தேடுதல்

Vatican News
அமேசான் காடுகளிலுள்ள அரிய மலர் அமேசான் காடுகளிலுள்ள அரிய மலர்  

பூமியில் புதுமை: அமேசான் காடுகளில் அரிய மலர்கள்

கனிம வளத்தை வெட்டி எடுக்கவும், சோயா வேளாண்மைக்குமென, ஏற்கனவே 18 விழுக்காட்டு அமேசான் காடுகள் அழிந்து விட்டன. மேலும் 50 விழுக்காட்டு காடுகள் அழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றன

மேரி தெரேசா-வத்திக்கான்

உலகிலுள்ள மழைக்காடுகள், இப்புவியின் மிகப் பழமையான சூழலியல் அமைப்புகளுள் ஒன்று. இவற்றில் பெரும்பாலானவை ஏழு கோடி ஆண்டுகள் பழமையானவை. இவை ஆண்டுக்கு 1,750 மி.மீட்டரிலிருந்து, 2,000 மி.மீ.வரை மழைப்பொழிவைப் பெறுகின்றன. இந்தக் காடுகளில், தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் மழைக்காடுகளே மிகவும் புகழ் பெற்றவை. அமேசான் மழைக்காடுகளில் மழைபெய்யும்போது, பத்து நிமிடம் சென்றே மழை நீர் தரையில் இறங்குமாம். அந்த அளவுக்கு அங்கு மரங்களும், புதர்களும், செடிகளும் அடர்த்தியாக இருக்கின்றன. அதனால் இந்தக் காடுகள், ஒளி புகா காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இங்கு பத்து சதுர கி.மீ. பரப்பளவில் மட்டும், 1,500 வகையான மலர் செடிகள், 750 வகையான மரங்கள், 400 வகையான பறவைகள் மற்றும், 150 வகையான வண்ணத்துப் பூச்சிகள் இருக்கின்றன. இந்த மழைக்காடுகளில், அந்த மண்ணிற்கேயுரிய 16 ஆயிரம் செடி வகைகள் உட்பட, நாற்பதாயிரம் வகை தாவரங்கள் உள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, Heliconia மலர், இரப்பர், கக்காவோ, விக்டோரியா அமேசானியா எனப்படும் இராட்சத நீர் லில்லி, ஆர்க்கித், அவகாதோ போன்ற பல மிக குளிர்ச்சியான செடிகளும், மரங்களும் உள்ளன. ஆர்க்கித் மலர்ச் செடியில் மட்டும், ஏறத்தாழ முப்பதாயிரம் வகைகள் உள்ளனவாம். இவை எல்லா வடிவங்களிலும், அளவிலும் வளர்கின்றன. பிரித்தானிய அரசி விக்டோரியா பெயரில் அழைக்கப்படும், விக்டோரியா அமேசானியா மலரின் விட்டம் மட்டும் மூன்று மீட்டராகும். Monkey Brush Vine என்ற மலர்ச் செடிகள், அமேசான் காடுகள் எங்கும் நிறைந்து காடுகளுக்கு அழகு சேர்க்கின்றன. இவை தேன் பறவைகளுக்கு (humming birds) இயற்கை உணவாக உள்ளன. உலக அறுவடையில் நான்காவது இடத்தைக் கொண்டிருக்கும் வாழைப் பழம், இக்காடுகளில் அதிகம். இங்கு வளரும் வாழை மரங்களில், பழங்கள், நூறு பவுண்டு எடையுள்ளவை. ஒரே குலையில் 150 பழங்கள் இருக்குமாம். அமேசான் மழைக்காடுகளில் முப்பது அடி உயரம் வரை வளரும் காப்பிச் செடிகள், புதர்கள் போன்று மண்டிக் கிடக்கின்றன. அமேசான் காடுகள், காற்றுமாசு வழியாக வெளியேறும் 27 விழுக்காட்டு கார்பன்-டை- ஆக்சைடு வாயுவை (2.4 கிகா டன் அளவில்) தன்மயமாக்கி நிலைநிறுத்தும், கார்பன் அகழியாக, முக்கிய பங்காற்றுகின்றன.

14 October 2019, 15:23