புதிய பேரரசராக முடிசூட உள்ள  Naruhito புதிய பேரரசராக முடிசூட உள்ள Naruhito 

ஜப்பானில் ஆறு இலட்சம் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு

ஜப்பானில், 1990ம் ஆண்டில் பேரரசர் Akihito அவர்களின் முடிசூட்டும் விழாவைக் கொண்டாடும் விதமாக, ஏறத்தாழ 25 இலட்சம் பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 22ம் தேதி ஜப்பானில் புதிய பேரரசர் Naruhito அவர்களின் முடிசூட்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு, ஏறத்தாழ ஆறு இலட்சம் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவிருப்பதாக ஊடகங்கள் அறிவித்துள்ளன.

ஜப்பானிய பிரதமர் Shinzo Abe அவர்களின் அமைச்சரவை, இம்மாதம் 15 தேதிபோல்,  குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்குத் தீர்மானம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், தண்டனைக் காலத்தில், குறைந்தது மூன்று ஆண்டுகள் செலவழித்த சிறு குற்றங்கள் புரிந்தோர், அரசின்  இத்திட்டத்தினால் பலன் அடைவார்கள் எனவும் செய்திகள் கூறுகின்றன.

ஜப்பானில் குற்றவாளிகள் மற்றும், அபராதம் விதிக்கப்பட்டோர், ஐந்து ஆண்டுகளுக்கு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும், ஏனைய அனுமதிகளைப் பெறுவதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர். ஆயினும், தற்போதைய மன்னிப்பு நடவடிக்கை வழியாக, இந்த விதிமுறையும் மாற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

1989ம் ஆண்டில் Hirohito அவர்கள், இறைபதம் அடைந்தபோது, ஒரு கோடிக்கு அதிகமான  குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தங்களின் உரிமைகளையும் திரும்பப் பெற்றனர்.   

அதேநேரம், 1990ம் ஆண்டில் பேரரசர் Akihito அவர்களின் முடிசூட்டும் விழாவைக் கொண்டாடும் விதமாக, ஏறத்தாழ 25 இலட்சம் பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற நவம்பர் 23மே தேதி முதல், 26ம் தேதி வரை ஜப்பானில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது, புதிய பேரரசர் Naruhito அவர்கள், நவம்பர் 25ம் தேதி திருத்தந்தையைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2019, 15:34