனர். ஓராண்டு கழித்து தேக்கு மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக மிளகுக் கொடியை வளர்க்கவிருப்பதாகச் சொல்கிறார் குறிஞ்சிமலர். சொந்தமாக நர்சரி தொடங்குவதுடன் இயற்கை விவசாயத்துக்குத் தேவையான பஞ்சகவ்யம் உள்ளிட்ட உரங்களைத் தயாரித்து நஞ்சில்லா விவசாயத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதையும் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் குறிஞ்சிமலர். (நன்றி-இந்து தமிழ் திசை)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2019, 15:06