தேடுதல்

Vatican News
காலநிலை மாற்றமும், உலக அமைதியும் காலநிலை மாற்றமும், உலக அமைதியும்  

வாரம் ஓர் அலசல் – காலநிலை மாற்றமும், உலக அமைதியும்

பனிப்பாறைகள் உருகுவது தவிர, உலகில் பல இடங்களில் காடுகளும் தீப்பற்றி எரிகின்றன. நம் வருங்காலத்தை எரித்துக்கொண்டிருக்கிறன. அமேசான் பருவமழைக் காடுகள் மட்டுமல்ல, ஆப்ரிக்காவின் காடுகள், ஈரான் காடுகள் போன்றவை அழியும் ஆபத்தில் உள்ளன.

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒரு நாள், ஓர் ஆசிரமத்தில் துறவி ஒருவர், தனது மாணவர்களுக்கு போட்டி ஒன்றினை அறிவித்தார். ஆனால், ஓவியப் போட்டிக்குரிய தலைப்பு, போட்டியின்போது அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மாணவர்கள் அனைவரும் மறுநாள் காலையில் ஓவியம் வரைவதற்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வகுப்புக்கு வந்தனர். அங்கு வந்த துறவி, அமைதி பற்றிய உங்கள் சிந்தனையை ஓவியமாக‌ வரையுங்கள் என்றார். மாணவர்களும் வரையத் தொடங்கினர். போட்டியின் இறுதியில் துறவி ஒவ்வொரு ஓவியமாகப் பார்வையிட்டார். ஒரு மாணவன், மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் அழகான ஓர் ஏரியை வரைந்திருந்தான். அந்த ஏரியில், மலையின் பிம்பம் அழகாக இருந்தது. மற்றொருவன் மலர்களை வரைந்திருந்தான். அந்த மலர்கள் உண்மையானவை போன்று உடனடியாகப் பறிக்கத் தூண்டியது. அந்த அளவுக்கு தத்ரூபமாக அந்த ஓவியம் இருந்தது. இன்னொருவன் அழகான அமைதிப் புறாக்களை வரைந்திருந்தான். அவற்றின் அழகு அனைவரையும் கவர்ந்திழுத்தது. இப்படி துறவியார் அதுவரைப் பார்த்த அத்தனை ஓவியங்களும் அழகாக வரையப்பட்டிருந்தன. கடைசியாக இருந்த மாணவனின் ஓவியத்தைப் பார்த்த துறவி அவனைக் கட்டியணைத்துக் கொண்டார். அந்த ஓவியத்தில், கடலில் வானம் கறுத்த மேகங்களுடன் இடி மின்னலுடன் மழையைப் பொழிகிறது; காற்றும் பலமாக வீசுகிறது. பறவைகள் பயத்துடன் பறக்கின்றன. அதேநேரம் கடலில் ஒரு கப்பல், நிதானமாக பிரச்சனைகளைச் சமாளித்து செலுத்தப்படுகிறது. இதைப் பார்த்த மற்ற மாணவர்கள், இந்த ஓவியம் தலைப்பிற்குத் தொடர்பு இல்லாமல் இருக்கிறதே என்று, கேள்விக்குறியுடன் பார்த்தனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த துறவி, இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது? என்றுதானே எண்ணுகிறீர்கள் என்று கேட்டுவிட்டு, அதில் புதைந்துள்ள பொருளை விளக்கினார். பிரச்சனையும், போராட்டமும் உள்ள இடத்தின் நடுவே இருந்துகொண்டு, எதற்கும் கலங்காமல், எதுவும் தன்னைப் பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே, உண்மையான அமைதி. எனவே இந்த ஓவியத்தில் நிதானமாக உள்ள கப்பல் பரிபூரணமான அமைதியில் இருக்கிறது (inidhu.com) என்று சொன்னார் துறவி.

காலநிலை மாற்றம்

இன்று உலகில் பெரும் பகுதிகள் அமைதியை இழந்து தவிக்கின்றன என்றால் அதற்குக் காரணம் மனிதரின் ஆசைகூட இல்லை, அது பேராசை, பேராசை. மனிதரின் பேராசையால்,நிலமும், நீரும்,அதில் வாழ்கின்ற பல்லுயிர்களும், மனிதர்களும், மொத்தத்தில், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியும் கடும் புதுப் புதுப் நோய்களால் துன்புறுகின்றன. அரியவகை பல்லுயிர்கள் அழிந்து வருகின்றன. உலகில் கடந்த நான்கு ஆண்டுகள், கடும் வெப்ப ஆண்டுகளாகப் பதியப்பட்டுள்ளன. 1990ம் ஆண்டிலிருந்து, ஆர்டிக் பனிக் கடல், குளிர்காலத்தில் வெப்பநிலை 3 செல்சியுஸ் டிகிரி அதிகரித்து, கடல்மட்டங்கள் உயர்ந்துள்ளன, பவளப் பாறைகள் அழிந்து வருகின்றன. காற்று மாசடைதல், வெப்பக்காற்று, மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையால், மனிதரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், புளோரிடா, மற்றும், கிழக்கு இங்கிலாந்து பகுதிகள், இந்த நூற்றாண்டில், கடல்மட்ட உயர்வால் அதிகம் பாதிக்கப்படவிருப்பவை. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு வடக்கேயிருந்து, ஆர்டிக் வரையுள்ள கிரீன்லாந்து தீவுப் பகுதியின் பனிப்படலம், உருகினால், வருங்காலத்தில் பெரு வெள்ளம் ஏற்படும் என்று என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஆனால், 2012ம் ஆண்டில், கிரீன்லாந்து, மொத்தமாக, ஏறத்தாழ 450 பில்லியன் டன்கள் பனிப்படலத்தை இழந்துள்ளது.

