தேடுதல்

Vatican News
வெடிகள் இல்லாத தீபாவளியைக் கொண்டாட பள்ளி மாணவர், மாணவியரின் அழைப்பு வெடிகள் இல்லாத தீபாவளியைக் கொண்டாட பள்ளி மாணவர், மாணவியரின் அழைப்பு  (AFP or licensors)

தீபாவளியைப் பசுமையாகக் கொண்டாட...

உலகில், சுற்றுச்சூழல் அதிகம் மாசடைந்துள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. மாசு கேட்டால் ஏற்படும், சுவாசம் மற்றும் ஏனைய நோய்களால், ஒவ்வோர் ஆண்டும் 12 இலட்சம் பேர் இறக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் தீபாவளி திருநாள், அக்டோபர் 27, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும்வேளை, தீபாவளியை பசுமையாகவும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும் கொண்டாட சில வழிகளைப் பரிந்துரைத்துள்ளனர், சூழலியல் ஆர்வலர்கள்.

முற்றிலும் எரிந்துவிடக்கூடிய வகையில் மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விளக்குகள், தேனீக்களின் மெழுகால் செய்யப்பட்ட விளக்குகள், ரோஜா இதழ் விளக்குகள், ரோஸ் எண்ணெய் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம் என்று, ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

திருநாள் பரிசாக, பொருள்களை வழங்காமல், தூய்மையான காற்றை பரப்பக்கூடிய செடிகளைப் பரிசளிப்பது பற்றிக் கூறியுள்ள ஆர்வலர்கள், மாசை நீக்கும் சக்தி படைத்த செடிகள், பரிசளிப்பவரின் எண்ணங்களில் பசுமையைக் கொணரும் என்று தெரிவித்துள்ளனர்.

மணி பிளான்ட்டோ, போன்சாய் மரங்களோ, எது வேண்டுமானாலும் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ள ஆர்வலர்கள், பரிசுப் பொருள்களை, மக்கும் தன்மையுள்ள பொருள்களால் தயாரிக்கப்பட்ட பைகள், கூடைகளில் வைத்துக் கொடுங்கள் மற்றும், இயற்கை எண்ணெய்களைக்கொண்டு வீட்டிற்கு புத்தொலி பாய்ச்சுங்கள் எனவும் ஆலோசனை கூறியுள்ளனர்.

உலகில் இந்தியா, சுற்றுச்சூழல் அதிகம் மாசடைந்துள்ள நாடுகளில் ஒன்று என்றும், அந்நாட்டில் மாசுகேட்டால் ஏற்படும் சுவாசம் மற்றும் ஏனைய நோய்களால், ஒவ்வோர் ஆண்டும்  12 இலட்சம் பேர் இறக்கின்றனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிவகாசியில் ஆயிரத்திற்கு அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஆண்டுக்கு 80 கோடி டாலருக்கு மேல் பணம் ஈட்டுகின்றன. (AsiaNews / Agencies)

26 October 2019, 15:31