தேடுதல்

Vatican News
மங்கோலியாவின் தாய் சேய் நல நிறவனத்தில்... மங்கோலியாவின் தாய் சேய் நல நிறவனத்தில்... 

குழந்தைப் பேறு காலத்தில் துன்புறும் பெண்கள் - WHO அறிக்கை

மிக இளம் வயதில் கருவுற்ற பெண்கள், கருவுற்றிருக்கும் காலத்திலும், குழந்தையைப் பெற்றெடுக்கும் வேளையிலும், முக்கியமான முடிவுகள், அப்பெண்களால் எடுக்கப்படுவதில்லை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குறைந்த வருமானம் ஈட்டும் நான்கு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி, அந்நாடுகளில் வாழும் பெண்களில் மூன்றில் ஒருவர், குழந்தைப் பேறு காலத்தில் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர் என்று WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம், அறிவித்துள்ளது.

கானா, கினி, நைஜீரியா மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில், Lancet என்ற அறிவியல் ஆய்வு நிறுவனம், 2016 பெண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், 42 விழுக்காட்டு பெண்கள், குழந்தையை கருவில் சுமக்கும் காலங்களிலும், குழந்தையைப் பெற்றெடுத்த பின்னரும் உடல் அளவிலும், உள்ளத்தளவிலும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

Lancet நிறுவனம், அக்டோபர் 9, இப்புதனன்று வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், பெரும்பாலான பெண்கள், குறிப்பாக, மிக இளம் வயதில் கருவுற்ற பெண்கள், கருவுற்றிருக்கும் காலத்திலும், குழந்தையைப் பெற்றெடுக்கும் வேளையிலும், முக்கியமான முடிவுகள் அப்பெண்களால் எடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது.

கருவுற்ற பெண்கள், முழுமையான அறிவுத்திறனுடன் முடிவெடுக்கும் வழிகளை உருவாக்குதல், அப்பெண்களின் குழந்தைப்பேறு காலத்தில், நம்பிக்கையுள்ள பெண்கள் அவர்களுக்குத் துணையாக இருத்தல், உயர் தரமான மருத்துவ உதவிகளை உறுதி செய்தல் என்ற பரிந்துரைகளை, உலக நலவாழ்வு நிறுவனம் முன்வைத்துள்ளது.

10 October 2019, 14:46