காடுகள் அழிவு

பனிப்பாறைகள் உருகுவது தவிர, உலகில் பல இடங்களில் காடுகளும் தீப்பற்றி எரிகின்றன. நம் வருங்காலத்தை எரித்துக்கொண்டிருக்கிறன என்று, தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவை கூட்டத்தில், அந்த அவையின் உயர் இயக்குனர் மிஷேல் பாஷ்லெ அவர்கள் கூறினார். அமேசான் பருவமழைக் காடுகள் மட்டுமல்ல, ஆப்ரிக்காவின் காடுகள், ஈரான் காடுகள் போன்றவை அழியும் ஆபத்தில் உள்ளன. 1900மாம் ஆண்டுக்கும், 2012ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஈரான் காடுகளில் ஒரு கோடியே 90 இலட்சம் ஏக்கர் முதல், ஒரு கோடியே 44 இலட்சம் ஏக்கர் பகுதி அழிந்துள்ளது. வறட்சியான ஈரானில், இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்குள், காடுகளே இல்லாத நிலை ஏற்படலாம் என வல்லுனர்கள் கூறுகின்றனர். 1980களில் நடந்த ஈரான்-ஈராக் போரில், ஜாக்ரோஸ் மலைகளில் மேற்குப் பகுதி காடுகள் அழிந்துவிட்டன. சுற்றுலாக்களும், காஸ்பியன் காடுகள் அழிவுக்குக் காரணமாகியுள்ளன. காடுகள் அழிக்கப்படுவதால், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், உலக அளவில் பசியால் மடிவோரின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது. உலகம் வெப்பமடைந்து வருவதால், ஊட்டச்சத்தின்மை, மலேரியா, வயிற்றுப்போக்கு, வெப்பத்தால் உண்டாகும் மனஉளைச்சல் போன்றவற்றால்,  2030க்கும், 2050ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மேலும் 2,50,000 பேர் இறப்பார்கள். காலநிலை மாற்றம், மனித உரிமைகள் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை உலகம் பார்ப்பதில்லை என, பாஷ்லே அவர்கள் அறிவித்தார். 1880ம் ஆண்டுக்கும், 2012ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகளாவிய வெப்பம், 0.85 செல்சியுஸ் டிகிரி அதிகரித்துள்ளது. 1981க்கும், 2002ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கடும் வெப்பத்தால், சோளம் மற்றும் முக்கிய தானிய உற்பத்திகள், ஆண்டுக்கு 40 மெகாடன்கள் குறைந்துள்ளன.

ஐ.நா. வின் உலக அமைதி நாள்

உலகின் இந்நிலையால், செப்டம்பர் 21, வருகிற சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் ஐ.நா. வின் உலக அமைதி நாளுக்கு, “அமைதிக்கு காலநிலை செயல்திட்டம்” என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 23ம் தேதி, காலநிலை மாற்றத்தைத் தடுப்பது குறித்த உச்சி மாநாடும், செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமை, இதே தலைப்பில் இளையோர் உச்சி மாநாடும், ஐ.நா. நிறுவன தலைமையகத்தில் நடைபெறவுள்ளன. 2016ம் ஆண்டில் அமலுக்குவந்த பாரிஸ் ஒப்பந்தப்படி, உலக அளவில் வெப்பநிலையை 2 செல்சியுஸ் டிகிரிக்குக் குறைவாகக் கொணர்வதாகும். 2018ம் ஆண்டு ஏப்ரல் நிலவரப்படி, 175 நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்தின. 168 நாடுகள், தேசிய அளவில் எடுக்கப்பட்ட திட்டங்களை ஐ.நா. நிறுவனத்திற்கு அறிவித்துள்ளன.

