தேடுதல்

Vatican News
பிரேசில் மழைக்காடுகள் பிரேசில் மழைக்காடுகள்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல்–பூமிக்கோளத்தை, வாழ்வை நோக்கி...

உலகின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில், ஏறக்குறைய இருபது விழுக்காட்டுக்கும் மேலாக, அமேசான் காடுகளிலிருந்து கிடைக்கின்றது. உலகில் கண்டறியப்பட்டுள்ள பல்லுயிர் வகைகளில், பத்தில் ஓர் உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது.

மேரி தெரேசா - வத்திக்கான்

இரஷ்யாவின் Kazan நகரில், ஆகஸ்ட் 22ம் தேதி துவங்கிய 45வது உலகத் திறன் அறியும் போட்டி, ஆகஸ்ட் 27, கடந்த வெள்ளியன்று நிறைவடைந்தது. இதில், 63 நாடுகளைச் சேர்ந்த 1,354 இளையோர், 56 திறன்கள் பிரிவில் கலந்துகொண்டனர். இதில்,  ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த, 25 வயது நிரம்பிய Aswatha Narayana என்ற இளைஞர், தண்ணீர் தொழில்நுட்பத்தில் தனது திறமையை நிரூபித்து, தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்தப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும், இவர் பெற்றார். இந்தப் போட்டியில், வீணாகும் நீரை எப்படி மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது என்பது குறித்தும், தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும் தான் எடுத்துரைத்ததாக சொல்லியுள்ளார், இளைஞர் நாராயணா. தண்ணீர் அபாயகரமான பிரச்சனை என்றும், உலகில் 80 விழுக்காட்டுத் தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் போகிறது. உலக நாடுகள் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார், இளைஞர் நாராயணா.

தண்ணீர் பிரச்சனை

வாஷிங்டனைச் சேர்ந்த உலக நீர்வள நிறுவனம் (WRI), இந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் ஏறக்குறைய 400 பகுதிகளில் உள்ள மக்கள், மிக மோசமான தண்ணீர் பிரச்சனை நிறைந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர் என்றும், உலக மக்கள் தொகையில், நான்கில் ஒரு பகுதியினர் வாழ்கின்ற 17 நாடுகளில், அதிலும், குறிப்பாக 12 நாடுகளில், கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் உள்ளடங்கும். தென்னாப்ரிக்காவின் கேப் டவுன், பிரேசிலின் சா பவ்லோ, தமிழகத்தின் சென்னை என, உலகில் பல முக்கிய நகரங்கள், கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொள்கின்றன எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை, காலநிலை மாற்றத்தோடு தொடர்புடையது என்றும், இதனால், 2050ம் ஆண்டுக்குள், இந்தப் பகுதிகள், 6 முதல் 14 விழுக்காடு வரை, பொருளாதார இழப்பை எதிர்கொள்ளும் என்றும், உலக வங்கி கணித்துள்ளது. மக்கள்தொகைப் பெருக்கம், மாமிச உணவுப் பழக்கம் அதிகரிப்பு, வளர்ச்சித் திட்ட நடவடிக்கைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களே, இதற்குக் காரணம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளில், விவசாயத்திற்கான தண்ணீர் தேவை இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளுக்கான தண்ணீர் தேவை, 1961ம் ஆண்டில் இருந்ததைவிட, 2014ம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தண்ணீர் பஞ்சம் காரணமாக பல கோடி மக்கள் புலம்பெயர்வார்கள் என்றும், போர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

கடும் புயல்

தண்ணீர் பஞ்சம் ஒருபுறமிருக்க, உலகின் சில பகுதிகள், பெருவெள்ளம், மற்றும் கடும் புயலாலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள பஹாமா தீவுக் கூட்டங்களின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில், தற்போது மணிக்கு 285 கிலோ மீட்டர் வேகத்தில் Dorian கடும் புயல் வீசி வருகிறது. மேலும், Fiji தீவில் நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. இவ்வாறு, இவ்வுலகம், ஒவ்வொரு நாளும், பல்வேறு வகைகளில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. அமேசான் மழைக்காடுகள்

இப்பூமியின் நுரையீரலான, உலகின் மிகப்பெரிய அமேசான் மழைக்காடுகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பது, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், உலகின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில், ஏறக்குறைய இருபது விழுக்காட்டுக்கும் மேலாக, அமேசான் காடுகளிலிருந்து கிடைப்பதுதான். உலகில் கண்டறியப்பட்டுள்ள பல்லுயிர் வகைகளில், பத்தில் ஓர் உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது. ஏறக்குறைய  30,000 வகையான செடிகள், 2,500 வகையான மீன்கள், 1,500 பறவைகள், 500 பாலூட்டிகள், 550 ஊர்வன மற்றும் 2.5 மில்லியன் பூச்சிகள் இருப்பதாக, அமேசான் அமைப்பு ஒன்று  கூறுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 2,200 புதிய தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வாழ்கின்றன.

