இயற்கை பேரிடரான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் இயற்கை பேரிடரான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் 

அக்டோபர் 13, உலக பேரிடர் குறைப்பு நாள்

ஐ.நா. பொது அவை, 2009ம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 13ம் தேதி உலக பேரிடர் குறைப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சமுதாயங்களும், நாடுகளும், பேரிடர் தடுப்பு மற்றும் பேரிடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 13ம் தேதியை, உலக பேரிடர் குறைப்பு நாளாகக் கடைப்பிடித்து வருகின்றது.

“உள்கட்டமைப்பு மற்றும், அடிப்படைப் பணிகளைத் தடை செய்யும் கடும் சேதங்களை விளைவிக்கும் பேரிடரைக் குறைத்தல்” என்ற தலைப்பில், அக்டோபர் 13, இஞ்ஞாயிறன்று, இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஐ.நா. நிறுவனப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், இந்நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், காலநிலை மாற்றத்திலிருந்து மீண்டெழுந்து வருவதற்கு உதவியாக, உள்கட்டமைப்புக்களை அமைத்து, முதலீடுகளைச் சேமிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

காலநிலை பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முதலீடு செய்வதன் வழியாக, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பணத்தையும் சேமிக்க முடியும் எனவும், கூட்டேரெஸ் அவர்களின் செய்தி கூறுகின்றது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை 1989ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை, உலக பேரிடர் குறைப்பு நாள் முதலில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

பின்னர், ஐ.நா. பொது அவை, 2009ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் 13ம் தேதி இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2019, 15:27