உலக அமைதி, காலநிலை மாற்றம்

உலக அமைதிக்கு, காலநிலை மாற்றம் எந்த விதத்தில் அச்சுறுத்தல் என சிந்திக்கலாம். காலநிலை மாற்றம், இன்று எல்லாக் கண்டத்திலும், எல்லா நாடுகளிலும், தேசியப் பொருளாதாரங்களையும், மனிதரின் வாழ்வாதாரங்களையும் பாதித்து வருகின்றது. ஆப்ரிக்காவில் சில பகுதிகளில் காடுகள் அழிக்கப்படுவது, மத்திய அமெரிக்காவில் மக்கள் கட்டாயமாக புலம்பெயர்வது, சிறு தீவு நாடுகளில் உருவாகும் வெப்பமண்டல புயல்கள், கடல்மட்ட உயர்வுகள் அல்லது, தண்ணீர் பற்றாக்குறைவால் ஏற்படும் போர்கள் என, எதுவாக இருந்தாலும், எல்லாமே காலநிலை மாற்றத்தோடு தொடர்புடையவை. ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதியில், வளங்களை அபகரிப்பது குறித்த போட்டியில், விவசாயிகளுக்கும், விலங்குகளை வைத்திருப்போருக்குமிடை.யே பதட்டநிலைகள் உருவாகின்றன. சாட் ஏரி பகுதியில் வறட்சியால் பொருளாதார வாய்ப்புகள் குறைகின்றன. பலரின் வாழ்வாதாரங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. இதனால் ஆயுதம் ஏந்திய குழுக்களாக இவர்கள் மாறுகின்றனர். வறட்சி, ஏழ்மை போன்ற காரணங்களால், மனித வர்த்தகமும், சிறார் உரிமை மீறல்களும் நடைபெறுகின்றன. காலநிலை மாற்றம், மனிதரின் வாழ்வாதாரங்களைப் பாதித்து வருவதால், தெற்கு மற்றும், கிழக்கு ஆசிய நாடுகளில், புரட்சிக் குழுக்கள், நக்சலைட் இயக்கங்கள் உருவாகின்றன. ஏழ்மையால் வாடுவோர் எளிதாக, அந்த குழுக்களில் சேர்ந்து விடுகின்றனர். அக்குழுவினரும், எளிதாக ஆள்களை தங்களோடு சேர்த்துக் கொள்கினறனர். மொத்தத்தில், காலநிலை மாற்ற அகதிகள் பலர் உருவாகின்றனர்.  நக்சலைட்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மக்களின் வாழ்வாதாரம் மேலும் மோசமடைகின்றது. உள்நாட்டுப் போர்கள் தீவிரமடைகின்றன. இந்நிலையில் அமைதி எப்படி நிலவும்?

இந்நிலையில் உலகை பேராபத்திலிருந்து காக்க இளையோரே முன்வந்து வயது வந்தவர்களுக்கு அறிவுரை சொல்கின்றனர். பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பர்க் என்ற சுவீடன் நாட்டுச் சிறுமி, ‘பருவநிலை காக்க பள்ளி வேலைநிறுத்தம்’ என்று சொல்லி வைத்துக்கொண்டு, சுவீடன் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்தார். எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ (#FridaysForFuture) என்று பெயரிடப்பட்டு கிரெட்டா தொடங்கிய இந்தப் போராட்டம், குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பருவநிலை மாற்றத்துக்கான போராட்டங்கள் உலகம் முழுவதும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. செப்டம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடக்க இருக்கும் ‘ஐ.நா.வின் பருவநிலை அவசர மாநாட்டில்’ கலந்துகொள்ள கிரெட்டாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கடங்கா ஆசை

மூங்கில் காட்டையே எரிக்கும். அதோடு தானும் எரிந்து போகும். ஆசை எனும் தீயும் அப்படித்தான். அனைத்தையும் அழிக்கும். அதோடு தன்னையே அழித்துக்கொள்ளும். ஆசை அடுத்தடுத்த ஆசைகளை ஆசைப்பட வைக்கும். ஆசைக்கு அடங்குதல் மாபெரும் பாவம். அடங்கா ஆசைகள், மிகப்பெரும் துயரம் என்று சொன்னார், லா ஓத் ஸூ. ஆசைகளை ஆசைப்படுபவர்கள் நடுவில் வாழ ஆசையே ஆசைப்படுமாம். எந்த ஆசையும் இதுவரை எவரையும் திருப்திபடுத்தியதே இல்லை. ஆசை தீர ஆற்றுப்படுத்தியதுமில்லை.  ஆம். திருப்தியின் திருப்தியைத் தெரிந்துகொண்டவரே திருப்தியான ஞானி (நெறிகாட்டும் ஆளுமைகள் – அ.பணி சேவியர் அந்தோனி சே.ச). பேராசையை ஒழித்து, நம் வருங்காலத் தலைமுறைகளின் நலனை மையப்படுத்தி வாழ்ந்தால், இந்தப் பூமி அமைதியின் சுவர்க்கமாக மாறும்.

14 September 2019, 15:55