தேடுதல்

Vatican News
பெரு நாட்டில் அமேசான் மழைக்காடுகள் பெரு நாட்டில் அமேசான் மழைக்காடுகள் 

பூமியில் புதுமை: பெரு நாட்டில் அமேசான் மழைக்காடுகள்

உலகிலுள்ள பறவை இனங்களில் 44 விழுக்காடு மற்றும், பாலூட்டி இனங்களில் 63 விழுக்காடு பெரு நாட்டு அமேசானில் வாழ்கின்றன

மேரி தெரேசா – வத்திக்கான்

அமேசான் மழைக்காடுகள், பிரேசில் நாட்டிற்கு அடுத்து, பெரு நாட்டிலே அதிக அளவில் பரவியுள்ளன. இம்மழைக்காடுகள், வேறு எந்த நாட்டையும்விட, பெரு நாட்டின் அறுபது விழுக்காட்டுக்கு அதிகமான பகுதியில் உள்ளன. பெரு நாட்டின் பெரும்பகுதி, ஆன்டெஸ் மலைக்கு கிழக்குப் பகுதியில் அடர்ந்த காடுகளால் நிறைந்துள்ளது. இப்பகுதியில் ஐந்து விழுக்காட்டு மக்கள் வாழ்கின்றனர். பெரு நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் தாழ்வான பகுதி, அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. இது, கடல்மட்டத்திற்கு மேல், எண்பது முதல், ஆயிரம் மீட்டர் வரை உயரம் கொண்டவை. இங்கு, ஆண்டுதோறும், ஏறத்தாழ 260 செ.மீ. அளவு மழை பெய்யும். இங்கு சராசரியாக 28 செல்சியுஸ் டிகிரி வெப்பம் இருக்கும். இந்த வெப்பநிலை மற்றும், அதிக மழைப்பொழிவு காரணமாக, இந்த காட்டுப் பகுதியிலுள்ள மண்வளம், சத்துக் குறைந்ததாகவே உள்ளது. இப்பகுதியில் ஏறத்தாழ எல்லாமே ஆறுகள் உற்பத்தியாகும் இடங்களாக உள்ளன. Apurimac, Mantaro, Amazon, Urubamba, Ucayali, Huallaga, Marañón, Putumayo, Yavarí, Napo, Pastaza, Madre de Dios, Manu, Purus, மற்றும்,Tigre ஆறுகள் பாய்கின்றன. Apurimac ஆறு, அமேசான் ஆற்றுக்கு முக்கிய கிளை ஆறாக உள்ளது. பெரு நாட்டு அமேசான் மழைக்காடுகள், இப்பூமியில் மிக அதிக அளவில் பறவையினங்களைக் கொண்டுள்ளன மற்றும், உலகில் பாலூட்டிகள் இனங்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளன. உலகிலுள்ள பறவை இனங்களில் 44 விழுக்காடு மற்றும், பாலூட்டி இனங்களில் 63 விழுக்காடு பெரு நாட்டு அமேசானில் வாழ்கின்றன. இன்னும், வண்ணத்துப்பூச்சி வகைகள், ஆர்க்கித் மலர் வகைகள், மற்றும் பிற செடி வகைகளும் இக்காடுகளில் அதிகமாக உள்ளன. பெரு நாட்டு அமேசான் பகுதி பெரியதாக இருந்தாலும், இங்குதான் மக்கள் குறைவாக வாழ்கின்றனர். Aguaruna, Cocama-Cocamilla மற்றும், Urarina பூர்வீக இன மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்களில் சிலர், வெளியுலகின் தொடர்பின்றி உள்ளனர்

17 October 2019, 14:45