அமேசான் காடுகளில் பாய்ந்தோடும் உலகின் மிக நீளமான அமேசான் ஆறு, உலகின் மொத்த நல்ல நீரில் இருபது விழுக்காட்டு நீரைத் தருகின்றது. அமேசான் மழைக்காடுகள், கடந்த ஐம்பது ஆண்டுகளில், ஏறக்குறைய இருபது விழுக்காட்டு அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளன. Jair Bolsonaro அவர்கள், 2019ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று பிரேசில் அரசுத்தலைவராகப் பதவிக்கு வந்தபின்னர், அமேசானில் மரங்களின் அழிவு உச்சத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது. அமேசான் தீ நிகழ்வுகள், பிரேசில் நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த உலகின் பிரச்சனை, நம் வீடு பற்றியெரிகின்றது என சூழலியல் ஆர்வலர்கள், கவலை தோய்ந்த குரலில் பேசியுள்ளனர். இந்த தீ நிகழ்வுக்குப் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்களில், ஒன்று வளர்ச்சித்திட்டம், மற்றொன்று பண்ணை விவசாயிகள். பொலிவியா நாட்டு அமேசான் எல்லையில், பெரிய பெரிய மரங்கள் எரிந்து கொண்டிருக்கின்றனவாம். அமேசான் தீ குறித்து அறிக்கை வெளியிட்ட பிரேசில் நாட்டு ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை, இவ்வாறு சொல்கிறது.

பேராசை, காழ்ப்புணர்வு

பிரேசிலின் அமேசான் காட்டுப்பகுதி தீ நிகழ்வுகள், வறட்சியினாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நிகழவில்லை, மாறாக, வேளாண் தொடர்புடைய வரத்தகர்கள்,  நிலங்களைக் கையப்படுத்துவோர் போன்றோரே, இதற்குக் காரணம். இவ்வாண்டு சனவரி மாதம் முதல் ஆகஸ்ட் முடிய, அமேசானில் நிகழும் காட்டுத் தீ, கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் இடம்பெற்றதைவிட 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும் என்று, பிரேசிலின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைத் தொடர்ந்து, பிரேசில் அரசுத்தலைவர் Bolsonaro அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த மையத்தைக் குறைசொல்லி, அதன் ஒருங்கிணைப்பாளரை பணியிலிருந்து நீக்கினார். அதற்குப் பிறகுதான் இந்த தீ நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பேராசை மற்றும், காழ்ப்புணர்வே காரணம். 2019ம் ஆண்டில் மட்டும், பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி, 52.5 விழுக்காட்டு தீ நிகழ்வுகளால் துன்புற்றுள்ளது. இத்தீச் சுடர்கள், பிரேசிலை மட்டுமல்லாமல்,  பிரேசில் எல்லையிலுள்ள, பொலிவியா மற்றும் பரகுவாய் நாடுகளையும் பாதித்துள்ளன. ஆயிரக்கணக்கான பயிர் சாகுபடி நிலங்களை அழித்துள்ளன. உலகிலேயே அமேசான் காட்டிற்கு மட்டுமே சொந்தமான, பல தனித்துவமிக்க பல்வகைச் செடியினங்களைக் கருகச் செய்து, பழங்குடி மக்களின் உரிமைகளையும் மீறியுள்ளன. எனவே, கிறிஸ்தவர்கள், படைப்பு முழுவதும் பாதுகாக்கப்பட நம்மை அர்ப்பணித்து செபிப்போம். இவ்வாறு பிரேசில் ஆங்லிக்கன் சபை மட்டுமல்ல, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவை உட்பட, பல்வேறு கிறிஸ்தவ சபைகளும், படைப்பு பாதுகாக்கப்பட செபிக்கும், படைப்பின் காலத்தை, செப்டம்பர் 1, இஞ்ஞாயிறன்று துவங்கியுள்ளன.

படைப்பின் காலம்

இயற்கையின் நண்பர் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளாரின் திருவிழாவான அக்டோபர் 4ம் தேதி வரை, இந்த செப நாள்களை கிறிஸ்தவ சபைகள் கடைப்பிடிக்கின்றன. இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட, படைப்பை பாதுகாக்கும் உலக செப நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பூமிக்கோளத்தை...

