தேடுதல்

கொலம்பிய மழைக்காடுகள் தேசிய பூங்கா கொலம்பிய மழைக்காடுகள் தேசிய பூங்கா 

பூமியில் புதுமை: கொலம்பிய மழைக்காடுகள் தேசிய பூங்கா

Chiribiquete மழைக்காடுகள் தேசிய பூங்கா, பாறைக் கலைகளைக் கொண்டு, உயிரியல், கலாச்சார, நீர்வள மற்றும், தொல்பொருள் ஆய்வுக்கு மிகச் சிறந்த இடமாக உள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

55 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட அமேசான் மழைக்காடுகள் பிரேசில், கொலம்பியா, பெரு, ஈக்குவதோர் உள்ளிட்ட ஒன்பது தென் அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளன. கொலம்பியா நாட்டிலுள்ள இக்காட்டுப் பகுதி, அந்நாட்டின் மொத்த பரப்பளவில், 35 விழுக்காடு, அதாவது, 4 இலட்சத்து மூவாயிரம் சதுர கிலோ மீட்டர் ஆகும். இந்நாட்டிலுள்ள Serrania del Chiribiquete அல்லது Chiribiquete மலைகள் என்பது, கொலம்பியா நாட்டின் அமேசான் பகுதியில், தனித்து நிற்கின்ற மேஜை மலைகளாகும். இவற்றின் மேற்பரப்புகள் தட்டையாக உள்ளன. இப்பகுதியில், தேன்சிட்டுப் பறவைகள் அதிகம் வாழ்கின்றன. இப்பூங்காவிலுள்ள Caño Paujil அருவி, Serranía de Chiribiquete மலைகளிலிருந்து உற்பத்தியாகின்றது. Chiribiquete தேசிய பூங்கா, கொலம்பியாவின் மிக நீளமான தேசிய பூங்கா மற்றும், உலகின் நீளமான வெப்பமண்டல மழைக்காடுகள் தேசிய பூங்காவாகும். ஏறத்தாழ 43 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பூங்காவில், பாறைக் கலையின் வடிவங்கள் உள்ளன. இந்த மலைத்தொடர்களில், இருபதாயிரம் ஆண்டுகள் பழமையான, பாறைகளில் வடிக்கப்பட்ட ஏறத்தாழ இருபதாயிரம் பாறைக் கலைகள், ஆறு இலட்சத்திற்கு அதிகமான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தேசிய பூங்காவில், ஏறத்தாழ மூவாயிரம் விலங்கின. மற்றும், செடி வகைகளும், குறைந்தது 300 வகையான பறவைகளும், மேலும் 300 வகையான வண்ணத்துப் பூச்சிகளும் உள்ளன. கொலம்பிய மழைக்காடுகள் தேசிய பூங்கா, பல்வேறு விதமான புவியியல் அமைப்புக்களுடன், இயற்கைக்கும், மக்களுக்கும் கொண்டிருக்கும், மிகச் சிறந்த உலகளாவிய மதிப்பை ஏற்கும் விதமாக, யுனெஸ்கோ நிறுவனம் இதை, உலக பாரம்பரியச் சொத்து என அறிவித்துள்ளது. இம்மழைக்காடுகள், 1989ம் ஆண்டில், 13 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருந்தபோது, பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டது. ஆயினும், இக்காடுகள், 2013ம் ஆண்டில், ஏறத்தாழ 28 இலட்சம் ஹெக்டேர் அளவுக்கு பரவியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2019, 15:20