நம் பூமிக்கோளத்தை மரணத்தை நோக்கி அல்ல, மாறாக வாழ்வை நோக்கி வழிநடத்துவோம். படைப்பு, கடவுளின் கொடை. இது கண்மூடித்தனமான சுரண்டல்களால் சிதைந்துள்ளது. எனவே, இந்த செப்டம்பர் 23ம் தேதி துவங்கும் ஐ.நா.வின் காலநிலை செயல்பாட்டு மாநாட்டில், பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்துவதற்கு, அரசுகள், அரசியல் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன். அதேநேரம், மக்களும், படைப்பை மிதமிஞ்சி பயன்படுத்தும் தங்களின் வாழ்வு முறையை மிகவும் எளிமையானதாய், மதிப்புமிக்கதாய் மாற்றவும் அழைப்பு விடுக்கிறேன். அன்றாட உணவு, தண்ணீர், எரிசக்தி மற்றும், ஏனைய பொருள்களைப் பயன்படுத்துவது, நுகர்வது போன்றவை பற்றி சிந்தித்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடவுளின் கண்களில் நல்லதெனத் தோன்றியவை, மனிதக் கரங்களில் சீரழிக்கப்பட்டு வருகின்றன. சந்திப்பும், பகிர்வும் இடம்பெற வேண்டிய படைப்பு எனும் தளத்தை, தன்னலமும், சுய ஆதாயமுமே, போட்டி மற்றும் போர்த் தளங்களாக மாற்றியுள்ளன. பனிப்பாறைகள் உருகுவது, தண்ணீர் பற்றாக்குறை, நீர்த் தேக்கங்கள், நீர்ப்பிடிப்பு இடங்கள் புறக்கணிக்கப்படுவது, நெகிழிக் குப்பைகள் போன்றவை, அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. அடிப்படையில், நாம் யார் என்பதையும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியில் சகோதரர், சகோதரிகளாக வாழ அழைப்புப் பெற்றுள்ளோம் என்பதையும் மறந்துள்ளோம். எனவே, படைப்பைப் பாதுகாப்பதற்கான நம் அழைப்பை உணர்ந்து, அதற்காகச் செபிப்போம், செயல்களில் இறங்குவோம். இதில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது மகிழ்வைத் தருகின்றது. மேலும், அமேசான் முழுவதும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ள நிலையில், வருகிற அக்டோபரில் (6-27) நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றமும், அமேசான் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவுள்ளது. இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாகிய நாம் படைப்பைப் பாதுகாக்கும் நற்செயல்களை, யாராவது துவங்கட்டும் என்று காத்திராமல், உடனடியாகச் செயல்பட கடவுள் துணிச்சலை வழங்குவாராக என்று, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார். செப்டம்பர் 1, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியிலும், இப்பூமியின் அழுகுரலுக்குமுன், கடவுளின் படைப்பைப் பாதுகாப்பதற்கு நம்மை அர்ப்பணிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்,.

அமேசான் மழைக்காடுகள் மட்டுமன்றி, ஆப்ரிக்காவும், வருங்கால சூழலியலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. உலக அளவில் இடம்பெறும் பத்தாயிரம் காட்டுத் தீ நிகழ்வுகள், குறைந்தது 70 விழுக்காடு ஆப்ரிக்காவில் இடம்பெறுகின்றன என்று நாசா ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஒருவார காலக்கட்டத்தில், பிரேசிலின் தீ நிகழ்வுகளைவிட மூன்று மடங்கு அதிகமாக, அங்கோலா காடுகளில் இடம்பெற்றுள்ளது. அங்கோலாவில் ஏறக்குறைய ஆறாயிரம், காங்கோவில் மூவாயிரத்திற்கும் அதிகம் என, காடுகளில் தீ நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. எனவே அன்பு இதயங்களே, இயற்கையைப் பாதுகாத்து, பாதுகாப்பான ஒரு பூமியை வருங்காலத் தலைமுறைகளுக்கு விட்டுச்செல்வோம். அதற்கு நாம் வாழும் முறையை மாற்றுவோம். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டாமல், அவற்றைப் பாதுகாப்போம். நம் பூமிக்கோளத்தை மரணத்தை நோக்கி அல்ல, மாறாக, வாழ்வை நோக்கி இட்டுசெல்வோம்.

வாரம் ஓர் அலசல்–பூமிக்கோளத்தை, வாழ்வை நோக்கி...
02 September 2019, 15:17